Sunday, February 3, 2019

அவளில்லா அபிவிருத்தி!



நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுள் ஐந்தாவது இலக்காக வரையறுக்கப்பட்டிருக்கும் பால் நிலை சமத்துவத்தை அடைதலும் பெண்களை வலுவூட்டலும் என்ற இலக்குடன் இயற்கை வளங்கள் வெகுவாகத் தொடர்பு பட்டவை. இவ்விலக்கானது ஏனைய பல இலக்குகளை அடைவதில் பால் நிலை சமத்துவம் மட்டுமன்றி பெண்களின் பங்களிப்பையும் வரையறுத்து  நிற்கிறது. உதாரணமாக வறுமை ஒழிப்பு, உணவுப்பாதுகாப்பு, போஷாக்கு, என  சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது இவ்வைந்தாம் இலக்கு.
அந்த வகையிலே உலக உணவு விவசாய ஸ்தாபனத்திடம் மிக முக்கியமான பொறுப்பொன்று வழங்கப்பட்டிருக்கிறது.  பொருளாதார வளங்கள் மட்டுமன்றி காணி , ஏனைய சொத்துகள் , நிதிச்சேவைகள், பரம்பரைச் சொத்துகள், இயற்கை வளங்கள் யாவற்றின் மீதுமான உரித்து, அதிகாரம் ஆகியவற்றில்  தேசிய சட்டங்களுக்கமைய பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கக் கூடியவாறு சட்ட 
சீர்திருத்தங்களை உருவாக்குவதே அப்பொறுப்பாகும்.
உலகளாவிய ரீதியிலே பல நாடுகளில் பெண் விவசாயிகள், முயற்சியாளர்கள், தொழிலாளர்கள் ஆண்களுடன்  ஒப்பிடுகையில் உற்பத்தித்திறன் குறைந்தவர்களாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தைக் கண்டறிய விழைந்தபோது பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கின்றன.  ஏனெனில்  பொருளாதார வளங்கள் மீதான அதிகாரம்  ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு  மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றமையை  அவதானிக்க முடிந்திருக்கிறது.  உற்பத்தியைப் பொறுத்தவரையிலே ஆண்களுக்கு  கிடைக்கும் அதே பொருளாதார வளங்கள் மீதான அதிகாரம் பெண்களுக்கும் வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகரான வினைத்திறனுடன் பெண்களும் செயற்படுகின்றமையை ஆய்வு முடிவுகள் உறுதி செய்திருக்கின்றன.
பொருளாதார, நிதி வளங்களின் பால் நிலைப் பரம்பல் மீது மிக நீண்ட காலமாக நீடித்துவரும் சமத்துவமின்மை காரணமாக, அபிவிருத்தியில் பங்களிக்கின்றமை தொடர்பில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் பாதகமான நிலைமையையே எதிர் நோக்குகின்றனர்.
பால் நிலை சமத்துவம் தொடர்பில் வரையறுக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது இலக்கை அடைவதற்கு பொருளாதார வளங்கள், காணி உட்பட இயற்கை வளங்கள் மீது பெண்களுக்கு சமமான  உரித்தும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டியிருக்கின்றமை மிக அவசியமானதாகும். நாடொன்று நிலைத்து நிற்கக் கூடிய பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமாயின்  அதன் பொருளாதார வளங்கள் பகிரப்படும் தன்மையில் பால் நிலை சமத்துவம் காணப்பட வேண்டும். அவ்வாறு காணப்பட்டால் வறுமை ஒழிப்பு, வீட்டு அலகுகளின் நலனோம்பல், ஆரோக்கியம், போஷாக்கு போன்ற பல துறைகளில் பன் மடங்கு அபிவிருத்தி ஏற்படும் என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
 ஐந்தாவது நிலையான அபிவிருத்தி இலக்குகளின் அடைவுகளில் ஒன்று  ஒவ்வொரு நாடுகளும் எங் ஙனம் சீர்திருத்தங்களை உருவாக்கி  பொருளாதார வளங்கள், காணி உட்பட்ட இயற்கை வளங்கள், நிதிச் சேவைகள் ஆகியவற்றின் மீதான உரித்து, அதிகாரம் தொடர்பில் பெண்களுக்குசம உரிமையை வழங்கி அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கிண்றன என்பதை அளவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
காணி தொடர்பில் பெண்களின் உரித்து, அதிகாரம் ஆகியன பெண்களின் நலனோம்பல், உற்பத்தித்திறன், சமத்துவம், வலுவூட்டல் ஆகியவற்றில் அதிக பங்களிப்பைச் செலுத்துவனவாகப் பார்க்கப்படுகின்றன.  முரண்பாடுகளுக்கு ப்பின்னரான சமூகங்கள்,  விவசாய சமூகங்கள் மத்தியிலே காணி மீதான உரிமை, அதிகாரம் என்பவை பெண்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பு மட்டுமன்றி அவர்களை வறுமை வலையில் சிக்க வைக்காத தடுப்பாகவும் பார்க்கப்படுகின்றன.  அதிலும் சமூகப்பாதுகாப்பு நடைமுறைகள், சமத்துவமான தொழில் சந்தைகள் குறைவாக க் காணப்படும் பகுதிகளிலே காணி மீதான  அதிகாரம், உரித்தற்ற பெண்கள் பாதிக்கப்படும் தன்மை அதிகம் உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர்.
காணி மீது பெண்ணுக்கு அதிகாரமும் உரித்தும் கிடைக்கப்பெறுதலானது அவள் உறுதி மிக்க வலுவூட்டலுடன் கூடியவளாக மாறுகிறாள்.  ஆண் துணை மீதோ அல்லது ஏனைய உறவினர் மீதோ அவள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படாது விடுகிறது.  வீட்டு அலகினுள்ளே அவளது பேரம் பேசும் திறன் அதிகரிக்கிறது. ஆதலினால் ஏனைய உற்பத்தித்திறன் மிகு வளங்களையும் நிதிச் சேவைகளையும் கூட அவளால் இலகுவாகப் பெற முடிகிறது.  காணி உரித்து கிடைக்கப்பெறுவதால் அவளிடம் உருவாகும் நம்பிக்கையுணர்வு அவளது முயற்சியாண்மைத் திறனை அதிகரிப்பதோடு மட்டுமன்றி விரிவடையவும் செய்கிறது. ஆதலினால் அவளால் உற்பத்தி சார், கூட்டுறவு சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அபிவிருத்திக்கு பங்களிக்க முடிகிறது.
காணி மீதான உரிமை, அதிகாரம் என்பன மனித உரிமைகளானவை. இங்கு   மனித உரிமைக்கும் அடிப்படை உரிமைக்குமான வேறுபாட்டை நாம் பார்க்க வேண்டும் . ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட உரிமைகள் யாவும் மனித உரிமைகள் எனப்படுவன. அவ்வுரிமைகளுள் இலங்கையின் அரசியல் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படுவன. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு ஒருவர் முறைப்பாடொன்றை அனுப்புகிறார் எனக் கொள்வோம்.  அவரது முறைப்பாடு இலங்கையின் அரசியலமைப்பினால் வரையறுக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகளுள் எவற்றையேனும் ஆட்சித்துறை மீறியிருக்கிறதா என்பதையே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரீட்சிக்கும். இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கமைய உயிர் வாழும் உரிமை அடிப்படை உரிமையாக க் கருதப்படவில்லை. அந் நிலையில் அவ்வுரிமை மீறப்பட்டமைக்கு எதிராக எந்தவொரு முறைப்பாட்டையும் இலங்கையின் பிரஜையொருவர் முன் வைக்க இயலா த நிலை காணப்படும்.
அதே போல  2016 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் தகவலறியும் உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படிருக்கவில்லை. இந்நிலையில் பொதுத் தகவல் ஒன்றுக்கான விண்ணப்பதாரின் அணுகல் கோரிக்கை மறுக்கப்படும் போது அவரால் எங்கும் சென்று முறைப்பாட்டை மேற்கொள்ளவோ வழக்குத் தொடரவோ இயலாதே நிலையே காணப்பட்டது. ஆயினும் இலங்கையின்  அரசியல் அமைப்பின் 19 ஆவது சீர்திருத்த த்தின் 14 (அ) உறுப்புரைக்கமைய தகவல் அறியும் உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
சிவில், அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச கூட்டு உடன்படிக்கையின் மூன்றாவது சரத்து ஆண், பெண் இரு பாலருக்குமிடையிலான சமத்துவத்தை உறுதி செய்கிறது. இரண்டாவது சரத்தோ  அதனடிப்படையிலான பாரபட்சங்களைத் தடை செய்கிறது. இருபத்து ஆறாவது சரத்தோ, சட்டத்தின் முன்னே யாவரும்  சமம் என்பதை வலியுறுத்துகிறது.
இவ்வுடன்படிக்கையில் பெரும்பாலான நாடுகள் கைச்சாத்திட்டிருக்கின்ற போதும்  சொத்தொன்றின் அல்லது இயற்கை வளமொன்றின் மீதான உரித்து, அதிகாரம் தொடர்பில் உலகின் பல பிராந்தியங்களிலும் பாரியளவிலான பாரபட்சங்கள் காணப்படுவதாகவே  ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன.
உலக விவசாய ஸ்தாபனத்தின் பால் நிலை, காணி உரிமைத் தரவுத்தளத்தில் உள்ள உலக நாடுகள் அனைத்திலும் காணி உரித்துடைய ஆண்களை விட பெண்கள் கணிசமானளவு குறைவாகவே காணப்படுகின்றனர். அதேவேளை விவசாயக்காணியின் உரித்து எனக் கருதும் போது  பெண்கள் சிறிய விஸ்தீரணமுடைய தரம் குறைந்த நிலங்களையே உடைமையாக க் கொண்டிருக்கின்றமையையும் ஆய்வுகளால் அவதானிக்க முடிந்திருக்கிறது.   ஆண்வழிச் சமூகமான பாரம்பரியத்தைக் கொண்ட பிரித்தானிய காலனித்துவ ஆட்சியுடன் இலங்கையின் காணிச் சட்டங்களும் வளர்ச்சியடைந்தன என்றே கூறவேண்டும்.
இலங்கையிலே 80 சதவீதத்துக்கும் அதிமான காணிகள் அரச காணிகளாகவே காணப்படுகின்றன என்பதை நாம் கடந்த வாரம் பார்த்தோம். நகர எல்லைகள் தவிர்த்து பிரதேச சபை எல்லைகளுக்குள் அமைந்திருக்கும் அத்தகைய காணிகள் பெரும்பாலும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தினூடாகவே ஏறத்தாழ 7 தசாப்தங்களுக்கும் மேலாக காணியற்றோருக்கு பல்வேறு நோக்கங்களுக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் உரித்தாவணம் வழங்கப்பட்ட காணியொன்றின் உரித்தாளருக்கு மூன்றாம் அட்டவணை எனப்படும் அட்டவணைக்கமைய தான் விரும்பும் ஒருவரையோ அல்லது தனது வாழ்க்கைத்துணையையோ பின்னுரித்தாளராக நியமிக்க இயலும். அவர் அவ்வாறு நியமிக்காமல் இவ்வுலகை நீத்தால், அவரது வாழ்க்கைத்துணைக்கு அக்காணியின் நன்மைகளை அனுபவிக்க க் கூடிய வகையிலான சீவிய உரித்து கிடைக்கும் வகையில் சட்டம் இடமளிக்கிறது. ஆயினும் அக்காணியின்  பூரண உரித்து தொடர்பில் மூன்றாம் அட்டவணைக்கமைய உரிமை மாற்றம் மேற்கொள்ளப்பட சட்டம் அனுமதியளிக்கிறது. இங்கு பால் நிலை பாரபட்சம் காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.ஏனெனில்  மூன்றாம் அட்டவணையில் முதல் நிலையில் இருப்பவர்கள் ஆண்பிள்ளைகளே. இத்தகைய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபரொருவர் பின்னுரித்தாளரை நியமிக்காமல் இறந்து போனால், அவரது முதலாவது ஆண்பிள்ளையே காணிக்கு உரிமையாளராக இயலும். மூத்த பிள்ளைகள் பெண்பிள்ளைகளாக இருந்து கடைசிப் பிள்ளை ஆண்பிள்ளையாகிலும் ஆண்பிள்ளைக்கே காணி மீதான உரிமை கிடைக்கப்பெறும்.  
கணவனை, பிள்ளைகளை யுத்த்திலே இழந்த பெண்ணொருவர் தனக்கான காணியின் பூரண உரித்தை இச்சட்டத்தின் கீழ் உறுதி செய்ய இயலாதவராகவே காணப்படுவார். காணியின் பூரண உரித்தானது உரிமையாளரான கணவரின் சகோதரர்களுக்கோ அல்லது பெறாமக்களுக்கோ தான் பகிரப்படுமே தவிர வாழ்க்கைத்துணைக்கல்ல. காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டமானது காணி மீதான உரித்து, பால் நிலை சமத்துவம் தொடர்பில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான சிறு உதாரணம் மட்டுமே.



பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த பல நாடுகளில் இயற்றப்பட்ட பல சட்டங்களில் இத்தகைய பாரபட்சங்கள் காணப்படத்தான் செய்கின்றன. காலத்துடன் கொள்கைகள் மாற மாற இச்சட்டங்களையும் இற்றைவரைப்படுத்த பல அபிவிருத்தியடைந்த நாடுகள் தவறி விடுகின்றன. இத்தகைய சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதில் ஏற்படும் தாமதங்கள் கூட நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலும் தாமதங்களை ஏற்படுத்தும்.
சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாக அலகுகளிலே பால் நிலை சமத்துவத்தைப் பேணும் வகையிலே, பெண்ணுக்கான சொத்தின் மீதான உரித்தை உறுதி செய்யும் வகையிலே தீர்மானங்களை மேற்கொள்ள அலுவலர்கள் பயிற்றப்பட வேண்டும். தமக்கான உரித்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் வல்லமை மிக்கவர்களாக பெண்களும் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.
 அபிவிருத்திக்கான உரிமை என்பது கூட மனித உரிமையாகவே பார்க்கப்படுகிறது. இது பொருளாதார அபிவிருத்தியை மட்டும் குறிக்கும் சொற்றொடர் அல்ல. இயற்கை வளங்கள் மீதான அதிகாரம், சுய ஆட்சி, அபிவிருத்திக்கான அர்த்தமுள்ள பங்களிப்பு, சம வாய்ப்புகளும் பாரபட்சமின்மையும், சகல மனித உரிமைகளையும் அனுபவித்தல் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அபிவிருத்திக்கான உரிமை பார்க்கப்படுகிறது.   நாடொன்றின் அபிவிருத்தியின் அடிப்படை அலகு வீடாகும். ஆதலினால் அபிவிருத்தியின் மையமாக பெண்களே கருதப்படுகின்றனர். அவ்வபிவிருத்தியில் பெண்கள் பங்களிக்கும் போது கிடைக்கும் நன்மைகள் பல மடங்கானவை என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. காணி உட்பட்ட இயற்கை வளங்கள் மீதான உரித்து உறுதிப்படுத்தப்படாமல் அபிவிருத்தியிலே பெண்களின் பங்களிப்பை எதிர்பார்க்க இயலாது! அத்தகைய நிலை நாட்டின் மீதான சுமைகளை அதிகரிக்குமே தவிர, அபிவிருத்தி சார்ந்து நாட்டை முன்னகர்த்தாது என்பது கண்கூடு!

No comments:

Post a Comment