Sunday, February 3, 2019

ஆட்சியில்லா அபிவிருத்தி!




இலங்கையிலே ஆட்சி பற்றியும் நல்லாட்சி பற்றியும் அறியாதவர் எவருமிலர் எனலாம். இப்பதங்கள் அவற்றின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தினவா இல்லையா என்ற  வினாக்களுக்கப்பால் அரசுடன் தொடர்புடையவை என்பதில் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையிடமும் விழிப்புணர்வு காணப்படுகிறது.

சட்ட விதிகளை அடிப்படையாக க் கொண்ட சமாதானமும் நிலையான தன்மையும் மனித உரிமைகளும் விளைதிறன் மிக்க  ஆட்சியும்  இல்லாத நாடொன்றில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளில் அடைய முடியும் என எதிர்பார்க்க முடியாது. பொதுவாக பெரும்பாலானஅபிவிருத்தியடைந்துவரும்  நாடுகள் இவ்விடயங்கள் தொடர்பில் பின் தங்கிக் காணப்படுகின்றன. ஆதலினால் தான் இத்தகைய நாடுகளில் ஐ. நா வுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள்  சமாதானமும் நல்லிணக்கமும் என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வேறு  அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இந் நிலையில் ஆட்சிக்கும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுக்குமான தொடர்புகள் பற்றி நாம் ஆராய முன்னர் சில சொற்பதங்கள் வெளிப்படுத்தி நிற்கும் கருத்துகள் பற்றி  அறிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் எனப்படுவது யாதெனில், அது நாடொன்றை கொண்டு நடத்தும், நிர்வாகம் செய்யும் தரப்பினரை அல்லது பிரதி நிதிகளைக் கொண்ட குழுவைக் குறிக்கும் பதமாகும். ஒரு நாட்டின் வலுவானது பிரயோகிக்கப்படுவது இத்தரப்பினூடாகவேயாகும். அவ்வரசாங்கம் ஜன நாயகம் மிக்கதாகவோ அல்லது ஜன நாயகமற்றதாகவோ  இருக்க முடியும். ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் போது அது மீண்டும் மீண்டும் ஆட்சியில்  நிலைத்து நிற்கும்  சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உரிய சட்ட திட்டங்களுக்கமைய, அரசாங்கத்தில் உள்ள பிரதிநிதிகளால் நாடு வழி நடத்தப்பட்டுச் செல்கின்றமையை  ஆட்சி எனப் பொருள் கொள்வர். ஆட்சி என்ற இக்கோட்பாடு அரசாங்கத்துக்கு மட்டும் பொதுவானதல்ல. எந்தவொரு நிறுவனத்திலும் இந்த ஆட்சி என்ற கோட்பாட்டை பிரயோகிக்க இயலும். இக்கருத்தை மிகவும் எளிமைப்படுத்தினால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆட்சி எனப்பொருள் கொள்ளலாம்.  தான் அடைய வேண்டிய இலக்கை சில விதிகளைப் பின்பற்றி சிறந்த பெறுபேறு கிடைக்கும் வகையில் அடைதலே  ஆட்சியின் மிக முக்கிய நோக்கமாகும். இத்தகைய ஆட்சியை மேலும் சில கோட்பாடுகளின் அடிப்படையில் நடத்திச் சென்று இன்னும் சிறப்பான அடைவுகளை அடைதலை நல்லாட்சி என்பர்.

நாம் வாழும் உலகம் பரந்து பட்டது. ஏற்றத்தாழ்வுகள்  நிறைந்தது. சில பிராந்தியங்கள் நிலைத்து நிற்கும் சமாதானத்தையும் சுபிட்சத்தையும்  பாதுகாப்பையும் அனுபவிக்கின்றன. மாறாக ஏனைய பிராந்தியங்களோ வன்முறைகளையும் முரண்பாடுகளையும் எதிர் நோக்குகின்றன. வேறு சில பிராந்தியங்களோ வன்முறைகளிலிருந்து மீண்டெழுந்து  நிலைத்து நிற்கும் சமாதானத்தையும் சுபிட்சத்தையும் நோக்கி நடை பயில ஆரம்பித்திருக்கின்றன.  ஆதலினால் உலகளாவிய ரீதியிலே ஒவ்வொரு நாடும் நிலைத்து நிற்கும் சமாதானத்துக்காகவும் சுபிட்சத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளது.

ஆயுத முரண்பாடுகளும் பாதுகாப்பற்ற நிலைமையும் காணப்படும் நாடுகள் அபிவிருத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றமையை  பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இந்த மந்த நிலை பல சந்ததிகளுக்குத் தொடர்ந்த வரலாறுகளும் இவ்வுலகில் இல்லாமலில்லை.

பால்முறை வன்முறைகள், குற்றங்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகள் நிறைந்து காணப்படுகின்றமையானது அந் நாட்டில் இருக்கின்ற சட்ட விதிகள் உறங்கு நிலையிலோ அல்லது சட்ட விதிகள் இல்லாத நிலைமையையோ வெளிப்படுத்துவதாக  ஐ. நா குறிப்பிடுகிறது. ஆதலினால் ஒவ்வொரு நாடும் தனது பிரஜைகளுள் அதிக அபாயத்தை எதிர் நோக்குபவர்களை மிக முக்கியமாக க் கருத்தில் கொண்டு பாதுகாக்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளின் வகி பாகம் வெளிப்படுகிறது.

எல்லா வகையான வன்முறைகளையும் வெகுவாக க் குறைப்ப தையும் அரசாங்கங்களுடனும் சமூகங்களுடனும் இணைந்து வேலை செய்வதன் மூலம் பாதுகாப்பின்மைக்கும்  முரண்பாடுகளுக்கான நிலைத்து நிற்கக் கூடிய தீர்வைக் கண்டு பிடிப்பதனையும்  நோக்காக க் கொண்டு பதினாறாவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கு வகுக்கப்பட்டிருக்கின்றது.  சட்ட விதிகளை வலுப்படுத்தி மனித உரிமைகளை உறுதி செய்யப்பட ஏதுவான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமே இப் பதினாறாவது இலக்கை அடைய முடியும்.  அது மட்டுமன்றி இவ்விலக்கை அடைய வேண்டுமாயின் சட்ட விரோத ஆயுதங்களின் நகர்வைக் கட்டுப்படுத்துவதோடு  சர்வதேச  நிறுவனங்களில் ஆட்சியில் அபிவிருத்தியடைந்து வரும்  நாடுகளின் பங்களிப்பையும் அதிகரிப்பதாலும் இவ்விலக்கை அடைய இயலும். 

நிலையான அபிவிருத்தி இலக்குகளைப் பொறுத்தவரையிலே ஆட்சியென்பது இரு பொருள் கொள்ளப்படுகிறது.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான செயற்பாடுகளுக்காக, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக, அவற்றை மீளாய்வு செய்வதற்காகத்துணை புரியும் ஆட்சியும் கட்டமைப்புகளின் ஒழுங்கமைப்பையும் குறிப்பது முதலாவதாகும்.  ஒவ்வொரு நாடும்  நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கான தனது உடன்பாட்டை தெரிவித்து மீண்டபோதும் அது எவரோ உருவாக்கிய கோட்பாடு என்று கருதாமல் ஒவ்வொரு இலக்கும் தன்னுடைய நாடும் அடைய வேண்டிய, தனது நாட்டுக்கான இலக்கு என்று கருத வேண்டுமாயின் அவ்விலக்குகளை அடைவதற்கு சாத்தியமான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.  அதற்கு இவ்வகை ஆட்சிக் கோட்பாடு துணை புரிகிறது.

அந்த வகையிலே இலங்கையிலும் சாத்தியமான சூழல் உருவாக்கப்பட்டு மேலும் முன்னேற்றப்பட்டு வருகிறது.  நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கெனத் தனியாக அமைச்சொன்று உருவாக்கப்பட்டது நிலைத்து நிற்கும் அபிவிருத்திச் சட்டம் .  2017 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தினூடு சகல வரிசை   அமைச்சுகளும் திணைக்களங்களும் தமக்கான நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடையும் திட் டத்தை வகுக்க வேண்டியமை கட்டாயமாக்கப்பட்டது. நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுடன் இயைந்து செல்லும் வண்ணம் தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்பட்டு வருகின்றன.  தேசிய மதிப்பீட்டுக் கொள்கைக்கமைய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கினால் வகைக் குறிக்கப்படும்  ஆட்சி எனப்படுவது இரண்டாவதாகும்.  இவ்விரு பொருள் கொள்ளல் களும் கூட  ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளின் அழகும் அதுவே!

ஆட்சி என்ற எண்ணக்கரு  தனியானதொரு இலக்காக க் கொள்ளப்படுகின்ற போதும் அது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகள் ஒவ்வொன்றுடனும் பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகிறது. ஆட்சியின்றி எந்தவொரு இலக்கையும் அடைதல் சாத்தியமன்று. ஏனெனில் நிலைத்து  நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த ஆட்சியால் மாத்திரமே இயலும்.

இவ்வாட்சியானது நல்லாட்சியாக மாத்திரம் இருந்து பயனில்லை. அது விளைதிறன் மிக்கதாகவும் சமத்துவம் மிக்கதாகனும் காணப்பட வேண்டும். நல்லாட்சிக் கோட்பாடினுள் விளைதிறனும் சமத்துவமும் அடக்கப்பட்டிருந்தாலும் அவற்றைத் தனித்தனியாகப் பார்த்தல் தகும் எனக் கருதுகிறேன்.

நல்லாட்சி எனக்கருதுகையில் தீர் மானங்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் அவற்றிற்கான சட்ட , நிர்வாக க் கட்டமைப்பையும் அது குறிப்பதாக அமைகிறது. மிலேனியம் வெளிபடுத்துகை தொட்டு சர்வதேச கட்டமைப்புகள், செயற்பாடுகளின் கொள்கைகள், செயற்றிட்டங்கள் யாவற்றிலும்  நல்லாட்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பங்களிப்பு, யாவரையும் உள்ளடக்கும் தன்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறும் தன்மை, தகவலுக்கான அணுகல் போன்ற பல பெறுமானங்களை இத்  நல்லாட்சிக் கோட்பாடு தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.  ஊழலை ஒழித்தல், அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல் , சட்ட விதிகளை மீறாது செயற்படல் என்பனவும் நல்லாட்சிக் கோட்பாடு முக்கியத்துவம் செலுத்தும் விடயங்களாவன.

பதினாறாவது இலக்கானது நல்லாட்சிக்கேகோட்பாட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  அபிவிருத்திக்கான நிதி வழங்கலில் நல்லாட்சிக்கோட்பாட்டைப் பின்பற்றலென்பது  என்பது ஒரு நிபந்தனையாகவே முன்வைக்கப்படுகிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்  இக்கோட்பாட்டை தாமாகவே நடைமுறைப்படுத்துவதில் பல இடர்பாடுகளையும் நிதி நெருக்கடிகளையும் எதிர் நோக்குவதால் இத்தகைய நிபந்தனைகள் நன்மை பயப்பனவாகவும் அமைந்து வித் தவறுவதில்லை.

விளை திறன் மிக்க ஆட்சியென்பது  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை மிக்க  அரசாங்கங்களை உருவாக்குவதுடன் தொடர்புபட்டதாகும்.   அரசாங்கத்தில் உள்ள கட்டமைப்புகளின் இயலளவு, தொழில் நுட்பம், சிறப்புத்தேர்ச்சி, நிதி வளங்கள் ஆகியவற்றுடனும்  நீண்ட காலத்திட்டமிடலுடன் இணைந்து ஒன்றுடனொன்று தொடர்பு பட்ட பிரச்சினைகளைக் கையாளும் வல்லமையுடனும் தொடர்பு பட்டதே  விளைதிறன் மிக்க ஆட்சியாகும். மாறாக பலரும் கருதுவது போல் வெறுமனே சட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் மட்டுமே பின்பற்றும் ஆட்சி விளைதிறன் மிக்க ஆட்சியாகாது. அதேவேளை எந்தவொரு கட்டத்திலும் ஆட்சியானது  சட்ட விதிகளை மீறாமல் இருக்கின்றமை உறுதி செய்யப்பட வேண்டும்.

சமத்துவமான ஆட்சியென்பது  பரந்துபட்ட விளைவுகளையும் வறுமைக் கோட்டுக்கு க் கீழ்ப்பட்டவர்கள் தொட்டு ஒதுக்கப்பட்டவர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான பராமரிப்புகளையும் கருத்தில் கொண்டதாகும். அல்லாவிடில் ஆட்சி எத்துணை நல்லதாக இருந்தாலும் விளைதிறன் மிக்கதாக இருந்தாலும் பயனற்றுப் போனதொன்றாகவே அதனைக் கருத முடியும்.  நாடளாவிய ரீதியிலே முடிவுகளை மேற்கொள்வதற்கும்  சமத்துவத்தின் தேவை மிகுந்த இவ்வுலகிலே உலகளாவிய ரீதியில் முடிவுகளை மேற்கொள்வதற்கும்  சமூகங்கள் மத்தியிலே செல்வமும் வளங்களும் சந்தர்ப்பங்களும் பரம்பிக் காணப்படுவதற்கும் இச் சமத்துவமான ஆட்சி உறுதுணை புரியும்.  இம்மூவகை ஆட்சிக் கோட்பாடுகளும் ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவை மட்டுமன்றி நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுடனும் பின்னிப் பிணைந்தவை.  ஒவ்வொரு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதிலும் ஆட்சியின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளாவிடில் அவ்விலக்குகளை அடைவதற்கான பங்களிப்பை எம்மால் மேற்கொள்ள இயலாது போய்விடும்.

இங்கு ஆட்சியை நடத்துபவையாக சட்டவாக்கத்தை மேற்கொள்ளும் நிறுவங்களையும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களையும் கருதமுடியும். உங்கள் அருகிலிள்ள ஒவ்வொரு அரச திணைக்களமும் அமைச்சும் உள்ளூராட்சி  உட்பட்ட அதிகார சபைகளும் கூட மேற்குறிப்பிடப்பட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களேயன்றி  வெறுமனே அதிகாரத்தைப் பிரயோகிக்கும் நிறுவனங்களல்ல. குறிப்பாக அரச நிர்வாக இயந்திரத்தின் பங்காளிகளான இந்த நிறுவனங்கள் என்ன அடிப்படையில் இயங்குகின்றன என்பது பற்றிய தெளிவு எம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது!

1 comment:

Anonymous said...

Good advice

Post a Comment