Monday, December 5, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் - 09


பராமரிப்பும் கவனிப்பும் இல்லாமல்
 அழிந்து போன வீடுகள் அதிகம்



யாழ்ப்பாணத்தின் வேலி மாதிரிகள், கடந்த கால நினைவுகளை மீட்க உதவின என்றால் மிகையில்லை. அடுத்த தொகுதி புகைப்படங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்திலே தொட்டக் காலத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகளின் மின் பிரதிகள் அச்சிடப்பட்டு பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன. இந்து சாதனம் தொட்டு எண்ணற்ற பத்திரிகைப் பிரதிகளைக் காண ஆச்சரியமாகத் தான் இருந்தது.
இது ஊடகத்துறை மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாய் அமைந்திருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இன்று கணினி இருப்பதால் உள்ளத்தில் நினைப்பதைத் தத் ரூபமாக வடிவமைக்க முடியும். பத்திரிகையின் பக்கம் தயாராகி விடும். தேவையானால் சேர்க்கலாம். வேண்டாவிட்டால் நீக்கலாம். ஆனால் அச்சுக்கலை தொடக்கப்பட்ட காலம் தொட்டு அத்துறையில் கணினிகள் அறிமுகமாகும் வரை நினைத்தபடி மாற்றும் வடிவமைப்புகள் சாத்தியம் குறைந்தனவாகவே இருந்தன.
அத்தகைய காலங்களிலும் கூட உடனடிச் செய்திகளைத் தாங்கி வெளிவந்த அந்தப் பத்திரிகைகளைப் பார்க்க கிடைத்ததே ஒரு கொடுப்பினை என்று தான் கூற வேண்டும். அந்தந்தக் காலத்து மொழி நடை, பக்க வடிவமைப்பு நுட்பங்கள், செய்திகளின் தன்மைகள் என அவற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவை தாங்கிய செய்திகள் எம் கடந்த கால வரலாற்றைக் கூறுகின்றனவோ இல்லையோ, அச் செய்திகளின் தன்மை நாம் கடந்து அந்த வரலாற்றின் அடிப்படையைக் கூறும்.
அதேபோல மற்றொரு பகுதியிலே யாழ்ப்பாணத்து பெரியார்களின் உருவப்படங்கள் பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்கு தேடியும் கிடைக்காத அந்த அரிய படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தமையானது உண்மையில் ஒரு சிறந்த முயற்சி என்றே கூற வேண்டும்.
அதேபோல பழைமையான யாழ்ப்பாணத்து பாடசாலைகளின் முகப்புகளின் தோற்றங்களும் புகைப்படங்களாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. யாழ். மண்ணிலே ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தமையால் பல துறைகளிலும் அவர்களின் செல்வாக்கு காணப்பட்டது.
அவர்களது என்பதை விட அவர்களது நாட்டின் செல்வாக்கு என்று கூறுதல் சாலப் பொருந்தும். யாழ்ப்பாணத்து நாற்சார் வீடுகள் மிகப் பிரபலமானவை. அவற்றைப் பற்றி விபரிக்க முயன்றால் இந்த பக்கம் போதுமா எனத் தெரியவில்லை. ஆரம்பகாலங்களில் திண்ணைக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகள் பின்னர் காலனித்துவ ஆட்சிக்காரரின் பாரம்பரியங்களையும் உள்வாங்கி மெல்ல மெல்ல பரிணமித்தன என்று கூறலாம்.

மிகவும் தொன்மையான வரலாறுடைய யாழ்ப்பாணக் கோட்டையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றும் நிலைத்து நிற்பதைக் காணமுடியும். கோட்டையைச் சூழவுள்ள பிரதேசம் முழுவதும் வரலாற்று மணம் வீசுவதற்கு இந்த ஒல்லாந்து காலக் கட்டடங்கள், வீடுகளும், ஒரு காரணம் எனலாம். அப்பகுதியில் மட்டுமன்றி பல பகுதிகளிலும் அத்தகைய காலனித்துவ காலக் கட்டடங்கள் காணப்படுகின்றன. நல்லூர், ஆனைக் கோட்டை போன்ற பிரதேசங்கள் அவற்றுள் சிலவாகும். சில ஊர்களுக்குச் சென்றால் பெரும்பாலான கட்டடங்கள் காலனித்துவ காலத்தவையாகவே இருக்கின்றன. இந்த கட்டடங்களையெல்லாம் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி பாராட்டுதற்குரியது.
இக் கட்டடங்கள் பிரமாண்டமானவை. இவற்றின் ஒரு தளமானது நவீன கட்டடமொன்றின் இரு தளங்களின் உயரமுடையதாக இருக்கும். வீடுகளின் அறைகள், விறாந்தைகள் எல்லாம் மிகவும் விசாலமானவை, மக்கள் முன்னைய காலங்களிலே கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். பெரிய வீடும் அவசியமாக இருந்தது. வீட்டிலே நிறைய அங்கத்தவர்கள் இருந்தமையால் பராமரிப்பும் கடினமாகத் தெரியவில்லை.

ஆனால், இன்றைய நிலைமையோ தலை கீழானது. கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தனிக் குடும்பங்களிலும் ஒரு சில அங்கத்தவர்களே யாழில் வாழ்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோரின் பார்வையிலே இந்த பழைமையான வீடுகள் பெருஞ்சுமைகளாகவே தெரிகின்றன.
போரினால் சிதைந்த வீடுகளை விட, கவனிப்பாரின்றி, போதிய பராமரிப்பின்றி சிதைந்து போன வீடுகளே அதிகம் எனலாம். அவற்றைப் பராமரிப்பதொன்றும் இலகுவான காரியமுமல்ல. இரு நவீன வீடுகளைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை விட இந்த காலனித்துவ கால வீடுகளைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாகும். அத்துடன் நவீன மோகத்தின் இந்த பழைமையான வீடுகள் செயலிழந்து செல்லாக்காசாகி விடுகின்றன என்பது தான் பொதுவான உண்மை. ஆயினும் கூட, காலனித்து காலத்துவ வீடுகளின் மதிப்பை உணர்ந்து அவற்றைப் பேணிப் பாதுகாத்து வருபவர்களும் இல்லாமல் இல்லை. இளஞ் சந்ததியினருக்கு அந்த வீடுகளின் அருமையைத் தெரிய வைத்தாலன்றி வேறு எந்த வகையிலும் அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாதென்பது நிதர்சனம்.
அந்த உன்னதமான பணியை இந்த யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி செய்திருக்கிறது என்று தான் கூறவேண்டும். நாற்சார வீட்டில் வசிப்பதன் சுகம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். சுகமான அனுபவம் என்று கூறுதல் தகும்.
இவை தவிர தொல்லியல் திணைக்களத்தின் துணையுடன் வட மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகள்,அவற்றிலே கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் போன்றனவும் கூட ஆவணப் பதாகைகளாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதுவரை நாம் பார்த்தவை யாழ். கண்காட்சி பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையே! கண்காட்சியில் இருந்த பல விடயங்கள் இங்கு தவற விடப்பட்டும் இருக்கலாம். ஆயினும் இக்கட்டுரைத் தொடர் ஒரு பொதுவான எண்ணப்பாட்டை வழங்கியிருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
இம்முறை கண்காட்சியைத் தவற விட்டவர்கள் எதிர்வரும் காலங்களிலும் தவறவிட்டு விடக் கூடாதே என்ற நல்லெண்ணமும் எம்மவரின் தொன்மை மிகு வாழ்வியலை இளஞ்சந்ததி உணர வேண்டும் என்பதுவுமே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கமாகும்.
கண்காட்சி நடைபெற்ற அதேவேளை ஆய்வரங்கும் நடைபெற்றிருந்தது. தமிழ், ஆங்கில மொழிகளிலான ஆய்வுக்கட்டுரைகள் பலவும் சமர்ப்பிக்கப்பட்டன. அவை விரைவில் புத்தகமாக வெளியிடப்படும் என பேராசிரியர் புஷ்பரட்ணம் குறிப்பிட்டிருந்தார். வரலாற்று ஆய்வு என்ற எல்லைக்குள் இன, மத, மொழி பேதம் இல்லை என்ற உண்மை ஆய்வரங்கில் தெளிவானது.
ஆனைக்கோட்டை முத்திரை உட்பட, யாழ்ப்பாணத்து தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட சகோதர இனத்தவர்களையும் இங்கு குறிப்பிடவேண்டும். கடந்த மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த யுத்தமானது எம்மவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்கி விட்டது என்று தான் கூற வேண்டும். கண்காட்சியில் கண்ட சில விடயங்கள் அதைப் பிரதி பலித்தன. யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மைச் சமூகத்தின் மொழியாற்றல் தமிழுக்குள் மட்டும் முடக்கப்பட்டு விடக் கூடாது என்பது பலரின் அவாவாக இருக்கிறது. ஆங்கிலத்துக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டால் தொடர்பாடல் திறன் விருத்தியும் சிறப்பாக இருக்கும். அதேவேளை வெளிப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்பு மேம்படுத்தப்பட வேண்டும். மாணவர் பரிமாற்ற செயற்றிட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உலக வரைபடத்தைப் பொறுத்த வரையிலே இலங்கை ஒரு சிறு புள்ளி, அதிலே ஒரு சிறிய பகுதி தான் வட மாகாணம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எமது எல்லையைக் குறுக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம். அந்த உண்மையை இக் கண்காட்சியின்போது காணக்கூடியதாக இருந்தது.
எம்மவரின் அடிப்படை மனப்பாங்கு மாற வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை தான். ஆனால் அதற்குள் வெளியுலகு எம்மைப் புறந்தள்ளி ஒதுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தும் திறன், அம்முடிவுகள் கணினி மென்பொருள் மூலம் வெளிப்படுத்தப்படும்போது அவை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்கள் தொடர்பிலே நவீன விடயங்கள் அறியப்படவேண்டும். பல செயற்றிட்டங்கள், விரிவுரைகள் நடாத்தப்பட்டு அவை தொடர்பிலான பயிற்சி பல்கலைக்கழக சமூகத்துக்கு வழங்கப்படுதலும் அவசியமாகிறது.
எம்மவரிடம் இருக்கும் திறமைகள் மழுங்கடிக்கப்படாமல் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப்பட இவை நிச்சயம் தேவை. குறிப்பாக தலைநகரில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வெளித்தொடர்புகள் அதிகம் இருக்கும். ஆதலால் அப்பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் வெளியுலகை முகம் கொடுக்கும் விதம் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மாறுபட்டுக் காணப்படும்.
எம்மவர் தான் உலகெங்கும் வாழ்கிறார்களே! ஆதலால் எல்லோரையும் விட எமக்குத் தான் சர்வதேசத் தொடர்புகள் மிக அதிகம் இருக்கும். ஏனெனில் உலகின் பிரபல பல்கலைக்கழகங்களில் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள். விரிவுரையாளர்களாகக் கடமையாற்றுகிறார்கள். பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். யாழ். பல்கலைக்கழகத்துடனான அறிவுப் பகிர்வை, அனுபவப் பகிர்வை மேற்கொள்ள அவர்கள் முன்வரவேண்டும். அதற்கு பல்கலைக்கழகமும் ஒத்துழைக்க வேண்டும். பல்கலைக்கழக சமூகம் முன்னிலையடைய அது நிச்சயம் வழி வகுக்கும்.
யாழ்ப்பாணத்திலே இருக்கும் பாரம்பரிய வீடுகள், சொத்துகள் பல புலம் பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானவை. யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி தொடர்பில் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற பல்கலைக்கழக குழுவினர் சில சிக்கல்களை எதிர்நோக்கினர். புலம் பெயர்ந்தவர்களுக்குச் சொந்தமானவற்றை பாதுகாவலர்கள் அவர்களிடம் வழங்க மறுத்து விட்டனர். ஆக புலம் பெயர் தமிழர்கள், தாம் அவற்றால் பயனடைய மாட்டோம் என நம்பும் பட்சத்தில் அவற்றைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் ஒப்படைக்க முடியும். எம்மவர் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முயற்சிகளுக்கு அது பேருதவியாக இருக்கும்.
சில குடும்பங்கள் தம்மிடம் இருக்கும் பழைமையான ஏடுகள், செப்பேடுகளை வழங்க மறுத்திருக்கின்றன. அசையாச் சொத்துகள் மீது தமக்கிருக்கும் உரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சம் கூட அவர்கள் அவ்வாறு நடக்கக் காரணமாகிறது என்கிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.
யுத்தம் என்ற அரக்கன் துரத்தத் துரத்த நாம் ஊர் ஊராய் ஓடியதால் எம்மை அறியாமலே இழந்து விட்டிருந்த தனித்துவத்தை இக்கண்காட்சி புடம் போட்டு காட்டியதுடன், நாம் மீள நினைத்துக் கூடப் பார்த்திராத நினைவுகளை எல்லாம் மீட்டு அந்த பசுமையான வாழ்விலே இன்னொரு முறை எம்மைச் சஞ்சரிக்க வைத்து கண்களைப் பனிக்கச் செய்தது எனலாம்.

1 comment:

Suresh Subramanian said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன...www.rishvan.com

Post a Comment