வேலிப் பொட்டு
சொல்லும் கதைகள்
அன்றாடப் பாவனையிலிருந்த பித்தளை, செம்பு, பல்வேறு தரப்பட்ட உலோகப் பொருட்கள் அடுத்த அரங்கிலே ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. தென்னகத்தைப் பொறுத்தவரையிலே அரிய, விலைமதிப்பற்ற கலைப் பொருட்களாகப் பார்க்கப்படும் இப் பொருட்கள் எல்லாம் எம்மவர் வாழ்வியலில் சாதாரண பயன்பாட்டில் இருந்தவை என எண்ணும் போது உள்ளம் பெருமிதம் கொண்டது. ஆனால் இன்று அவையெல்லாம் தொலைந்து போய்விட்டன என்று எண்ணிய போது மனம் வருத்தமும் கண்டது.
அந்த அரங்கை விட்டு வெளியே வந்தால், திறந்த அரங்கிலே வெவ்வேறு வகை வேலிகள் அடைக்கப்பட்டிருந்தமையைக் காண முடிந்தது. யாழ்ப்பாண வாழ்வியலில் வேலிக்கு எத்துணை பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது என்பதை அந்த வேலிகள் பறை சாற்றின எனலாம்.
யாழ்ப்பாண இராச்சியத்தில் நெடுங்காலமாக நிலவி வந்த வழமைகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது தேச வழமையாகும். அது சட்ட ரீதியாக இன்றும் நடை முறையில் உள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நீதி மன்றங்கள் தேச வழமை அடிப்படையிலே வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கின. இந்த வழமையானது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சட்டமாகத் தொகுக்கப்பட்டது. இத்தேச வழமையானது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான சட்ட நெறியாக இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதனையே பேராசிரியர் பத்மநாதனும் குறிப்பிடுகிறார்.
அடிப்படையில், யாழ்ப்பாணச் சமூகம் விவசாயத்தை ஒட்டியதாக இருந்தது எனலாம். ஆதலால் இச் சமூகத்தில் நிலவி வந்த வழமைகளும், நிலம், அதன் உரிமை, பாதுகாப்பு என இயற்கைவளங்களை ஒட்டியதாகவே அமைந்திருந்தன. அதனால்தால் தான் இங்கு வேலிகளுக்கு இத்தனை முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. காணிகளின் எல்லைகளை நிர்ணயிப்பதில் இந்த வேலிகளுக்குப் பெரும் பங்குண்டு. வளவுகளைச் சுற்றி வேலி அடைப்பது யாழ்ப்பாணத்தின் அத்தியாவசிய தேவையாகவும் கருதப்பட்டது.
அந்த வேலிகள் பலவகைப் பட்டவையாகக் காணப்பட்டன. காய்ந்த இலை குழைகள், பனையோலை, தென்னோலை கிடுகு, காய்ந்த குச்சிகள், ஒருவகை முருகைக் கற்கள், வாழைச்சங்குகள், உயிர் மரங்கள் என பலவகைப் பட்டவற்றைக் கொண்டு வேலிகள் அடைக்கப்பட்டன.
வேலி அடைக்கப்பயன்படும் பொருட்களும், முறைகளும் பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபட்டன எனலாம். அதாவது அந்தந்தப் பிரதேசங்களில் தாராளமாகக் கிடைக்கக் கூடியவற்றை வைத்து வேலிகள் அடைக்கப்பட்டன. அதைவிட தனிப்பட்ட தேவைகள், வசதி வாய்ப்புகளும் கூட வேலிகள் அடைப்பதில் செல்வாக்குச் செலுத்தின.
வேலிகள் கொண்டு நிலத்தை அடைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வெளி ஊடுருவல்களிலிருந்து பாதுகாப்புக் கொடுத்தல் என்பது வேலிக்கான முக்கியமான தேவையாகும். வேலியே பயிரை மேய்வது போல என்ற பழமொழி பயிர்ச் செய்கை நிலங்களில் வேலியின் செயற்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்ற வேலிகள் ஆடு, மாடு மற்றும் அந்நிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவல்களைத் தடுப்பதுடன், பல சமயங்களில் வெளியிலிருந்து உள்ளே பார்ப்பதைத் தடுக்கும் மறைப்புகளாகவும் செயற்படுகின்றன.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மின்னுற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள், பாதுகாப்புப் படை முகாம்கள் போன்ற இடங்களில் இன்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. இவை பொதுவாக மனிதர் ஏறி உள்ளே புகமுடியாதபடி உயரமானவையாக அமைவதுடன், இவ்வாறு செய்வதற்குச் சிரமமான முள்ளுக் கம்பிகள் போன்ற பொருட்களையும் பயன்படுத்துவார்கள்.
காட்டுப் பகுதிகளில் யானைகள் போன்ற பெரிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் அழுத்தம் குறைந்த மின்சாரம் பாய்ச்சப்படும் மின்சார வேலிகளையும் அமைப்பதுண்டு.
சில ஊர்களின் பெயரில் கூட வேலி என்ற சொல் காணப்படுகிறது.
நீர்வேலி, அச்சுவேலி, கட்டைவேலி, விளைவேலி, சங்குவேலி, திருநெல்வேலிபோன்ற ஊர்களின் பெயரை உதாரணமாகக் கூறலாம். நீர்வேலியிலே ஊரின் கிழக்கு எல்லையில் நீர்நிலை காணப்பட்டமைதான் அப்பெயர் வரக் காரணம் என்பர்.
வேலி என்பது தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு அளவையாகும். தஞ்சை மாவட்டத்திலே இக்காலத்திலும் ‘வேலி’ என்ற அளவையால் நிலத்தை குறிப்பிடுகின்றனர். ஒரு வேலி என்பது 6.17 ஏக்கர் பரப்பளவுக்குச் சமமானதாக இருக்கிறது.
இக்கட்டுரையில் நாம் குறிப்பிடும் வேலி எல்லையை நிர்ணயிக்கப் பயன்படுவதாகும். எல்லை வேலி நிலத்துக்குப் பாதுகாப்புத் தருகிறது எனக் கொண்டால், எல்லை வேலிக்கு சட்டம் பாதுகாப்பைத் தருகிறது. தேச வழமையிலும் எல்லை வேலிகளுடன் தொடர்புடைய பல விடயங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் காணிகளின் எல்லை வேலிகள் சரிந்து விழவிடாமல் பேணிப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளும் இருப்பதாக வழக்கறிஞர் பொன். பூலோகசிங்கம் கட்டுரையொன்றிலே குறிப்பிட்டிருந்தார்.
கடந்த யுத்த காலங்களில் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிரதான பாதையால் செல்லப் பயந்து வேலி வெட்டி இடம்பெயர்ந்த நினைவுகளும் இல்லாமல் இல்லை. முன்னர் ஊர்களிலே அயலவர்கள் எல்லாம் உறவுக்காரராக இருப்பார்கள். அடுத்த பகுதிக்குச் செல்வதற்காக ஒவ்வொரு காணி, வீட்டின் வேலியிலும் சிறு புகு வழி விடப்பட்டிருக்கும். அதை வேலிப்பொட்டு என்று குறிப்பிடுவர். அதேபோல வேலிகளில் விடப்பட்டிருக்கும் சிறு இடைவெளிகளையும் கூட வேலிப்பொட்டு என்றே கூறுவர்.
வேலிப் பொட்டுகளுக்குள்ளால் கதை பேசும், புதினம் பார்க்கும் எம்மவர் பற்றி எத்தனையோ கதைகள், நினைவுகள் இருக்கின்றன. வேலிப் பொட்டுகளால் வளர்ந்த காதல்கள் சொல்லும் கதைகளும் ஏராளம். எம் கலாசாரத்தில் வேலிப்பொட்டை உறவுகளின் நெருக்கத்தையும் இணைப்பையும் காட்டும் அடையாளமாக கலாநிதி குணராசா பார்க்கிறார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை எம் மூத்தோர் மீட்கும் நினைவுகள் எடுத்தியம்பும்.
வேலியைத் தள்ளிப் போட்டு அயலவர் காணிகளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் விபரீத குணங்களும் எம்மவருக்கு இல்லாமல் இல்லை. அதனால் எழும் வேலிச் சண்டைகள் குடும்பப் பிரச்சினைகளாக மாறிப் பின் பொதுப் பிரச்சினையாகிய நினைவுகளும் பலருக்கு இருக்கும்
வேலி அடைத்தல் கூட ஒரு கலை எனலாம். ஒரு தசாப்தத்துக்கு முன்னைய காலம் வரை சில குறிப்பிட்ட இடங்களை அங்கு நேர்த்தியாக அடைக்கப்பட்டிருக்கும் பனையோலை வேலிகளை வைத்தே அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. உயிர் வேலி மழைக்காலங்களில் போடப்படும். அதற்காக பூவரசு, கிளுவை, முட் கிழுவை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மாரி காலத்தில் அம் மரங்களின் குழைகளை வெட்டி தோட்டங்களில் பசளையாக நிலத்துள் புதைப்பர். அதே நேரம் கதிகால்களைக் கொண்டு வேலிகளின் இடைவெளிகளை அடைப்பர். கிலுவை மரத்தில் நைதரசன் அதிகளவில் காணப்படுகிறது. இதனைத் தோட்டத்தில் புதைத்தலானது நைதரசன் பசளை போடுவதற்குச் சமமானது என நவீன விவசாய வனவியல் தத்துவங்கள் கூறுகின்றன. ஆனால், அது அன்றே எம்மவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
பனையோலை, பனை மட்டை, தென்னோலை, கிடுகு, காய்ந்த குச்சிகள் போன்றவற்றைக் கொண்டு அடைக்கும் வேலிகள் கரையானால் அரிக்கப்பட்டு அல்லது இயற்கைக் காரணிகளால் உக்கிய பின்னர் மீண்டும் புதிதாக அடைக்கப்படும். உயிர் வேலிகளை விட, இவை நெருக்கமானவை. குறிப்பாக நெடுந்தீவு போன்ற தீவுப்பகுதிகளில் ஒருவகை முருகைக் கல் வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதானது தனிச்சிறப்பாகும். இவை மிக நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கக் கூடியவை.
காலப்போக்கிலே, இந்த வேலிக்கதிகால்களை சீமெந்துக்கட்டைகளும் இடைக் கயிறுகளை முட்கம்பிகளும் பிரதியீடு செய்யத் தொடங்கி, இன்று சீமெந்து மதில்கள் ஆக்கிரமித்துவிட்டன! உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகியது. பல்வேறு தேவைகளுக்காக வேலிகள் வெட்டப்பட்டன. எல்லைகளும் மெள்ள மெள்ள இடம் மாறின. எம்மவர் மனப்பாங்கும் மாறியது. சூழலுக்கு பங்கம் விளைவிக்காத இயற்கை வேலிகள் பயனற்றவையாயத் தெரிந்தன போலும். அத்துடன் பணமும் தாராளமாகப்புழங்கத் தொடங்கியது. பல இயற்கை வேலிகள் தகர வேலிகளாகி இன்று கொங்கிறீட் மதில்களாகிவிட்டன என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம் ஆகும்.
கொங்கிறீட் சுற்று மதில்கள் உயர் அந்தஸ்தின் சின்னம் என்ற பரவலான நிலைமை யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டது. பசுமை வாழ்வியலின் மதிப்பு எம்மவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.
இனி வரும் காலங்களில் இந்த வேலிகளை எல்லாம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமாகத் தான் இருக்கிறது. கண்காட்சி வளாகத்தினுள் அடைத்துக்காட்டப்பட்டிருந்த வேலி மாதிரிகள், இனி எம்மை எங்கு காண்பீர்? என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்பது போல் இருந்தது.
No comments:
Post a Comment