Sunday, October 17, 2010

யோகக்கலை மதங்களுக்கு அப்பாற்பட்டது

யோகம்... யோகா... என்பது இன்று யாவரும் அறிந்த ஒரு சொற்பதமாகும். இச்சொல் பல்வேறு விதமாகப் பொருள்படும் வகையிலே பயன்படுத்தப்படுகிறது. கர்ம யோகம், ஞானயோகம், பக்தியோகம் போன்றவை பகவத் கீதை முதலாய சாஸ்திரங்களிலே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயினும் யோகம் என்ற சொல்லின் பாவனை பற்றிய தெளிவின்மை பரவலாகக் காணப்படுவதை எவராலும் மறுக்கமுடியாது.யோகம் என்ற சொல்லின் நேரடிப் பொருள் ‘ஒன்றிணைதல்’ என்பதாகும். அதாவது மனிதனானவன் இறைவனை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிணைதலை யோகம் எனக் கொள்ளலாம்.
தற்காலத்திலே யோகா எனப்படுவது பரவலாக ஒரு உடல்வளக் கலையாகவும் மனவளக் கலையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரததேசத்திலே யோகிகளாலும் தவ சிரேஷ்டர்களாலும் பின்பற்றப்பட்டு வந்த யோக சூத்திரங்கள் பதஞ்சலி முனிவரால் தொகுக்கப்பட்டன. அதனால் அவை இன்று எமக்குக் கிடைத்தன. யோகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. மதங்களின் கொள்கைகள் வேறுபடுகின்ற போதும், அவற்றின் இறுதி இலக்கு ஒன்றாகவே இருக்கிறது.
அந்த வகையிலேதான் யோகமும் எந்தமதத்தையும் சாராது காணப்படுகிறது. அடிப்படையில் யோகம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவை ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம் என்பனவாகும். அவை ஒவ்வொன்றும் எட்டு உப பிரிவுகளைக் கொண்டவை. அப்பிரிவுகளின் தொகுப்பே அட்டாங்க யோகம் எனப்படுகிறது.

நவீன உலகின் விஞ்ஞானிகளை யோகத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் வியக்கவைக்கிறது. இத்தனை சிறப்புக்கள் நிறைந்த யோகம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியிலே உருவாக்கி. அது தரும் எல்லையில்லா ஆனந்தத்தை அவர்களையும் உணரச் செய்யும் அமைப்புகள் பல காணப்படுகின்றன.
அத்தகையதோர் அமைப்பு தமிழகத்தின் சென்னை மாநகரிலே Infinite Dimensions Charitable Trust எனும் பெயரிலே 2002ம் ஆண்டு தாபிக்கப்பட்டது.
அவ்வமைப்பின் ஸ்தாபகர் குருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி ஆவார். அவர் ஸ்தாபித்த அமைப்பானது யோகா, தியானம், பிரபஞ்ச சக்தி மூலம், நோயைக் குணப்படுத்தல் போன்ற பல சேவைகளை வழங்கி வருகிறது. அவை மட்டுமின்றி பசுமை மற்றும் சேதன வாழ்வியல் முறைமைகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறது.
யோகம் பல பரிமாணங்களைக் கொண்டது. யோகப் பயிற்சிகள் உடலையும் உள்ளத்தையும் தயார்படுத்தி யோகம் சொல்லும் இறுதி இலக்கை அடையத் துணைபுரிகின்றன. அண்மையில் எமது பத்திரிகை நிறுவனத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த குருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி தமது இலங்கை விஜயத்தைப் பற்றியும் யோகம் பற்றிய கருத்துக்களையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

இவர் இந்தியாவின் பிரபல தொழில்நுட்பக் கல்வி நிறுவகமான ஐ.ஐ.டி (Indian Institute Of Technology) இன் இலத்திரனியில் பொறியியல் பட்டதாரி ஆவார். அவருக்கு அமெரிக்காவிலே நல்ல வேலை வாய்ப்பும் கிடைத்திருந்தது.
அதற்காக அமெரிக்காவுக்கு பயணிக்க முதல் கேரளாவில் உள்ள குரு ஆச்சிரமத்துக்கு 2 வாரம் யோகா விடுமுறைக்காகச் சென்றிருந்தார். அவருடைய குரு, சுவாமி விஷ்ணு தேவானந்தா ஆவார். இவர் சுவாமி சிவானந்தரின் நேரடிச்சீடர். ஆகையால், சுவாமி விஷ்ணு தேவானந்தா சிவானந்த யோகத்தைப் பின்பற்றுபவராக இருந்தார்.
இரண்டு வார யோகா விடுமுறையில் ஈர்க்கப்பட்ட யோகாச்சார்யா குமார்ஜி தனது அமெரிக்கப் பயணத்தை இரத்துச் செய்து 3 வருடங்கள் அவ்வாச்சிரமத்திலேயே தங்கியிருந்து யோகக் கலையைப் பயின்றார். குரு விஷ்ணு தேவானந்தா தனது பூவுடலை நீத்த போது, யோகாச்சார்யா குமார்ஜி தனக்கான பணியை உணர்ந்தார்.
அதன் வழியிலே 1993 இலிருந்து 1996 வரை அப்பலோ மருத்துவ மனையில் யோகா ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் 2002 இலே Infinite Dimensions Charitable Trust என்ற அமைப்பை சென்னையிலே தாபித்தார்.
இந்திய விமானப்படை மற்றும் பல முன்னணி வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கு யோகக் கலையின் பயிற்சிகளை அளித்துள்ளார்.
கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் இவரிடம் யோகப் பயிற்சி பெற்றவர்களாவர். அவர்களுள் இலங்கை கிரிக்கெட் அணியின் சமிந்த வாஸ், ரவீந்திர புஷ்பகுமார போன்றோரும் அடங்குவர்.

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த யோகாச்சார்யா அருண்குமார்ஜி சின்மயா மிஷனின் இலங்கைக் கிளையுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார்.
வேறு எங்கும் கிளை அமைப்புகளைக் கொண்டிராத அவருடைய அமைப்பு யோகக் கலையின் பயிற்றுநர்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு இந்த யோகக் கலையைப் பயிற்றுவித்து அவர்களின் வாழ்வு மென்மேலும் சிறக்க வழிகிடைக்கும் என்ற கொள்கையில் இவ்வமைப்பு உறுதியுடன் இருக்கிறது.
இவ்வமைப்புக்கான நிதியுதவி வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கும் யோகக் கலைப் பயிற்சியாலும் நல்லுள்ளம் படைத்த அன்பர்களின் நன்கொடைகளாலும் கிடைக்கப்பெறுகிறது.
‘இருப்பவர்களிடம் பெற்று இல்லாதவர்களுக்கு வழங்குவோம்’ என்று சுருக்கமாகக் கூறினார் யோகாச்சார்யா குமார்ஜி.
துரித உணவுக்கலாசாரத்துக்கும் பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்களின் மிகை பாவனையால் விளைந்த விளைச்சலின் நுகர்வுக்கும் பழக்கப்பட்டதாக இன்றைய சமுதாயம் மாறிவிட்டது.
ஒரு காலத்திலே இயற்கை உரங்களைப் பாவித்து விளைந்த விளைச்சலை நுகர்ந்து ஆரோக்கியமாக வாழ்ந்த உயரிய சமுதாயம் எங்கள் சமுதாயம்.
இன்று நாம் தொலைத்துவிட்ட அந்த வாழ்வியலை மீண்டும் பெற இந்த அமைப்பு வழி செய்கிறது.
விவசாயிகளை சேதன விவசாயத்தில் ஈடுபடுமாறு இவ்வமைப்பு ஊக்குவிக்கிறது. நட்டம் ஏற்படும் பட்சத்தில் அந்நட்டத்தையும் தானே தாங்கிக்கொள்கிறது. ஏறக்குறைய காப்புறுதிச் சேவையை ஒத்த சேவையை இவ்வமைப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. அத்துடன் அவர்களது விளைச்சலைக் கொள்வனவு செய்து நுகர்வோரின் தேவைக்கமைய வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கிறது. இத்தகைய சேவை வெகு விரைவில் தமிழகம் முழுவதும் விஸ்தரிக்கப்படவுமிருக்கிறது.
பணமே தெய்வம் என்ற இன்றைய உலகிலே சேதன விவசாயிகளின் நட்டத்துக்கும் விளைச்சலுக்கும் உத்தரவாதம் அளித்து அவர்களை ஊக்குவிக்கும் இத்தகைய அமைப்புகளின் தேவை மிகவும் அவசியமானதாகும்.
அத்துடன் Infinite Dimensions Charitable Trust என்ற இந்த அமைப்பு தனது பெயருக்கேற்ற வகையிலே பல்பரிமாணங்களையுடைய திட்டங்களை வகுத்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலே பலர் உணவகங்களை நம்பி வாழ்பவர்களாகக் காணப்படுகின்றனர். சுகதேகிகளைப் பொறுத்தவரையிலே இந்தப் பழக்கம் பெரிய பாதிப்பை உருவாக்காது.
ஆனால் ஏதாவது ஒரு நோயின் தாக்கமுள்ளவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். தாம் தவிர்க்க வேண்டிய உணவையும், உணவகங்களிலே தவிர்க்க முடியாதவர்களாகிறார்கள்.
அத்தகையோருக்காக சிறப்பு உணவகங்களை இவ்வமைப்பின் கீழ் நிறுவும் திட்டமும் உள்ளதாக யோகாச்சார்யா குமார்ஜி தெரிவித்தார்.
இத்தகைய இயற்கை உணவுப் பொதிகளை அலுவலகங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் இயற்கைச் சூழலுடன் இயைந்த விடுமுறை விடுதிகளை அமைக்கும் திட்டம் போன்ற பல திட்டங்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவரது குழுவினரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் இந்த யோகக் கலையின் உன்னதத்தை இலங்கையிலும் பரப்புவதாகும்.
பூரணத்துவம் யோகா என்ற தொனிப்பொருளிலே இவர்கள் பயிற்றும் யோகக்கலை இலங்கையில் ஆனந்த யோகா எனும் பெயரிலே பயிற்றுவிக்கப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் அகில இலங்கை ரீதியிலான யோகக்கலை பயிற்றுநர்களுக்கான பயிற்சி சின்மயா மிஷனின் துணையுடன் வழங்கப்படவிருக்கிறது. இலங்கையின் வடபகுதி மக்கள் பயன்பெற கூடியளவிலான பல செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றன.
யோகாச்சார்யா குமார்ஜி சில ஆலோசனைகளையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார். யோகாசனங்களைப் பயில்வதற்கு மிகவும் சிறந்த நேரம் பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை வேளை ஆகும்.
அவ்வேளையிலே ரிஷிகளும் யோகிகளும் சித்தர்களும் தவம் செய்வார்கள். அதேநேரத்தில் நாம் யோகாசனத்தைப் பயிற்சி செய்யும் போது, அந்த தவசிரேஷ்டர்களின் தவத்தால் உருவாகும் நேரலைகளை உள்வாங்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் துஷ்டர்களுக்கு அவ்வேளை நித்திரை வேளையாகும். ஆதலால் எதிர்மறையான அலைகள் சூழலிலே காணப்படாது.
தீய எண்ணங்களை உடையவர்களும் தீய செயல்களைச் செய்பவர்களும் அதிகாலை வேளையில் ஆழ்ந்த உறக்கத்திலே இருப்பர். இத்தகைய காரணங்களால் தான் யோகப் பயிற்சிக்கு மிகவும் சிறந்த காலமாக பிரம்ம கூர்த்தம் கருதப்படுகிறது.
எதுவுமே செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்தால் பயன்கிடைக்கும் என்பர்.
அதேபோல, பிரம்மமுகூர்த்தத்தின் போது யோகப் பயிற்சியில் ஈடுபட முடியாவிடில் மாலைவேளைகளில் கூட ஈடுபடலாம் என்கிறார் யோகாச்சார்யா அருண் குமார் ஜி அதுவும் முடியாவிடில் கிடைக்கும் ஏதாவது ஒரு ஓய்வு நேரத்திலாவது ஈடுபடலாம். ஆனால் அவையெல்லாம் பிரம்மமுகூர்த்தத்தில் பயிற்சி செய்யும் போது கிடைக்கும் உச்சப்பயனைத் தரமாட்டா.
யோகப்பயிற்சிகள் மூச்சுடன் சேர்ந்து செய்யப்படவேண்டியவை. ஆதலால் முறையான யோகப் பயிற்சியில் கவனச்சிதறல்கள் இருக்காது. ஆனால் இன்று பலரும் யோகாசனங்களை மூச்சுடன் இணைந்ததாகச் செய்வதில்லை. ஆதலால் அவற்றின் பயன் வீணடிக்கப்படுகிறது.
எமது உடலானது பஞ்ச கோசங்களால் ஆனது. யோகக் பயிற்சிகள் பஞ்ச கோசங்களை வளப்படுத்தி யோகத்தின் இறுதி இலக்கை அடைய வழி வகுக்கின்றன.
யோகாச்சார்யா அருண் குமார்ஜியிடம் யோகப் பயிற்சிகளைப் பெற விரும்புபவர்கள் சின்மயா மிஷனின் இலங்கைக்கிளையுடன் தொடர்பை ஏற்படுத்தி இணைந்து கொள்ள முடியும்.
இன்றைய அவசர உலகிலே, ஆர்ப்பரிக்கும் மனதை யோகப் பயிற்சிகள் அமைதிப்படுத்த உதவும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்காக? பணத்திற்காகத்தானே... பணம் நிம்மதியான வாழ்வை அளித்துவிடும் என்ற நம்பிக்கையில் உழன்று, கடைசியில் நிம்மதியின்றி வாழ்வையே தொலைத்தவர்கள் பலர்...
யோகக்கலை போன்ற அரிய பொக்கிஷங்கள் எமது கைக்கெட்டும் தூரத்தில்இருப்பதற்கே நாம் கொடுத்து வைத்தவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய யோகக்கலை எனும் கடலின் ஒரு துளி நீரையேனும் பருகித்தான் பார்ப்போமே...

No comments:

Post a Comment