Thursday, October 7, 2010

நல்ல விளைச்சல் கிடைப்பதற்கு செயற்கை உரம் தேவையில்லை

2010 ஆம் ஆண்டு சர்வதேச உயிர்ப்பல்வகைமைக்குரிய ஆண்டாகப் பிரகடனப்படுத்தப் பட்டிருப்பது நாம் யாவரும் அறிந்ததோர் விடயமே. அதேபோல, உயிர்ப்பல்வகை யமையைப் பாதுகாப்பதற்கென 2010ஆம் ஆண்டுக்காகக் குறிக்கப்பட்டிருந்த இலக்குகள் எவையும் அடையப்படவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

எமது நாடு உயிர்பல்வகைமை யால் வளம் பெற்றது. ஆனால் அந்த வளத்தின் அருமையை நாம் விளங்கிக் கொள்ளாததால் இன்று அந்த வளம் அருகிப்போவதற்கு நாமே காரணமாகிவிட்டோம்.

உயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பில் இயற்கைச் சூழல் தொகுதிகளும் பூங்காக்களும் வனப் பகுதிகளுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன.

எமது நாடு கீழைத்தேயக் கலாசாரத்தையும் பாரம்பரியங் களையும் அடிப்படையாகக் கொண்டது. எமது நாட்டின் சமூகங்களால் கைக்கொள்ளப் பட்டு வரும் பாரம்பரிய முறைகளால் உயிர்பல்வகைமை பாதுகாக்கப்படும் விதம் பற்றி நாம் கருத்தில் கொள்வதில்லை.

இலங்கை வனவளம் நிறைந்த நாடாக ஒரு காலத்திலே காணப் பட்டது. காலப் போக்கிலே பல்வேறு தேவைகளுக்காக வனவளம் அழிக்கப்படத் தொடங்கியது. சடுதியாகக் குறைவடையத் தொடங்கிய உயிர் வளங்கள் மீதான அழுத்தமும் அதிகரித்தது.

வனங்களின் உதவியால் தமது அடிப்படைத் தேவைகள் பலவற்றை நிறை வேற்றி வந்த மக்கள் பெருஞ் சிரமங்களை எதிர்நோக்கினர். அவர்களுக்கு வனப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அதன் விளைவாக, சுதேச மக்கள் இதுவரை காலமும் வனங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வந்த தமது அடிப்படைத் தேவைகளை மாற்றுவழிகளால் பூர்த்தி செய்ய முயன்றனர்.

அந்த வழியில் உருவான ஒரு முறைமையே வீட்டுத் தோட்ட முறைமையாகும். இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பல்வேறுபட்ட வீட்டுத் தோட்ட முறைமைகள் காணப்பட்டாலும் பாரம்பரிய கண்டிய வீட்டுத் தோட்டங்கள் மிகவும் பிரபலமானவையாகும்.

அவற்றின் உற்பத்தித் திறன் மிகவும் அதிகமாக இருக்கும். அதேவ§ளை உயிர்ப்பல்வகைமை யைப் பாதுகாப்பதிலும் அவை பெரும்பங்கை வகிக்கின்றன. அவை மட்டுமன்றி இந்த கண்டிய வீட்டுத் தோட்டங்கள் பெறுமதிமிக்க பொழுதுபோக்கு அம்சங்களாகவும் திகழ்கின்றன.

இவை வனங்களுக்குச் சமமானவை அல்ல. ஆயினும் கட்டமைப்பைப் பொறுத்தவரையிலே, வனங்களுக்கு மிகவும் நெருக்கமானவை. சூழலியல் செயற்பாடுகள், அங்கிகளின் பல்வகைமை, வளம் போன்றவற்றில் வனங்களுடன் வேறுபட்டவை. ஆனால் தனித்தன்மை வாய்ந்தவை. சுதேச சமூகங்கள் சுற்றுச்சூழலுடனும் வனப் பகுதிகளுடனும் கொண்ட தொடர்புகளின் அடிப்படையில் பரிணமித்தவை.

வீட்டுத் தோட்டங்கள் என்றதும் சிறியளவிலான தோட்டங்கள் என்று மனக்கண்முன் விரிந்த கற்பனையைத் தவிடுபொடியாக்கியவை இந்த கண்டிய வீட்டுத் தோட்டங்கள்! மத்திய மலைநாட்டைப் பொறுத்தவரையிலே, கண்டிய வீட்டுத் தோட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றை கண்டியையும் கண்டியை அண்டிய பகுதிகளிலும் பரவலாகக் காண முடியும்.



ஆயினும் பிராந்தியங்களையும், விவசாய சுற்றுச் சூழல் வலையங்களையும் பொறுத்து இவற்றின் கட்டமைப்பு மாறுபடும். கண்டியின் வருடாந்த மழைவீச்சியானது 3000 சீசீ ஆகும். இந்த உயர்ந்த மழைவீழ்ச்சி காரணமாகவும், சாதகமான சூழல் நிலைமைகள் காரணமாகவும் சிறு ஏற்றுமதிப் பயிர்களான கோப்பி, கொங்கோ, கராம்பு, மிளகு, சாதிக்காய் போன்றவை இங்கு நன்கு வளர்கின்றன. கண்டிய வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவனவும் இந்தச் சிறு ஏற்றுமதிப் பயிர்களே ஆகும்.

இத்தகைய வீட்டுத் தோட்டங்கள் இலங்கையின் ஈர வலயப் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றன.

சுதேச மக்களின் வீடுகளுடன் இணைந்ததான காணிப் பரப்பிலே இந்த சிறு ஏற்றுமதிப் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக இந்த வீட்டுத் தோட்டங்கள் பேணப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கல்வி மாணவர்கள் வெளிக்கள ஆய்வொன்றிற்காக பாரம்பரிய கண்டிய வீட்டுத் தோட்டமொன்றின் மாதிரியையும் பார்வையிட்டிருந்தனர். அந்த மாதிரி வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளர் சுது மாத்தையா என அழைக்கப்படும்

கே. வலியங்கன மல்வத்த என்பவர் ஆவார். 68 வயதான இந்த முதியவர் தனது தந்தைக்குப் பின்னர் இந்த வீட்டுத் தோட்டத்தைப் பராமரித்து வருகிறார். மிகவும் எளிமையான இவர் ஒரு வர்த்தகப் பட்டதாரி என்பது இன்றைய இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இவரது காணியின் பரப்பளவு ஏறத்தாழ 4 ஏக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுது மாத்தையா தான் பராமரித்துவரும் இந்தப் பாரம்பரிய வீட்டுத் தோட்டம் பரிணமித்த விதத்தை அவர் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 1945 களில் இந்த நிலம் எமக்குச் சொந்தமாகியது. அது முதலில் தேயிலைத் தோட்டமாகவே இருந்தது. ஆனால் தேயிலைக் கொழுந்துகளைக் கொய்வதற்குப் போதிய தொழிலாளர்கள் இல்லாமையால் இலாபம் கிடைக்கவில்லை. அத்துடன் தோட்டத்தின் உரிமையாளரே களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தேயிலைச் செடிகளை அழித்துவிட்டு வாழை பயிரிட்டோம். இலாபம் கிடைத்தது. பின்னர் சில சாதிக்காய் மரங்களைப் பயிரிட்டோம். அவற்றாலும் ஓரளவு விளைச்சல் கிடைத்தது. பின்னர் கராம்பு மற்றும் ஏனைய பயிர்களையும் பயிரிட்டோம். எனது அயலில் இருந்த தமிழ் மக்கள் மகோகனி மரத்தைப் நாட்டி வளர்க்கச் சொன்னார்கள்.

அது விரைவாக வளர்ந்தது. இலாபமும் தருகிறது. கோப்பியும் பயிரிட்டேன். ஆனால் அப்பயிர்ச் செய்கை மட்டும் வெற்றியளிக்கவில்லை. ஏனெனில் கோப்பி பூக்கும் காலத்தில் மழை பெய்வதால் பூக்களெல்லாம் உதிர்ந்து விடுகின்றன. அதேபோல், ஆனைக் கொய்யாவும் விளையவில்லை. பலமுறை முயற்சி செய்து பார்த்தேன்.

பீடையின் தாக்கமோ நோயின் தாக்கமோ தெரியவில்லை என்றார்.

அவர் மேலும் கூறுகையில் கராம்பு நல்ல விளைச்சலைத் தரும். ஆனால் பொறுப்பாக கராம்புப் பூக்களைக் கொய்வதற்குப் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. அத்துடன் கராம்பு ஒவ்வொரு வருடமும் விளைச்சலைத் தருவதில்லை. இரண்டு வருடங்களுக்கொருமுறையே விளைச்சலைத் தருகிறது என்றார். தனது வருமானம் பற்றிக் குறிப்பிடுகையில், வருடமொன்றுக்கு சாதிக்காயால் 3 இலட்சம் ரூபா கிடைக்கும்.
சிலவேளைகளில் 7 – 8 இலட்சம் ரூபாவும் கிடைக்கும். கராம்பினால் 2 இலட்சம் ரூபா கிடைக்கும். பாக்கு விற்பனையால் வருடாந்தம் ஆகக் கூடிய தொகையாக 150,000 ரூபா கிடைக்கும். கோப்பியால் 20 – 30 ஆயிரம் ரூபாவே கிடைக்கிறது என்றார். செயற்கை உரங்களைப் பாவிப்பது இலாபகரமானதாக இல்லை. ஆதலால் இயற்கை உரங்களையே பாவிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

சுது மாத்தையாவுடனான உரையாடலின் போது, அவர் தனது தோட்டத்தின் மேல் கொண்டிருந்த பிரயாசை தெளிவாக விளங்கியது. ஒரு பட்டதாரியான போதும் அவரிடம் குடிகொண்டிருந்த எளிமையும் பணிவும் நெகிழவைத்தன.

சுது மாத்தையா போன்ற பல முதலாளிகளை கண்டியை ஒட்டிய பிரதேசங்களிலே பரவலாகக் காணமுடியும். இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அவர்களும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறக்கமுடியாது.

ஏறத்தாழ 40 சதவீதமான இத்தகைய வீட்டுத் தோட்டங்கள், சுதேச, இயற்கைத் தாவரங்களைக் கொண்டவை. இவற்றை இனங்களால் வளம் பெற்ற, சிக்கலான விவசாயத் தொகுதிகள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

இந்த வீட்டுத் தோட்டங்கள் நாம் அறியாத பல விடயங்களை எமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன. மரங்களுக்கிடையிலான கேத்திர கணிதத் தொடர்பு, படைகளாகக் காணப்படும் மரக்கிளைகளினூடு ஒளி செல்லும் விதம், இயற்கை வனப் பகுதிகளுக்கு வெளியே வரையறுக்கப்பட்ட நிலப் பகுதிக்குள் நடக்கும் தாவரத் தொழிற்பாடுகள் மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்புகள் போன்றவற்றை யெல்லாம் இலகுவாக வெளிக்காட்டும் தொகுதிகளாக இந்த வீட்டுத் தோட்டங்கள் காணப்படுகின்றன.

ஏகவினமான தாவர இனங்களையுடைய ஒரு சிறிய பகுதியையேனும் இப்பாரம்பரிய வீட்டுத் தோட்டங்களிலே காணமுடியாது. இவை காலத்துடன் பரிணமித்து வந்த விதம் தான் அவற்றின் நிலைப்பையும் உறுதி செய்துள்ளது. அவற்றின் நிலைப்பும் வளமும் தான் அவை சார்ந்த குடியிருப்பு களின் நல்வாழ்வை உறுதி செய்கின்றன.

இந்த வீட்டுத் தோட்ட முகா மைத்துவமானது, சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டு வருவதாகும். உரிமையும் பராமரிப்பு தொடர்பான அறிவும் கூட அவ்வாறானவையே. பாரம்பரிய வீட்டுத் தோட்டங்களின் முகாமைத்துவமானது வீட்டு வேலையின் ஒரு பகுதியாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ தான் நடைபெறுகிறது.

அதேபோல அறுவடைச் செயற்பாடுகளுக்குள் மட்டும் முகாமைத்துவம் அடங்கிவிடவில்லை. நிலம் போன்ற வளங்களின் உச்சப் பாவனை, குறிப்பிட்ட காலங்களில் கிளைகளை வெட்டுதல், இயற்கையாகவே முளைத்த நல்ல நாற்றுகள் வளர்வதற்காக தேவையற்ற நாற்றுக¨ளை அகற்றுதல், பீடைகளையும் பூச்சிகளையும் தமது பாரம்பரிய முறைகள் மூலம் கட்டுப்படுத்துதல், போன்ற பல செயற்பாடுகளில் முகாமைத்துவம் பயன்படுகிறது.
அவைமட்டுமன்றி மரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான சூரிய ஒளியையும் வளரும் அரும்புகளுக்கான இடத்தையும் பெற்றுக் கொடுக்கவும் அயல் தாவரங்களின் எதிர்ப்பைச் சமாளித்து புதிய தாவரங்கள் வளர வழிசெய்யவும் இந்தப் பாரம்பரிய முகாமைத்துவச் செயற்பாடுகளே உதவி செய்கின்றன.
இந்தப் பாரம்பரிய கண்டிய வீட்டுத் தோட்டங்கள் சிறிய நிலப்பரப்புக்களில் தனித்தனியாகப் பேணப்பட்டு வருவதால் வினைத்திறன் மிக்கனவாகக் காணப்படுகின்றன. அத்துடன் அவற்றின் உயிர்ப்பல்வகைமைச் செறிவும் மிக அதிகமாகும்.
சுது மாத்தையாவைப் பொறுத்தவரையிலே, அவரது மகன் வைத்தியக் கலாநிதியாக வேறு பிரதேசத்தில் தொழில்புரிகிறார். சுதுமாத்தையா தனது மனைவியுடன் தனியே வசித்து வருகிறார். அவரது ஜீவாதாரமே இந்தப் பாரம்பரிய வீட்டுத் தோட்டம்தான்.
ஆனால் சுது மாத்தையாவின் காலத்துக்குப் பின் இந்த வீட்டுத் தோட்டத்தை யாரும் பராமரிப்பார்களா அல்லது அது பராமரிப்பற்று கைவிடப்படுமா என்பது தொடர்பில் எவருக்கும் தெளிவில்லை. ஓரிரு தசாப்தங்களின் பின்னரான இந்த வீட்டுத் தோட்டத்தின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கண்டியும் அதனை ஒட்டிய அயற் பிரதேசங்களும் துரிதகதியிலான நகரமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அப்பகுதிகளில் காணிகளின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பாரம்பரிய வீட்டுத் தோட்டங்கள் அமைந்திருக்கும் காணிகள் பல வர்த்தகக் கட்டடங்கள் அமைக்கும் தேவைக்காக மாற்றப்பட்டு வருகின்றன.
அமைதியான சூழலிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட இந்தத் தோட்ட உரிமையாளர்களால் ஆரவாரமான சூழலொன்றுக்குத் தம்மை மாற்றியமைக்க முடியாமல் இருக்கிறது. சுது மாத்தையாவும் அந்த மனநிலையை ஒத்த கருத்தையே தெரிவித்திருந்தார். அயற் பகுதிகளிலே காணிகள் விற்கப்பட்டு வர்த்தகக் கட்டடங்கள் அமைக்கப்பட்டால் சத்தம் மிகுந்த சூழல் உருவாகி தமது தோட்டத்தின் அமைதி கெடுவதை அவரும் விரும்பவில்லை.

எதிர்காலச் சந்ததியினரோ வீட்டுத் தோட்டச் செய்கையில் நாட்டம் குறைந்தவர்களாக மாறிவருகின்றனர். கெளரவமான தொழில்கள்தான் அவர்களை அதிகம் ஈர்க்கின்றன. ஆனால் இந்த பாரம்பரிய வீட்டுத் தோட்டங்களையும் உள்ளடக்கிய விவசாயம்தான் நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணி என்பதைப் பலர் புரிந்துகொள்வதில்லை.

இந்த நிலையை சுது மாத்தையாவின் வீட்டுத் தோட்டம் மட்டும் எதிர்நோக்கவில்லை. பாரம்பரிய கண்டிய வீட்டுத் தோட்டங்கள் பலவற்றைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு தோட்டமாகவே சுதுமாத்தையாவின் தோட்டமும் தெரிந்தது. இலங்கையின் உயிர்பல்வகைமையைப் பேணுவதில் பெரும் பங்கை வகிக்கும் இத்தகைய வீட்டுத் தோட்டங்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கித்தள்ளப்படுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

ஏதோ ஒரு வகையில் அவற்றைப் பேணுவதற்கு ஆவண செய்ய வேண்டும். சந்தைத் தேவைக்கு அமைய உற்பத்தியை மேற்கொள்ளும் வகையிலே தோட்ட முதலாளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பாரம்பரிய நடைமுறைகளைப் பாதிக்காத வகையிலான நவீன தொழில்நுட்ப அறிவு, சந்தை பற்றிய அறிவு போன்றனவற்றிலே தோட்ட முதலாளிகள் தெளிவுபெற வேண்டும்.

சூரிய ஒளி, நில வளங்கள் ஆகியவற்றின் உச்சப் பயனைப் பெறுவதன் மூலம் அலகு பரப்பிற்கான உற்பத்தித் திறன் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். சூழலியல் சமநிலையைப் பேணி நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்ய வேண்டும்.

இலங்கையின் உயர்கல்வித் திட்டத்திலே விவசாயத் தொழில்நுட்பம், தோட்ட முகாமைத்துவம் போன்ற பல துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. காலங்காலமாகத் தொடரப்பட்டுக்கொண்டிருக்கும் பல துறைகளிலே காலத்திற்கேற்றவாறு விசேட உப பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய துறைகளிலே எல்லாம் பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகளில் எத்தனை பேர் இலங்கையிலே அந்த அறிவைப் பயன்படுத்துகிறார்கள்?
உயர் கல்வி வாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பல பட்டதாரிகளில் ஒருசிலர் மட்டுமே தாய்நாட்டுக்குத் திரும்பி வருகின்றார்கள். தாய்நாடு வழங்கிய அறிவு தாய்நாட்டுக்குப் பயன்படாவிடில், அந்த அறிவினாலாகும் பயன்தான் என்ன?

இந்த படித்த இளைஞர்கள் எல்லாம் இணைந்து எமது நாட்டையே தமது தேடலுக்கான களமாக மாற்ற வேண்டும். அண்மையில் பேராசிரியர் பொ. நவரட்ணத்தை மேற்கோள்காட்டி, செய்தியொன்று வெளியாகியிருந்தது. அச்செய்தியானது யாழ்ப்பாணத்திலே மேற்கொள்ளப்பட்டுவரும் உயிர் இரசாயனவியல் ஆய்வுகள் பற்றியதாகும்.

இத்தகைய செயற்பாடுகள்தான் தேவையானவை. கற்றோரது கல்வியறிவும், மற்றோரது அனுபவ அறிவும் இணைந்து கைகோர்க்குமாயின், காலங்காலமாகப் பேணப்பட்டு வந்த எமது இயற்கை வளங்கள் என்றுமே அருகிப் போகாது என்பது மட்டும்தான் நிதர்சனமான உண்மை.

No comments:

Post a Comment