An effort to bring back the memories of the hidden treasures of our rich culture and to change the way we live in...
Friday, September 17, 2010
உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யலாகாது!
அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனின் கூண், குருடு, செவிடு, நீங்கிப் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வையார்.
இத்தகைய அரிய குறைபாடுகளின்றிய மானிடப் பிறவியைப் பெற்று தமது அலட்சியப் போக்கினாலும் கவலையீனத்தாலும் அதனை இழக்கும், இழந்த பலரை நாம் கண்டிருப்போம். விபத்து என்ற ஒரு சொல்லினுள் மானிடப் பிறவியின் முடிவு அடங்கிவிடுவதை ஒரு போதும் ஜீரணிக்க முடியாது.
ஆனால் தினம் தினம் அதிகரித்துச் செல்லும் விபத்துக்களையும் அவற்றால் உருவாகும் உயிரிழப்புக்கள் மற்றும் அங்கவீனங்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளும் போது நாம் எவ்வளவு தூரம் அலட்சியமாக, கவலையீனமாக இருக்கிறோம் என்பதும் புரியும்.
ஏனெனில் எந்த ஒரு விபத்துடனும் அவ்விரு இயல்புகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டிருக்கின்றன.
செய்திப்பத்திரிகைகளிலே விபத்துக்கள் தொடர்பான செய்திகளுக்காக சில பக்கங்களைக் கூட ஒதுக்கிவிடலாம் என்றதான நிலையே இன்று காணப்படுகிறது. அங்குதான் முதலுதவியின் முக்கியத்துவமும் புலனாகிறது.
ஏனெனில், விபத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர், வைத்திய அல்லது அவசர உதவி கிடைக்கத்தாமதமாகிய ஒரே காரணத்தால் உயிரிழந்து விடுகிறார். அல்லது அங்கவீனராகிறார். அவசர உதவி உடன் கிடைத்தாலே, உயிரிழக்கும், அங்கவீனராகும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முடியும்.
இலங்கையின் நகரப்பகுதிகளில் விபத்துக்குள்ளான ஒருவர், சிகிச்சைக்காக அரச வைத்தியசாலையைச் சென்றடைய குறைந்தது 20 - 30 நிமிடங்கள் ஆகின்றன. வைத்தியசாலை வாசலிலிருந்து விபத்துப் பிரிவுக்குச் சென்று வைத்திய உதவியைப் பெற்றுக்கொள்ள மேலும் 20 நிமிடங்கள் ஆகிவிடுகின்றன.
விபத்து நடந்து ஏறத்தாழ 50 நிமிடங்களின் பின்னரே வைத்திய உதவி கிடைக்கிறது. விபத்தினால் பாரதூரமான காயங்களுக்கும் இரத்தப் பெருக்குக்கும் உள்ளாகும் நபரொருவர், தன் மூளைக்குத் தேவையான குருதி கிடைக்காமல் உயிரிழக்கிறார். ஏனெனில் மூளைக் கலங்கள் குருதி கிடைக்காமல் 3 நிமிடங்கள் மட்டுமே உயிர்வாழும் தன்மையன.
விபத்து நடந்த இடத்திலேயே அவசர உதவியொன்று கிடைத்திருக்குமானால் இத்தகைய சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படலாம் என்பதும் கண்டுகூடு.
முதலுதவியும் அவசர உதவிக்குள் அடங்கும். அடிப்படையில் முதலுதவி எனப்படுவது, திடீரென நோய் அல்லது விபத்து ஏற்பட்ட ஒருவருக்கு, வைத்தியரோ, பயிற்றப்பட்ட தாதியோ அல்லது அம்புலன்ஸ் வண்டியோ வரும்வரை அவ்விடத்தில் கிடைக்கக்கூடிய வசதிகளைக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட முறைக்கேற்றவாறு பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றுவதைக் குறிக்கும்.
இங்கே சில காரணிகளின் துணையுடன் முதலுதவி வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு உயிருடன் தொடர்புடைய விடயமாகும். நல்ல நோக்குடன் செய்யப்படும் பிழையான முதலுதவி கூட உயிரைப் பறித்துவிடும் என்பதை நாம் ஒருபோதும் மறத்தலாகாது.
முதலுதவியோ அல்லது அவசர உதவியோ வழங்குவதன் அடிப்படை நோக்கங்கள், பாதிக்கப்பட்டவரின் உயிரைக்காப்பாற்றல், அவரது நிலைமை மேலும் சீர்கேடடையாமல் பாதுகாத்தல், அவர் விரைவில் குணம் பெற உதவிசெய்தல் என்பனவாகும்.
அன்றாடம் நடைபெறும் கோர விபத்துக்களையும் அவற்றினால் பாதிக்கப்படும் உயிர்களையும் கருத்தில் கொள்ளும் போது நாமும் முதலுதவியைக் கற்று பிறருக்கு உதவினால் என்ன என்ற எண்ணம் கூடத் தோன்றலாம். முதலுதவி செய்பவர் அங்கீகரிக்கப்பட்ட முறைக்கமைய நடத்தப்பட்ட பாடநெறியைப் பயின்று, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் நடத்தப்படும் எழுத்து மூல, செயன்முறைப் பரீட்சைகளில் சித்தியடைந்தவராக இருக்க வேண்டும். அது மட்டுமன்றி அங்கீகரிக்கப்பட்ட காலாவதியாகாத முதலுதவிச் சான்றிதழை உடையவராகவும் இருக்க வேண்டும்.
இது சாதாரண நபரொருவர் முதலுதவியாளனாக மாறுவதற்குரிய அடிப்படைத் தகுதிகளாகும். ஆனால் முதலுதவி அல்லது அவசர உதவியை மேற்கொள்ளுவதற்கு அதுமட்டும் போதுமானதல்ல. முதலுதவியாளன், இரக்கம், பூரண அமைதி, கடும் உழைப்பு, சாமர்த்தியம், அளவுக்கு மீறி முதலுதவி செய்யாமை போன்ற குணாம்சங்களையும் தன்னுள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இலங்கையிலே, முதலுதவிப் பயிற்சி வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக புனித ஜோன் அம்புலன்ஸ், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன காணப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ அந்த நிறுவனங்களை அணுகி முதலுதவிப் பயிற்சியைப் பெற முடியும்.
விபத்திலே பாதிக்கப்பட்ட ஒருவரை முதலுதவி தெரிந்தால் மட்டுமே காப்பாற்ற முடியுமென்றில்லை.
நாம் விபத்தொன்று நடக்குமிடத்து காலங்காலமாகக் கையாண்டு வரும் தவறான நடைமுறைகளை இனியாவது தவிர்க்கமுயல வேண்டும். அவ்வாறு செய்தாலே பல உயிரிழப்புக்களையும் சேதங்களையும் குறைக்க முடியும்.
விபத்துக்குள்ளான ஒருவர் தொடர்பாக நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் அவரது உணர்ச்சி நிலை, சுவாச வீதம், உள், வெளிக்காயங்கள் மற்றும் நாடித்துடிப்பு என்பனவாகும்.
இந்த விடயங்களின் அடிப்படைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அன்றாடம் நாம் சந்திக்கும் மயக்கம், குருதிப்பெருக்கு, வலிப்பு, மாரடைப்பு, பாம்புக்கடி, தீக்காயம் போன்ற சம்பவங்களின் போது எவ்வாறு செயற்பட வேண்டும்? எவ்வாறு செயற்படக்கூடாது? என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தவறாகக் காட்டப்படும் அவசர உதவி முறைமைகள் மக்கள் மத்தியில் கூடிய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.
வலிப்பு வந்தால் இரும்பைக் கொடுப்பதும் மயக்கம் வந்தால் தண்ணீர் தெளிப்பதும் பாம்பு கடித்தால் கடித்த இடத்தில் வாயை வைத்து உறிஞ்சுவதும் மாரடைப்பு வந்தால் இதயப் பகுதியில் பலமுறை அழுத்துவதும் கூட அத்தகைய ஆதிக்கத்தின் வெளிப்பாடுகளே!
முன்னொரு காலத்திலே அவை நடைமுறையில் இருந்திருக்கலாம். ஆனால் காலத்துடன் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து வரும் பொழுது அம்முறைகளின் பிரதி கூலங்கள் ஆராயப்பட்டு பிற்காலங்களிலே அவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் மாறாக நாமோ, கற்றறிந்தவர்கள் சொல்வதையும் கருத்தில் கொள்ளாது, பழைய முறைமைகளையே இன்னும் கையாண்டு வருகிறோம்.
ஒருவருக்கு மயக்கம் ஏற்படும் சந்தர்ப்பத்திலே, உடனேயே முகத்தில் தண்ணீர் தெளிக்கும் செயலைப் பலர் மேற்கொண்டு வருகின்றனர். அது பாதிக்கப்பட்டவரின் நிலைமையை மென்மேலும் சீர்கெடச் செய்யும் சந்தர்ப்பங்களையே உருவாக்கும்.
அடிப்படையில் மயக்கம் ஏற்படுவது, மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவடைவதனாலேயே ஆகும். அது மட்டுமன்றி வேறு பல காரணங்களாலும் கூட மயக்கம் ஏற்படலாம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அத்தகையதோர் நிலையில் அவசர உதவியை வழங்குவதன் நோக்கம் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர் செளகரியமாக இருக்க உதவுதல் வேண்டும்.
வலிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு உடனேயே கையில் இரும்புத்துண்டைக் கொடுக்கும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. அவ்வாறு இரும்பையோ உலோகத்திறப்பையோ கொடுப்பதால் வலிப்பு குணம் பெறுவதில்லை. மாறாக அச்செயற்பாடு பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் ஏற்படவே வழிவகுக்கும்.
வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவருக்கு காயங்கள் ஏற்படாவண்ணம் செயற்பட வேண்டியதே அவசர உதவியாகும். அருகிலிருக்கும் தளபாடங்களையோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற வேண்டும். அத்துடன் அவரது தலை அடிபடாத வண்ணம் அவரை அணைத்து வைத்து வைத்திய உதவியை நாடுவதே சிறந்தது.
மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடனடியாக வைத்திய உதவியைப் பெற்றுக்கொடுப்பதே அவசர உதவியாகும். திரைப்படங்களில் காட்டப்படுவது போல் மார்பழுத்தங்களைக் கொடுக்கக்கூடாது.
ஒருவர் இதயத்துடிப்பும் சுவாசமுமின்றி நினைவிழந்திருக்கிறார் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே மார்பழுத்தமும் செயற்கைச் சுவாசமும் குறித்த விகிதத்தில் மாறி மாறி வழங்கப்படும். இத்தகைய அவசர உதவிகள் பயிற்றப்பட்ட ஒருவரால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாதே’ என முதியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். விபத்தொன்றின் போது வழங்கப்படும் அவசர உதவியைப் பொறுத்தவரையிலே இக்கூற்று மிகவும் பொருத்தமானதாகும்.
வெளிக்காயங்கள் காரணமாக சிறியளவிலோ அல்லது பெரியளவிலோ இரத்தப் பெருக்கு ஏற்படும் பொழுது காயத்தின் மேல் ஐஸ்கட்டியை வைக்கும் தவறான பழக்கமொன்றைக் கைக்கொள்கிறோம். மனித உடலானது தனக்குப் பாதிப்பொன்று ஏற்படுமிடத்து இயற்கையாகவே எதிர்ப்பைத் தோற்றுவிக்கும் வல்லமை மிக்கது.
வெளிக்காயமொன்று ஏற்படும் போது குருதிப்பெருக்கைத் தடுப்பதற்காக குருதிச்சிறுதட்டுக்கள் தொழிற்படத் தொடங்கும். பின்னர் இரசாயனப் பதார்த்தமொன்று சுரக்கப்பட்டு பைபிரினோஜன் என்ற வலை உருவாகும். இது குருதிக் கலங்களைச் சிறைப்படுத்திக் குருதிப்பெருக்கைக் குறைக்கும்.
உடல் தானே இவ்வாறு செயற்படும் சந்தர்ப்பத்தில், காயம் ஏற்பட்ட இடத்தில் நாம் ஐஸ்கட்டியை வைத்தால் அது பைபிரினோஜன் என்ற
இயற்கை வலையைச் சிதைத்து, குருதிப்பெருக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
சுளுக்கு போன்ற இழையங்கள் தொடர்பான பாதிப்புகளும் ஊமைக்காயங்களும் ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஐஸ்கட்டி வைத்து சுற்றப்பட்ட துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இங்கும் உடல் குருதிப் பெருக்கைத் தடுக்கும் வகையிலே செயற்படும். ஆனால் உடலின் உட்பகுதியில் குருதி உறைவதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆதலால் ஏலவே குறிப்பிட்டது போல ஒத்தடம் கொடுத்தலானது உள்ளகக் குருதி உறைதலைத் தடுக்கும்.
மாறாக நாம் கைக்கொள்ளும் நடைமுறையோ பாதிக்கப்பட்ட பகுதியை உரோஞ்சுதலாகும். இது தவிர்க்கப்பட வேண்டும்.
இன்னும் கிராமப்பகுதிகளிலே வெட்டுக்காயம் எற்பட்டால், கோப்பித்தூள் அல்லது மஞ்சள் தூள் வைத்துக் கட்டும் வழக்கம் காணப்படுகிறது. அவையெல்லாம் சரி, பிழை என்று வாதிடுவதற்கு அப்பால், இறுதியாக நவீன மருத்துவ உதவி நாடப்படுமாயின் அவற்றைத் தவிர்த்தல் நன்று என்றே கூறப்படுகிறது. ஏனெனில் அவ்வாறு செய்தால் வைத்தியசாலையில் காயத்தை துப்புரவு செய்ய மேலதிக நேரம் தேவைப்படுகிறது எனவும் கூறுகின்றனர். உயிரைக்காப்பாற்றல் என்ற செயலின் பின்னணியில் நேரம் இன்றியமையாத பங்கை வகிக்கிறது.
ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் உடனே கடிப்பட்ட இடத்தில் கத்தியால் கீறிட்டு வாய்வைத்து விஷத்தை உறிஞ்சும் பழக்கம் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. அது ஒருபோதும் செய்யப்படக் கூடாதது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் உறிஞ்சுபவரின் வாய்க்குழிக்குள்ளோ அல்லது சமிபாட்டுத் தொகுதியிலோ புண் காணப்படலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப்புண்ணினூடு விஷம் கடத்தப்பட்டு விஷத்தை உறிஞ்சிய வரது உடலிலும் நஞ்சு ஏறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீக்காயம் ஒன்று ஏற்படும் சந்தர்ப்பத்திலே, காயத்தின் மேல் பற்பசையைத் தடவுவதும் வாழைத்தண்டுச் சாற்றை விடுவதும் கூட பலர் மத்தியில் இன்றும் வழக்கத்திலிருக்கிறது.
அவ்வாறு செய்வதன் அடிப்படை நோக்கம், காயம் ஏற்பட்ட இடத்தைக் குளிர்மைப்படுத்துவதேயாகும். ஆனால் அதற்காக பற்பசை போன்ற பதார்த்தங்களைப் பாவிக்கும் போது, அவற்றில் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் பாரதூரமான விளைவுகளையும் கூட ஏற்படுத்தலாம். தீக்காயம், அபாயகரமானது எனக்கருதப்படாத பட்சத்தில் ஓடும் நீரிலே பாதிக்கப்பட்ட பகுதியை குறைந்தது, 10 நிமிடங்களாவது வைத்திருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தீக்காயம் அபாயகரமானதாக இருக்குமிடத்தில் வைத்திய உதவியை உடனடியாக நாடுவதே சிறந்தது.
அத்துடன் தீக்காயம் ஏற்பட்ட பகுதியை சுத்தமான பொலித்தீனால் மட்டுமே மூடி, பாதிக்கப்பட்டவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஒருபோதும் துணியாலோ அல்லது வேறு பொருட்களாலோ மூடக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவராயினும், விபத்தொன்றின் போது அவசர உதவியை மேற்கொள்ளச் செல்ல முதல் தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முதலிலே தம்மை அமைதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதால் எந்த ஒரு கிருமித்தொற்றும் தம்மை அடையவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதனால் தான் இத்தகைய சந்தர்ப்பங்களில் கையுறைகளின் பாவனை கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆதலால் பாவித்தபின் தூக்கி வீசக்கூடிய ஒரு சோடி கையுறையை எப்பொழுதும் கூடவே வைத்திருப்பது சிறந்தது.
வசதிகள் கிடைக்குமாயின் பாதிக்கப்பட்ட வரைக் கையாள முன்னரும் கையாண்ட பின்னரும் கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும்.
கையுறைகள் இல்லாத பட்சத்தில் பொலித்தீன் பைகளால் கைகள் காவலிடப்பட வேண்டும்.
கைகளிலே காயங்கள் இருந்தால் அவை நீர்புகாவண்ணம் பந்தனமிடப்பட்டிருக்க வேண்டும். வெற்றுக் கைகளால் காயங்களையோ உடற் திராவகங்களையோ தொடுதலைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல கழிவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையிலே அகற்றப்பட்டுள்ளன என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
காலங்காலமாக ஒரு சில நடைமுறைகளைக் கையாண்டு வந்தவர்களுக்குச் சில வேளைகளில் இவ்விடயங்களை ஏற்க முடியாமல் போகலாம். ஆனால் இவையாவுமே தர்க்க ரீதியாக நிரூபிக்கப்பட்டவை. இவற்றின் அடிப்படையிலேயே முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
விபத்தொன்றின் போது அவசர உதவியை வழங்குபவரோ அல்லது முதலுதவி செய்பவரோ வைத்தியர் அல்ல என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது. ஆதலால் வைத்திய ஆலோசனையின்றி எந்த ஒரு மருந்தையும் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கக்கூடாது.
அவசர உதவி கிடைத்திருந்தால் இன்று மறைந்து போன உயிர்கள் பல காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று மனம் எண்ணுகிறதல்லவா? அவசர உதவி தகுந்த நேரத்தில் சரியாகக் கிடைக்க வேண்டும். அவ்வாறு நாம் வழங்கும் உதவி சரியானது என உறுதி செய்வதற்கு பிழையான செயற்பாடுகள் உதவி வழங்கப்படுவதன் நோக்கங்கள் போன்றவை பற்றிய அறிவு அவசியம். அத்துடன் அவசர உதவி வழங்கும் திறன் புத்தக அறிவினால் ஒரு போதும் மேம் படாது. செய்முறை அறிவு மட்டுமே அத்திறனை மேன்படுத்தும்.
தெரியாததைச் செய்வதை விட செய்யாமல் இருப்பதே சிறந்தது. அதுவே பல உயிர்களைக் காப்பாற்றிவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment