Friday, December 18, 2009

வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?


தொங்கும் கூட்டம் நடுவே
தொத்திப்பாய்ந்து ஒற்றைக்காலில்
ஒருகைப்பிடியில் அலைந்து
நின்றான அவன்!
சட்டெனத்திரும்பி
யன்னலினூடே ஒடும் மரங்களை
அதிசயித்துப்பார்த்து
பாவனை செய்தேன்!
ஒருமணி நேரம்
ஒற்றைக்காலில்
தொங்கிக்களைத்தவன்
ஏக்கமாய் முகம்பார்த்தான்!
என் இருக்கைத்தலைமேல்
அழகுவாசகமாய்
‘இது வலுவிழந்தோருக்கு’!

என்று யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறான் கவிஞனொருவன். தமது சுயநலத்திற்காக மனித நேயத்தை மண்ணிற்குள் புதைக்கும் விந்தையான மனிதர்கள் நிறைந்த இப்பூவுலகைச் சளைக்காது எதிர்கொள்ளும் வலுவிழந்தோர் பாராட்டப்பட வேண்டியவர்களே.
இன்று ‘வலுவிழந்தோர்’ எனும் பதமானது அகராதிகளில் ‘மாற்றுத்திறன் படைத்தோர்’ எனும் பதத்தால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் உடல், உள ரீதியான குறைபாடு காரணமாகத் தமது வாழ்வியல் தேவைகளைச் சுயமாக எதிர்கொள்ளமுடியாதவர்களே ‘மாற்றுத்திறன் படைத்தோர்’ எனச் சட்ட ரீதியாகக் கருதப்படுகின்றனர்.
சமூக அபிவிருத்தி அமைச்சு, விழிப்புலன், செவிப்புலன், பேச்சு, நகருதல், புரிந்து கொள்ளுமாற்றல், உளம் சார்ந்த விடயங்கள் தொடர்பான வலுவின் இழப்பைக் கருத்தில் கொண்டே இத்தகைய மாற்றுத்திறன் படைத்தோரை வகைப்படுத்துகிறது.
வலுவிழத்தல் எனப்படுவது பிறப்பினாலோ அல்லது பிறந்த பின்னர் ஏற்பட்ட விபத்து, நோய் போன்ற காரணிகளினாலோ உருவாகலாமெனக் கருதப்படுகிறது.
வயது வித்தியாசமின்றி விதிவசத்தால் எவரும், எச்சந்தர்ப்பத்திலும் வலுவிழந்தவராக மாறலாமென்ற உண்மையை மனித மனம் ஒருபோது உணருவதில்லை. வலுவிழந்தோரை வேற்று மனிதர்களாக நோக்கும் பிற்போக்கான மனப்பாங்கு இன்றும் எம்மிடத்தே காணப்படுகிறது.
உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம், வலுவிழந்தோரும் எந்தவகையான வேற்றுமைகளுமின்றி மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்க உரித்துடையோரெனவும் குறிப்பிடுகிறது. சாதாரண மனிதர்களைப்போல மாற்றுத்திறனுடையோருக்கும் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தவும், தாம் விரும்பிய தொழிலை மேற்கொள்ளவும், நியாயமான வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கவும் உரிமையுள்ளதென்பது சமூகத்தால் முற்று முழுதாக உணரப்படவில்லை.
இன்று முழு உலகுமே எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுள் வலுவிழத்தல் தொடர்பான பிரச்சினைகளே முன்னணியில் திகழ்கின்றன. குழந்தையொன்று வலுவிழந்த குழந்தையாகப் பிறக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதிகரிக்கும் புதிய வகை நோய்களும் விபத்துக்களும், வன்முறைகளும் உலகளாவிய ரீதியில் வலுவிழந்தோரின் சதவீதத்தை அதிகரிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன.
இத்தகைய மாற்றுத்திறன் படைத்தோர், அடிப்படை மற்றும் புனர்வாழ்வு வசதிகளுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்ற வறிய நாடுகளிலேயே அதிகளவில் வசிக்கின்றனர்.
உலக சனத் தொகையில் 5 சதவீதமானோர் மாற்றுத்திறனுடையவர்களெனவும் அவர்களில் இருபது சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்களெனவும் உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.


2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசனத்தொகை மதிப்பீடானது இலங்கையின் சனத்தொகையில் 1.6 சதவீதமானோர் மாற்றுத்திறனுடையோரெனக் குறிப்பிடுகிறது.
2003 ஆம் ஆண்டு ஐ. நா. ஸ்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினடிப்படையில் இலங்கையின் சனத்தொகையில் ஏழு சதவீதமானோர் மாற்றுத்திறனுடையோரெனத் தெரிய வருகின்றது.
தற்போது இச்சதவீதம் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கலாமெனவும் கருத்தப்படுகிறது.
இலங்கையின் இலவசக் கல்வித் திட்டம், சகலரும் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமைகிறது. மாற்றுத்திறனுடையோரில் 69.3 சதவீதமானோர் பாடசாலைக் கல்வியை ஏதோ ஒரு மட்டம் வரையிலாவது பெற்றிருக்கின்றனர். அவர்களில் 3 சதவீதமானோர் மட்டுமே, க.பொ.த. உயர்தரக் கல்வித் தகைமைகளையுடையவர்களாவர்.
பல்கலைக்கழக அனுமதியில் மாற்றுத்திறன்மிக்கோருக்காக, குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனுடைய மாணவர்களை இன்று சகஜமாகக் காண முடிகின்ற போதிலும், அவர்கள் கல்வியை இடையில் நிறுத்துவதற்கு சக மனிதர்களின் ஆதரவின்மை, போக்குவரத்துப் பிரச்சினைகள், இவர்களின் கல்வி தொடர்பாகப் பெற்றோர்களின் மனப்பாங்கு, அவர்கள் கற்பதற்கான உபகரணங்கள், மற்றும் வசதிகள் தொடர்பான குறைபாடுகள் போன்ற பல காரணிகள் ஏதுவாக அமையலாம்.
இலங்கையில், தொழில்புரியக் கூடிய மாற்றுத்திறனுடையோரில் 85 சதவீதமானோர் தொழில் வாய்ப்பற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
அரச கருமபீடங்களின் ஆளணியில் 3 சதவீதமான இட ஒதுக்கீடு மாற்றுத்திறனுடையோருக்காக வழங்கப்பட்டுள்ள போதிலும் இத்தகைய சலுகைகள் தொடர்பான விழிப்புணர்வின்மையும், அவர்கள் நடைமுறையில் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களும் அவர்கள் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான தடைக்கற்களாக அமைகின்றன.
அரச, அரசசார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் மாற்றத்திறனுடையோருக்குச் சமூக அங்கீகாரத்தை வழங்கும் முகமாகச் சமூக மட்டத்தில் அவர்களுக்கான அமைப்புக்களைத் தோற்றுவிப்பதிலீடுபடுவதுடன் பல்வேறுபட்ட செயற்திட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
பிறப்பினால் ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்க்க, கிராமங்கள் தொட்டு நகரங்கள் வரை பெரும்பாலான கர்ப்பிணித் தாய்மாரின் சுகாதார, மருத்துவத் தேவைகள் தொடர்பான சேவைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் மாற்றுத்திறன் மிக்கோர் தொடர்பாகத் தேசிய ரீதியிலான பல்வேறுபட்ட கொள்கைகள் நடைமுறையிலுள்ளன. 1988 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த பொது நிர்வாகச் சுற்று நிருபத்திலிருந்து 2003 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வலுவிழத்தல் தொடர்பான தேசிய கொள்கையுட்படப் பல கொள்கைகளையும் சட்டங்களையும் உதாரணமாகக் கூறலாம். இக்கொள்கைகளினடிப்படையில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
1997 ஆம் ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வி தொடர்பான சீர்திருத்தங்கள், மாற்றுத்திறனுடைய சிறுவர்களையும் ஏனைய சிறுவர்களுடன் ஒருங்கே இணைத்துக் கல்வியைக் கற்பிக்க வழிவகுத்தது. தேசிய கல்வி நிறுவகம், மாற்றுத்திறனுடையோருடைய கல்வியின் அபிவிருத்தி தொடர்பான பல செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையின் சுகாதாரம் தொடர்பான கொள்கைகள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும் நோய்கள் மற்றும் பிறவிக்குறைபாடுகளைத் தடுப்பதிலும் பெரும்பங்காற்றுகிறது. மாற்றுத்திறனுடையோரை விளையாட்டுக்களிலீடுபடுத்தும் செயற்திட்டங்களும் நடைமுறையிலுள்ளன.

விளையாட்டு வீரர்களிலிருந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கு நிகராக மாற்றுத்திறன் படைத்தோரையும் விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கத் தூண்டும் வகையில் ‘பராலிம்பிக்’ எனும் பெயரிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டி நான்கு வருடங்களுக்கொருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
1948 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப தின வைபவத்தின் போது இரண்டாம் உலக மகா யுத்தத்தால் வலுவிழந்தவர்களாக மாற்றப்பட்ட போர் வீரர்களை ஊக்குவிக்கு முகமாக அவர்களுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1952 ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடங்களுக்கொருமுறை பராலிம்பிக் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இவை தவிர உலகளாவிய ரீதியிலும், நாடளாவிய ரீதியிலும் இத்தகைய பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மாற்றுத் திறனுடைய இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சிகளும், தகவல் தொழில்நுட்பத் துறையிலான அறிவூட்டல் நடவடிக்கைகளும், தொழில் வாய்ப்புக்களும் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றன.
இவைதவிர அவர்களின் திறன்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சிகள் ஆற்றுப்படுத்தல் சேவைகள், சிறிய அளவிலான கடன் திட்டங்கள், வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகள், இளைஞர் கழகங்களின் உருவாக்கம், கலாசார நிகழ்வுகள், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் மாற்றாற்றலுடையோர் தொடர்பான கொள்கைகளை வகுப்பதிலும், ஆய்வுகளை மேற்கொள்வதிலும், பயிற்சி நிகழ்வுகளைத் திட்டமிட்டு, ஏற்பாடு செய்து, மதிப்பீட்டை மேற்கொள்ளவதிலும் மாற்றாற்றலுடைய இளைஞர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படுகிறது.
தேர்தல்களில் மாற்றுத்திறனுடையவர்களின் வாக்களிக்கும் உரிமையை மதிக்கும் வகையில் அவர்கள் இன்னொருவரின் உதவியுடன் வாக்களிக்கக் கூடிய வகையிலான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவைதவிர போக்குவரத்து முறைமைகளிலும், பாடசாலைகள், பொது இடங்கள் போன்றவற்றிலும் மாற்றாற்றல் மிக்கோர் சகஜமாகத் தொழிற்படக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
குடும்பத்தவர்களும் பெற்றோர்களும் இத்தகைய விடயங்கள் தொடர்பாக அறிவூட்டப்படுவதுடன் அவர்களுக்கு இவ்விடயம் தொடர்பான ஆலோசனைகளையும் ஆற்றுப்படுத்தல் சேவைகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாற்றாற்றலுடைய வர்களுக்கான ஓய்வூதியத்திட்டங்களும் காப்புறுதித் திட்டங்களும் நடைமுறையிலுள்ளன.
அத்துடன் அவர்கள் ஓரளவாவது சுயமாகத் தொழிற்படக் கூடிய வகையில் முச்சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள், செவிப்புலன் மற்றும் விழிப்புலனிழந்தோருக்கான கருவிகள், ஏனைய அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களுட்படப் பல உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனுடையோரின் வாழ்வை மேம்படுத்துமுகமாக உலக சுகாதார ஸ்தாபனமும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அத்தகையோர் தொடர்பான தேசிய கொள்கைகளை வகுப்பதற்கும், அக்கொள்கைகளினடிப்படையில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்குமான உதவிகளை வழங்கிவருகிறது. சர்வதேச ரீதியிலான வகைப்படுத்தலினடிப்படையில் நாடுகளில் காணப்படும் பல்வேறுபட்ட சுகாதார நிலைகளை இனங்காண்பதற்கும் உதவி வருகிறது.
வலுவிழத்தல் தொடர்பான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே இனங்கண்டு அவற்றைப் பரிகரிக்க வழிசெய்வதுடன் பாதிக்கப்பட்டோரை வழி நடத்தத் தேவையான உபகரணங்கள், அவர்களுக்கேற்றவாறு அவர்கள் வாழும் சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டிய முறைமைகள் தொடர்பான உதவிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக வறிய மக்கள் மத்தியில் மனித உரிமைகள் தொடர்பாகவும் யாவருக்கும், யாவற்றிலும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பது பற்றியும்
இவையாவற்றிற்கும் அப்பால் நாம் ஒவ்வொருவரும் எமக்கான பொறுப்பையுணர்ந்து செயற்பட வேண்டும். எதிர்காலத்தில் நாம் வலுவிழந்தோராக மாறுவதற்கான சந்தர்ப்பங்களையும், வலுவிழந்தோரை உருவாக்கும் சந்தர்ப்பங்களையும் குறைப்பதற்கான முயற்சிகளிலீடுபட வேண்டும்.
இன்று ஒருவர் வலுவிழந்தவராக மாறுவதற்கான முக்கிய காரணிகளாக விபத்துக்களும் வன்முறைகளுமே அமைகின்றன. விபத்துக்களானவை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எமது கவனக்குறைவினாலேயே ஏற்படுகின்றன.
வீடுகளிலும் வெளியிடங்களிலும் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட ஆரம்பித்தால், பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படலாம். அதேசமயம், விபத்து ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றுவதுடன், எமக்கும், சுற்றியுள்ளோருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் செயற்படக்கூடிய விதமாக சம்பவ முகாமைத்துவம், மற்றும் அடிப்படை முதலுதவி தொடர்பான அறிவை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருத்தல் அவசியமாகிறது.
வன்முறைக் கலாசார மற்ற எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதிலும் நாம் பெரும் பங்கை வகிக்க வேண்டும்.
மாற்றுத்திறன் படைத்தோரையும் சக மனிதர்களாகவே கருத வேண்டும். அவர்களின் மனம் நோகும்படியான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க வேண்டும்.
எமது சொல்லும் செயலும் அவர்களை ஊக்கப்படுத்துவதாக மட்டுமே அமைய வேண்டும். மாற்றுத்திறனுடைய ஒருவரைப் பற்றி எழுதும் சந்தர்ப்பத்தில் அவரால் இழக்கப்பட்ட வலுவுக்கு முக்கியத்துவம் வழங்காமல் அந்த நபருக்கும் அவரின் ஆற்றலுக்குமே முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். ‘விழிப்புலனிழந்த சிறுமி’, ‘ஊமைச் சிறுவன்’ போன்ற சொற்பதங்களின் பிரயோகம் தவிர்க்கப்படுதல் நன்று.
மாற்றுத்திறன் படைத்தோரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களையும் சக மனிதர்களாகக் கருதிச் சமமாக அமர்ந்து கதைத்தல், கை குலுக்குதல் போன்ற சாதாரண செயற்பாடுகளில் பங்கெடுக்க வேண்டும். அத்தகைய நபரொருவரின் பேச்சு தெளிவில்லாமல் இருப்பதன் காரணமாக அவர் சொல்வதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியாது போனால், மீளக்கேட்டறிய வேண்டுமே தவிர விளங்கிக் கொண்டது போல் பாவனை செய்யக்கூடாது.
மாற்றுத்திறன் படைத்த ஒருவருக்கு உதவி தேவைப்படுகிறதென அறிந்தால், அவரின் அனுமதியைப் பெற்ற பின்னர் உதவி செய்வதே சிறந்தது.
செவிப்புலனிழந்த ஒருவருடன் கதைக்க வேண்டுமெனின் அவருடைய தோளை மெதுவாகத்தட்டி அவரது முகத்தை நோக்கித் தெளிவாகக் கதைக்க வேண்டும்.
வெளிநாடுகளில் நாய் போன்ற மிருகங்களுக்கு மாற்றுத்திறன் படைத்தோரை வழிநடத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்பயிற்சிகளினடிப்படையில் மாற்றுத்திறன் படைத்தோரை அவை வழி நடத்திச் செல்லும். அவ்வாறு வழி நடத்திச் செல்லப்படும் மாற்றுத்திறனுடையோரைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களை வழி நடத்திச் செல்லும் மிருகங்களைச் சீண்டக் கூடாது. அவ்வாறு சீண்டினால் அம்மிருகங்கள் தமது பயிற்சியை மறந்து செயற்பட ஆரம்பிக்கும்.
இது அம்மாற்றுத் திறனுடையோரை அசெளகரியங்களுக்குள்ளாக்கும். சக்கர நாட்காலி பாவிப்போருடன் கதைக்கும் போது அவர்களது கண்மட்டத்திலிருந்து கதைக்க வேண்டும். அத்துடன் அவர்களை வழிநடத்தும் உபகரணங்களைப் பிடித்தபடி கதைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எமது குழந்தைகளோ, சகோதரரோ, உறவினர்களோ அல்லது நண்பர்களோ மாற்றாற்றலுடையவர்களாகவிருந்தால், அவர்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலம் காத்திருக்கிறது என்ற எண்ணத்தை ஊட்டும் வகையில் நாம் செயற்பட வேண்டும். அத்துடன் நாம் இறந்தபின் எமது கண் போன்ற உறுப்புக்களைத் தானம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
வெகுசனத் தொடர்பு ஊடகங்களும் பொதுமக்கள் மத்தியில் மாற்றாற்றலுடையவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னணி வகிக்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் செவிப்புலனற்றவர்களுக்காக ஒரே நேரத்தில் சைகை மொழி மூலமும் உபதலைப்புக்களுடன் ஒளிப்பரப்ப முயலலாம்.
விழிப்புலனிழந்தவர்களின் வாழ்வில் புதிய திருப்புமுனையை உருவாக்கிய ஹெலன் கெல்வர், நவீன விஞ்ஞான யுகத்திற்கு வித்திட்ட அணு விஞ்ஞானி அல்பேர்ட் ஜன்ஸ்டீன், இன்று முழு உலகையுமே ஒளியூட்டிக் கொண்டிருக்கும் மின் குமிழ்களை முதன் முதலில் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன் தொட்டு உலகப் புகழ்பெற்ற பெளதீகவியலாளரான சார்ள்ஸ் ஹோக்கின்ஸ், பாரம்பரிய நடனக் கலைஞரான சுதாசந்திரன் வரை மாற்றாற்றலுடைய பலர் எத்தனையோ சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றார்கள். இன்னும் முகம் தெரியாத பலர் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களெல்லாம், “பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்ற பாரதியின் வரிகளை நெஞ்சுயர்த்திப்பாடுபவர்களாகவே தெரிகின்றனர். மாற்றுத்திறன் படைத்தோரின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழும். இத்தகையோரின் வழியில் ஏனையோரும் சென்று சாதிக்க நாம் யாவரும் ஒன்று சேர்ந்து வழிசெய்ய வேண்டும்.
உலகமயமாதலையும் தாண்டி வேற்றுமைகளின்றிய உலகைத் தோற்றுவிக்க ஒன்றிணைவோமாக!

No comments:

Post a Comment