Tuesday, December 22, 2009

மற்றைய இனங்களை வாழவிடாமல் செய்த குற்ற உணர்வுடன் கிடைக்கும் சுபிட்சம் தேவையா ??


‘பருவநிலை மாற்றத்தால் தேனீக்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.’
‘உலகெங்கும் 17,000க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்து போகும் ஆபத்தான நிலையில் இருப்பதாக இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமையம் (IUCN) சிவப்புப் பட்டியலை வெளியிட்டுள்ளது.’
‘இதுவரை இனங்காணப்பட்டுள்ள 704 பவளப் பாறை இனங்களில் சுமார் 231 இனங்கள் அருகிவரும் இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டு இவற்றில் 13 இனங்களே இவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தன.’
‘பண்டா கரடிகளுடன் சேர்ந்து உயிர் வாழ்ந்த ஸ்டெகோடான் யானை (பெரிய தந்தங்களையுடையது), சீனக் காண்டாமிருகம் போன்ற பல உயிரினங்கள் ஏற்கனவே அழந்துவிட்ட நிலையில், இன்று சீனாவில் மட்டுமே இப்பண்டாக் கரடிகள் காணப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை 1600 மட்டுமே.’
இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பல்வேறுபட்ட செய்திகள் எம்மை எட்டுகின்றன. ஆனால் நாம் அவற்றைப் பற்றி ஆழச் சிந்திக்கத் தலைப்படுவதில்லை. இயந்திரமயமான உலகத்திலே, செய்தியொன்றை அறிவதே பெரிய விடயமாகக் கருதப்படுகின்ற நிலையில் அறிந்த செய்தியைப் பற்றிச் சிந்திப்பதென்பது எதிர்பார்க்கப்பட முடியாதது.
இற்றைக்கு 3.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் வெறும் கற்களும் மண்ணும் உவர் நீருமே காணப்பட்டன. பின்னர் அமினோ அமிலங்கள் உருவாகி அதன் பின்னர் வாய்ப்பான சூழல் நிலைமைகள் உருவாகி, ஒரு கலவுயிர், இருகலவுயிர், பல கலவுயிரென உயிர்கள் தோற்றம் பெற்றன. புல்லாகிப் பூண்டாகிப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்...’ என மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் பாடுகின்றார்.
படிமங்களில் கண்டறியப்பட்ட புதிய வகை எலும்புக் கூடுகள் இப்பூமியில் இன்னும் அறியப்படாத உயிரினங்கள் வாழ்ந்து வந்தமைக்கான ஊகங்களுக்குச் சான்றுகளாக அமைந்தன. அவற்றின் தற்போதைய நிலையென்ன? அவை எவ்வாறு அழிந்துபோயின? போன்ற பல கேள்விகள் காலங்காலமாக வினவப்பட்டு வந்தன.
இந்நிலையில் சார்ள்ஸ் டார்வின் எனும் விஞ்ஞானி கூர்ப்புக்கொள்கையை முன்வைத்தார். அது பல சந்தேகங்களுக்குத் தீர்வாக விளக்கங்களையளித்தது. தக்கன பிழைக்கும் நலிந்தன அழியும் என்ற தக்கனப் பிழைத்தல் கொள்கைக்கு வித்திட்டது.
இனமொன்று அழிந்து போவதற்கு நேரடிக் காரணங்களும் பல மறைமுகமான காரணங்களும் காணப்படுகின்றன.
புவியில் காணப்படும் இனங்களின் வேறுபட்ட தன்மையே உயிர்ப் பல்வகை மையாகும். 1972 இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் புவிமாநாட்டில் உயிரியல் பல் வகைமையென்பது ‘தாங்களும் ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல் மற்றும் ஏனைய நீர் சார் சூழலியல் முறைமைகள், நீர் வாழ் சூழலியற் தொகுதிகளுட்பட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை ஆகும்’ என்ற வரைவிலக்கணம் முன்வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் உயிரினங்களுக்கிடையிலான சமநிலை இயற்கையாகவே பேணப்பட்டு வந்தது. ஆனால் காலப் போக்கில் உருவாகிய பல காரணங்கள் இந்த இயற்கைச் சமநிலையைக் குலைக்க ஆரம்பித்தன. இதனால் பல உயிரினங்கள் அழிந்தன. பல, அருகி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
அச்சுறுத்தலுக்குள்ளாகும் உயிரினங்கள் பற்றிய தகவல்கள் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமையத்தினால் சிவப்புத் தரவுப் பட்டியல் எனும் பெயரில் 1981ஆம் ஆண்டு முதல் கிரமமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தகவற் பட்டியலானது இவ்வுயிரினங்களை, அழிவடைந்த உயிரினங்கள் முதல் குறைந்தளவில் பாதிக்கப்படக் கூடிய உயிரினங்கள் வரை வகைப்படுத்தியிருக்கின்றது. அவ்வகைப்படுத்தல் வருமாறு
1. அழிந்துபோன உயிரினங்களான கரீபிய கடற்சிங்கம், தூதுசெல்லும் புறா போன்றன.
2. காடுகளில் அழிந்து, சுதந்திரமற்றுத் தனித்தனியாக மிருகக் காட்சிச் சாலைகள் போன்ற இடங்களில் வாழும் உயிரினங்கள்.
3. எதிர்காலத்தில் நிச்சயமாக அழிந்து போகக் கூடிய அபாயகரமான நிலையிலுள்ள உயிரினங்களான ஜாவா காண்டாமிருகம் போன்ற உயிரினங்கள்
4. தற்போது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள, எதிர்காலத்தில் அழிந்து போகக் கூடுமென எதிர்பார்க்கப்படும் நீலத் திமிங்கிலம், பனிச் சிறுத்தைகள், இராட்சத பண்டா போன்ற இனங்கள்.
5. எதிர்காலத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகி அழிந்து போகலாமென எதிர்பார்க்கப்படுகின்ற சிங்கம், துருவக் கரடி, நீலத்திமிங்கிலம் போன்ற இனங்கள்.
6. எதிர்காலத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகலாமென எதிர்பார்க்கப்படக்கூடிய இனங்கள்
7. வாழ்வியலுக்கு உடனடியான அச்சுறுத்தல் இல்லாத இனங்கள்.
8. அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான தரவுகள் பற்றாக்குறையாகவுள்ள இனங்கள்.
9. அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படாத இனங்கள்.
இவை இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாவதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
ஒவ்வொரு இனமும் தனித்துவமானதாகவே கருதப்படுகின்றது. பல்வேறு காரணிகளால் தான் வாழும் சூழலில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத இனமும், புதிய சூழலை ஏற்று வாழமுடியாத இனமும் அச்சுறுத்தலுக்கோ அல்லது அழிவுக்கோ உள்ளாகுமென்பதே அடிப்படை. தற்போது சூழல் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளும் அரசாங்கங்களும் மனிதனால் ஏற்படும் அச்சுறுத்தலிலிருந்து இனங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் பல பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.

தேவைக்கு மேலதிகமாக அறுவடை செய்தல், சூழல் மாசு, இனங்களின் இயற்கை வாழ்விடங்களை அழித்தல், அவற்றை அழிக்கும் புதிய இனங்களின் அறிமுகம், அவற்றினால் ஏற்படும் உணவுக்கான போட்டி, உயிரினங்களை வேட்டையாடுதல் மற்றும் ஏனைய பல காரணிகள் போன்றவை முக்கியமாக நோக்கப்பட வேண்டியவை.
பல இனங்கள் அவதானிக்கப்படாமலே மறைந்து போயுள்ளன. இனங்களின் குடித்தொகை மரபுரிமையியல் மற்றும் குடியியல் தொடர்பான நிகழ்வுகள், கூர்ப்படைதலைப் பாதித்து அவற்றின் அழிவுக்குக் காரணமாகின்றன. சிறிய குடித்தொகையையுடைய இனங்கள் இத்தகைய நிகழ்வுகளின் போது அதிகளவில் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது.
வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைகள் தனிப்பட்ட இனங்களின் அழிவுக்குப் பின்னணியாக அமைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
இயற்கைத் தேர்வானது தக்கனவற்றைப் பிழைக்க வைப்பதுடன் நலிந்தனவற்றை இல்லாதொழிக்கும் பாரம்பரிய இயல்பின் பல்வகைமையின் இழப்பானது, உயிரினங்கள் அழிவடைவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கும். உயிரினங்களின் இனப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதால் உயிரினங்களின் எண்ணிக்கை குறைவடைந்து காலப் போக்கில் அவை அழிவும் சாத்தியக் கூறுகளே அதிகளவில் காணப்படுகின்றன.
கலப்பு முறைப் பிறப்பாக்கம் போன்ற காரணிகள், இயற்கையாகவே கூர்ப்படைந்து அப்பிராந்தியத்திற்கே உரித்தானவையாகக் காணப்படும் இனங்களின் அழிவுக்குக் காணமாகின்றன.
குறித்த பிராந்தியத்திற்குரியதல்லாத இனங்கள் அப்பிராந்தியத்தினுள் கொண்டுவரப்படும் பொழுது மனிதனால் வலுக்கட்டாயமாகவோ அல்லது வாழ்விடங்கள் திருத்தியமைக்கப்படுவதாலோ சுதேச இனங்களுடன் கலப்புப் பிறப்பாக்கத்திலீடுபட்டு அவற்றின் நிலைப்பில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் இயற்கையாகவே கூர்ப்படைந்து வருமினங்கள் நலிவடைந்த கலப்பினங்களாக மாற்றப்படுவதால் அவை இயற்கைச் சூழலுடன் ஒன்றித்து நீண்ட காலம் வாழ முடியாமல் அழிந்துபோகும்.
வாழ்விடங்களின் தரம் குறைவடைதல், அவ்வினங்கள் நீண்ட காலம் உயிர்வாழ முடியாமற் செய்வதுடன் அவற்றை அழிவடையச் செய்வதிலும் பெரும் பங்குவகிக்கின்றது. வாழிடத்தின் தரமானது சூழலில் இனங்கள் வாழ முடியாதவாறு நச்சுத் தன்மையுடையதாக மாறுதல் போன்ற நேரடிக் காரணிகளாலும் மறைந்து வரும் வளங்களுடனோ அல்லது மற்றைய போட்டியினங்களுடனோ போட்டி போட முடியாதவாறு மட்டுப்படுத்தப்படல் போன்ற மறைமுகமான காரணங்களும் பங்கு வகிக்கலாம்.
சூழல் நச்சுத்தன்மையாக மாறுவதால் அச்சூழலின் அங்கத்தவர்கள் யாவருமே கொல்லப்படுவதால் இனங்களும் மிக வேகமாகக் கொல்லப்படும். நச்சுத்தன்மை மட்டம் குறைவாகவிருக்கும் சந்தர்ப்பங்களில் சூழலானது நீண்டகால நோக்கில் இனங்களின் ஆயுட்காலம், இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல், போட்டியிடும் தன்மை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வாழ்விடங்களின் தரம் இழக்கப்படுதலும் ஏனைய தேவைகளும் பொருளாதார ரீதியாக அவ்வாழ்விடங்கள் அழிக்கப்படுதலுக்கு வழிவகுக்கும். அயன மண்டல மழைக் காடுகள் பரந்தளவில் அழிக்கப்பட்டு இன்று புல் நிலங்களால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளன.
அடர் காடுகள் இல்லாதொழிக்கப்படுவதால் பல இனங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு அவை உயர்வாழ முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக்கப்பட்டன. அடர்ந்த மரங்களின் நிழலையே ஆதாரமாகக் கொண்டு வாழும் ஒருவகைப் பாசித் தாவர இனம், காடுகள் அழிக்கப்பட்டதால் நிலத்தை நேரடியாக அடையும் சூரிய ஒளியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்து போனமையைக் குறிப்பிடலாம்.
அழிந்துவரும் வளங்களும் புதிய போட்டி இனங்களும் கூட வாழிடங்களின் தரம் இழக்கப்படுவதில் பங்காற்றுகின்றன. பூகோளம் வெப்பமயமாதலானது சில இனங்களின் புவியியல் எல்லைகள் அதிகரிக்கப்பட வழி வகுத்ததால் வேறு சில இனங்களின் வாழ்விடம் அத்துமீறிப் பறிக்கப்படுவதற்குக் காரணமாகியது. அத்துடன் அத்தியாவசியமான வளங்களான நீர், மற்றும் உணவு போன்றனவும் வரையறுக்கப்பட்டுள்ளமையால் இனங்கள் அழிந்துபோகும் சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுகின்றன.
மனிதர்கள் புராதன காலம் தொட்டு உலகின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு விலங்குகளையும் தாவரங்களையும் கொண்டு செல்கின்றார்கள். உணவுக்காகக் கால்நடைகள் தனித் தீவுகளில் விடப்பட்டமையும், படகிலிருந்து எலிகள் தப்பிப்பமையும் கூட இச்செயற்பாட்டின் விளைவுகளே.
இத்தகைய நடைமுறைகள் பல வேளைகளில் தோல்வியில் முடிந்தாலும் இவ்வாறு ஆக்கிரமிக்கும் வேற்றுப் பிராந்திய இனங்கள் சர்வதேச இனங்களை உண்பதாலும் அவற்றுடன் போட்டியிடுவதாலும் ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களால் அவற்றை நோய் வாய்ப்படுத்தியும் அவற்றை அழிப்பதில் நேரடியாகப் பங்களிக்கின்றன. அதே சமயம் அவற்றின் வாழ்விடங்களை அழிப்பதாலும் வாழ்விடங்களின் தரத்தை இழக்கச் செய்வதாலும் மறைமுகமாகப் பங்களிக்கின்றன.
ஒரு இனமழிவதால் அதில் தங்கியுள்ள இனங்களும் அழிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
பூகோளம் வெப்பமயமாதலானது நீண்டகால நோக்கில் உயிரினங்கள் அழிவடைவதற்குக் காரணமாகின்றது. இன்று இருக்கும் நிலத் தாவரங்கள், விலங்குகளில் 25 சதவீதமானவை 2050ஆம் ஆண்டளவில் அழிந்து போகுமென எதிர்வு கூறப்படுகிறது. அதேசமயம் இன்று இருக்கும் இனங்களில் 33 – 50 சதவீதமான இனங்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன என்ற உண்மை மறுக்கப்பட முடியாதது.
காபனீரொட்சைட் மட்டம் மற்றும் வெப்பநிலையின் வேகமான அதிகரிப்பு, ஆயிரக் கணக்கான இனங்கள் அழிந்து போகக் காரணமாகும். காலநிலை மாற்றம் மட்டுமன்றிக் காடழிப்பும் இனங்களின் அழிவுக்குக் காரணமாகின்றது.
இனங்கள் காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தம்மை மாற்றியமைக்குமெனும் கருத்து பலரால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளான மாற்றமடையும் மழை வீழ்ச்சி, பருவகாலங்கள் மற்றும் வெப்ப நிலை, உயரும் கடல் மட்டம், மாற்றமடையும் சூழல் தொகுதியின் கட்டமைப்பு, கிடைக்கும் உணவின் அளவிலான மாற்றம் போன்ற பல காரணிகள் பாதிப்பை எற்படுத்தும். படிப்படியான காலநிலை மாற்றத்தினாலேயே பெரியளவினாலான அழிவுகள் இடம்பெற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் காலநிலை மாற்றமான புதிய இனங்களின் தோற்றத்துக்கும் வழிவகுக்குமென்பதில் ஐயமில்லை. இவ்வருடம் வெளியாகியுள்ள சிவப்புத் தரவுப் பட்டியலானது காலநிலை மாற்றத்தால் ஏறத்தாழ 10 இனங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கின்றது.
துருவப் பகுதிகளில் வாழுமினங்கள் சமுத்திரங்களின் வெப்ப நிலையுயர்வு, அதிகரிக்கும் காபனீரொட்சைட் காரணமாக ஏற்படும் அமிலத்தன்மை அதிகரிப்பு, உருகும் பனிக்கட்டிகள் போன்ற பல காரணிகளால் பாதிப்படைகின்றன.
சமுத்திரங்கள் அமிலத்தன்மையடைவதால் அவற்றில் வாழும் ஒருவகை மீனினம் (Clown Fish) தனது நுகர்வாற்றலை இழக்கின்றது- இதனால் தான் தங்கி வாழும் அனிமணியைத் தேடிப் பிடிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதால் அழிவுக்குள்ளாகின்றது. சமுத்திரங்களில் கலக்கும் காபனீரொட்சைட், முருகைக் கற்பாறைகளையும் அழிவுக்குள்ளாக்கும்.
வர்த்தக ரீதியாகப் பாரியளவில் முதலிடப்படுகின்ற மீன்பிடித் தொழில் சல்மன் எனப்படும் மீனினத்திலேயே அதிகளவில் தங்கியுள்ளது. நீரின் வெப்பநிலை காரணமாக நீரின் ஒட்சிசன் மட்டம் குறைக்கப்படுவதால் இம்மீனினம் நோய்வாய்ப்படுதல் அதிகரித்துள்ளதுடன் அதன் இனப் பெருக்கச் செயற்பாடும் பாதிப்படைகின்றது
சூழலின் காபனீரொட்சைட் மட்டம் அதிகரிப்பதால் தரமான, போஷாக்குள்ள யூக்கலிப்றஸ் இலைகளின் எண்ணிக்கை குறைவடைவதால் அவுஸ்திரேலியாவுக்கேயுரித்தான கோலா கரடிகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன. விலங்கினங்கள் மட்டுமன்றித் தாவர இனங்களும் இத்தகைய அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன.
இனங்கள், பெரியளவிலான அழிவுகளையும் எதிர்நோக்குகின்றன. பூமி தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை ஆகக் குறைந்தது ஐந்து தடவைகளாவது இத்தகைய பெரியளவிலான அழிவுகள் இடம்பெற்றிருக்கக் கூடுமெனக் கூறப்படுகின்றது. கடந்த 3.5 பில்லியன் ஆண்டுகளுள் இத்தகைய நான்கு அழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதுவே டைனசோர் போன்ற பல உயிரினங்கள் அழிவடைந்தமைக்கும் காரணமாகும் உயிர்க்கோளமானது மனிதனால் அழிக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் அழிவுக்குள்ளாகும்.
இவை தவிர மனித உணவிற்காகவும் பொழுது போக்கு மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் இனங்கள் அழிக்கப்படுதலானது இன்று அதிகரித்து வருகின்றது. விலங்குகளை வேட்டையாடும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளமை இந்நிலையை மேலும் அதிகரித்துள்ளது- விலங்குகள் மற்றும் சில தாவரங்களினால் உற்பத்தியாகும் பொருட்கள் அதிகளவில் விற்கப்படுவதால் தோல், கொம்பு, மருந்து, தளபாடம் போன்ற பல பொருட்களுக்காகவும் தேவைகளுக்காகவும் உயிரினங்கள் வேட்டையாடப்பட்டு வருவதுடன் தாவரங்களும் அழிக்கப்படுகின்றன.
பல உயிரினங்கள் செல்லப் பிராணிகளாக மாறி வருவதாலும், காடுகளில் அவற்றின் இனம் அழிவடைகின்றது.
மற்றைய இனங்களை எல்லாம் பாதிப்புக்கு உள்ளாக்கித் தான்மட்டும் சுகபோகத்தை அனுபவிக்க எண்ணும் சுயநலம் மிக்க இனமாகவே மனித இனம் தென்படுகின்றது- இன்று எமது வாழ்வியல் அச்சுறுத்தலுக்குள்ளாக ஆரம்பித்துள்ள போது, மற்றைய இனங்கள் பற்றிய கரிசனையைச் சுயநலத்துடன் அதிகரிக்கின்றோம்.
ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து, பணக்காரர்கள் இன்னும் சீர்பெற்று உலகின் வளங்கள் யாவற்றையும் இந்த நூற்றாண்டிலேயே வெறுமையாக்கித் தன் கடல்களில் பிளாஸ்டிக், எண்ணெய்க் கழிவுப் பொருட்களை நிரப்பிப் பறவைகளையும் மிருகங்களையும் வாழ விடாமல் செய்து, பணத்தில் சீர் பெற்று மனதின் சீர் அழித்து குற்ற உணர்வுள்ள சுபிட்சம் பெறப் போகிறானா?’ என அண்மையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் இன்றைய சந்ததியினரான நாங்களே!

No comments:

Post a Comment