எங்கள் வீட்டு விருந்தாளி இவள்...... |
வவுனியா நகரின் மத்தியிலே மரங்கள் சூழ்ந்ததோர் வட்ட வீதி.. ஆங்கோர் முறிந்த மின்சார இணைப்புத் தூண். . . வீதியில் ஒய்யார நடைபோடும் மாடுகள்.. தூணைக் கடக்கும் போதெல்லாம் உரசும் அவற்றின் ஈர்ப்பு...
இது நான் அன்றாடம் காணும் காட்சிகளில் ஒன்று... எதேச்சையாய் ஒரு நாள் அவதானித்தேன். பொறி தட்டவில்லை. சில நாட்களின் பின்னர் ஆவுரஞ்சிக் கல் எதேச்சையாய் நினைவுக்கு வந்தது. புத்தி ஒப்பீடு செய்தது. யதார்த்தம் புரிந்தது.
யாழ்ப்பாணக் கலாசாரமானது தர்ம சிந்தையைப் பிரதிபலிப்பது என்று எங்கோ கேட்ட ஞாபகம். கால ஓட்டத்திலே, இடப்பெயர்வுகளுடன் கூடிய உலகமயமாதலின் தாக்கத்திலே யாழ்ப்பாணம் இழந்து விட்டவைகளுள் இது மிக முக்கியமானது என்றும் சில வேளைகளில் எண்ணத்தோன்றும்.
இற்றைக்கு சில தசாப்தங்களுக்கு முன்னர் யாழ் மண்ணின் அன்றாட வாழ்வியலிலே பல சிறப்பம்சங்கள் அங்கம் வகித்திருந்தன. இன்றைய நவீனத்தை உட்புகுத்தி கூறினால் அச்சிறப்பம்சங்களை அன்றைய உட்கட்டமைப்பு வசதிகள் என்று கூடக் கூற முடியும்.
நவாலி வெளி கடந்து வட்டுக்கோட்டை செல்லும் பாதை அருகே இன்னமும் இருக்கும் துரவு, ஆவுரஞ்சிக்கல், கோவிலின் மறுபுரத்தே சுமை தாங்கிக்கல் |
இன்றைய சனத்தொகைப்பெருக்கம் அன்று இருக்கவில்லை. சனத்தொகைச் செறிவு குறைவாக இருந்தது. வயல்வெளிகளும் பொட்டல்வெளிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கு துரவுகள் , சுமைதாங்கிக் கற்கள், ஆவுரஞ்சிக் கற்கள், தெரு மூடி மடங்கள், தண்ணீர்த்தொட்டிகள் என உட்கட்டுமானங்கள் காணப்பட்டன. இவை யாழ்ப்பாணக் கலாசாரத்துக்கென தனித்துவமானவை என்று கூறினாலும் மறுப்பதற்கில்லை. இவற்றைத்தான் யாழ்ப்பாணத்து வீதி தர்மம் என விளிக்கிறார் செங்கை ஆழியான்.
போக்குவரத்து என்றாலே மாட்டுவண்டிகளையும் சொந்தக் கால்களையும் மட்டுமே நம்பியதாக எம்மவர்களுள் பெரும்பாலானோர் வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அந் நிலையில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் இடையிலே இளைப்பாறுவதற்கு தெரு மூடி மடங்கள் பயன்பட்டன. தமது சுமையை இறக்கி வைத்து களைப்பாறி மீண்டும் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சுமை தாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன.
சுமை தாங்கிக் கல் |
எம்மவர் பண்பு கால் நடைகளைக் கூட விலக்கி வைக்கவில்லை. அவற்றிற்கும் தம் பண்பாட்டில் சம வகி பாகத்தை வழங்கியிருந்தனர். அதற்கு துரவுகளையும் தண்ணீர்த்தொட்டிகளையும் ஆவுரஞ்சிக் கற்களையும் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
ஆவுரஞ்சிக்கற்களானவை கால்நடைகளுக்கு ஏற்படும் திணைவு எனும் ஒரு வகைக் கடியினை நீக்கும் முகமாக உருவாக்கப்பட்டவை எனப் பெரியவர்கள் சொல்லி அறிந்திருக்கிறே. அக்கற்கள் ஒரு மாடு உரசக் கூடியளவு உயரத்திலே சொரசொரப்பான மேற்பரப்பையுடையனவாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆவுரஞ்சிக் கற்களால் எவருக்கும் இடைஞ்சல் இருந்திருக்கும் என நான் என் சொந்த அனுபவத்தில் உணரவில்லை.
ஆனாலும் இன்றைய காலத்தில் ஆவுரஞ்சிக் கற்களைக் காண்பது வெகு அரிதாகி விட்டது. நாம் இன்று பயணிக்கும் பாதையானது நவீனம், அபிவிருத்தி, உலகமயமாதல் என புதுப் புது கோணங்களில் நீண்டு செல்கிறது. அந்த கால ஓட்டத்தில் இந்த உட்கட்டுமானங்களை எல்லாம் நாம் மறக்கடித்து விட்டோம். அதன் விளைவாக அவை பாழடைந்து உருக்குலைந்து போயின. பல இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.
இச்சந்தர்ப்பத்திலே யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. பல்கலைக் கழக முன்றலின் ஒரு பகுதியிலே எங்கோ பெயர்த்தெடுத்து வந்த தண்ணீர்த்தொட்டியும் ஆவுரஞ்சிக் கல்லும் சுமை தாங்கிக் கல்லும் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கின்றன. சந்ததிகள் கடந்தாலும் எம் பண்பாட்டை நினைவூட்ட அவை மட்டுமே எஞ்சி நிற்கப் போகின்றன.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்..... |
என்ன என்று அறியாமலே அழிக்கப்பட்ட உட்கட்டுமானங்கள் ஏராளம் எனலாம். தமக்குத் தெரிந்தவற்றை தம் அடுத்த சந்ததியினருக்கு முழுவதுமாகக் கடத்தாமல் விட்டமை எம்மவர் செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறென்பதில் ஐயமேதுமில்லை. அவர்கள் கடந்து வந்த அவலங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பது யதார்த்தமான உண்மையாகும்.
நான் சிறு பராயத்தைக் கழித்த வீட்டிலே இருந்த மாட்டுக் கொட்டில் சீமெந்தால் ஆனது. மாடு உண்ண வைக்கோல் போடுவதற்கு ஏதுவாகவும் மாடு தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாகவும் சீமெந்தினாலேயே கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மாட்டைக் கட்டுவதற்கு ஏதுவாக தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் கிளிநொச்சியின் திருவையாற்றிலே வில்சன் வீதியோரம் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் படலையோடு மாட்டுப்பட்டி இருக்கும். மாடுகளை மேய்ப்பவர்கள் காலையிலே வீடு வீடாகச் சென்று மாடுகள் எல்லாவற்றையும் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வர். மாலையிலே மீண்டும் உரிய வீடுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பர். நீர்ப்பாசன ஊழியரான இராமலிங்கம் என்பவர்வீதியிலே செல்வோரின் தாகம் தீர்க்கவென குடி நீர்ப்பானை வைத்து பேணுவார் . மாட்டுப்பட்டிகளையோ மேய்ப்பவர்களையோ இப்போது காண்பது வெகு அரிதாகி விட்டது. அன்றிருந்த செழிப்பு அற்றுப் போய் சோபையிழந்து காட்சியளிக்கிறது வில்சன் வீதி. அந்த நினைவுகள் இன்னும் பசுமையாய் நிழலாடுகின்றன.
சேமமடு, வவுனியா |
ஏறத்தாழ இரு தசாப்த காலங்களுள் எத்தனை மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம்? மாடுகளும் அதற்கு விதி விலக்கல்லவே! இன்று மாட்டுப்பட்டிகளைக் காண்பது வெகு அரிதாகி விட்டது. மழையிலும் வெயிலிலும் மரங்களுக்குக் கீழேயும் வீதியின் இரு மருங்கிலும் ஒதுங்கும் மாடுகள் தான் அதிகம் எனலாம்.
இரவுகளில் கூட தம் பட்டிக்குச் செல்லாமல் வீதி ஓரங்களிலேயே தஞ்சம் புகும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாட்டைக் காணவில்லை என்றால் கூட துடித்துப் போகும் உரிமையாளர்கள் மிக அரிதாகி விட்டனர் என்பதன்றி அதற்கு வேறெந்த அடிப்படைக் காரணமும் இருக்க முடியாது.
ஆவுரஞ்சிக் கல்லுக்காகவே அந்த வீதிக்கு வரும் மாடுகளை நான் கண்டிருக்கிறேன். வாசல் கதவு எப்போ திறக்கும்? எமக்கு யார் தண்ணீர் தருவார்கள் என ஏக்கமாய்ப் பார்க்கும் மாடுகளையும் கண்டிருக்கிறேன். தண்ணீர் குடித்து முடிந்ததும் நன்றிப் பெருக்கோடு விலகும் மாடுகளைக் காண்பதில் கிடைக்கும் திருப்தி எதிலும் கிடைப்பதில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். இந்த மாடுகளுக்கெல்லாம் கதைக்கத்தெரிந்தால் என்னெல்லாம் சொல்லும் என்று நான் கற்பனை பண்ணிப்பார்ப்பதுமுண்டு. அக்கற்பனையில் மனிதன் கூனிக்குறுகித் தான் நின்றிருக்கிறான்.
சனத்தொகை அதிகரிக்க, நிலங்கள் துண்டாடப்பட ஒவ்வொரு பிரதேசத்துக்குமாக மேய்ச்சல் நிலங்களை ஒதுக்க வேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. வன ஓதுக்கெடுகளை விடுவித்து மேய்ச்சல் நிலமாக்குங்கள் எனக் கோரும் பண்ணையாளர்களை அடிக்கடிக் காண முடிகிறது.
மாடுகளைப் பராமரிப்பதிலும் அவற்றின் தேவைப்பாடுகளைக் கருத்தில் கொள்வதில் இன்றைய சந்ததி அலட்சியம் காட்டுகிறது. மாறாக மாடுகளால் கிடைக்கும் பயனின் உச்ச அளவைப் பெற்றுக்கொள்ள அதீத ஆர்வம் காட்டுகிறது. பணத்தை மையமாகக் கொண்ட ஆறறிவு ஜீவன் களால் பாதிக்கப்பட்டவை இந்த வாயில்லா ஜீவன் கள் என்பது கண் கூடு.
காலம் ஒன்றும் கடந்து போய்விடவில்லை. நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட்டால் எஞ்சியிருக்கும் பாரம்பரிய உட்கட்டுமா னங்களை அழிவிலிருந்து மீட்க முடியும். அதே வேளை சுய நலத்தை மட்டுமே கொள்ளாமல் வாயில்லா ஜீவன் களையும் கருத்தில் கொண்டு வீதிக்கொரு ஆவுரஞ்சிக் கல்லையும் தண்ணீர்த்தொட்டியையுமாவது அமைக்க முயற்சி எடுக்கலாம்.
நாம் வாழும் சூழல் தொகுதி வாழ்வுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமாயினும் அங்கு சம நிலை இருக்க வேண்டும். எல்லா உயிர்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அன்றேல் 'தன் வினை தன்னைச்சுடும்' என்ற முது மொழி நிதர்சனமாவது கண்கூடு.