(முதலாவது உலக தொலைக்காட்சி தினத்தை முன்னிட்டு இலங்கை ரூபவாஹினி
கூட்டுத்தாபனமும் கலாசார அமைச்சும் இணைந்து நடாத்திய அகில இலங்கை ரீதியிலான
கட்டுரைப்போட்டியில் திறந்த பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை..)
ஆறடியிலும் குறைந்த
உயரம்....கிடுகால் மேய்ந்த கூரை... களிமண்ணும் சாணமும் கலந்து மெழுகிய தரை..
செங்கற்கள் அடுக்கிய சுவர்.. சமையலறைப்பகுதியில் ஒரு சில பாத்திரங்கள்...
ஆங்காங்கே கொடிகளில் இடம் பிடித்திருக்கும் உடு புடைவைகள்.... கட்டொன்றில் நிலை
கொண்டிருக்கும் நேர்த்திரை
தொலைக்காட்சி......விதைவைத் தாய்.. மகள்... மண் விளையாட்டே தஞ்சமான இரு
பேரக்குழந்தைகள்... வீட்டை விட உயரத்தில் செய்மதித் தொலைக்காட்சிக்கான சமிக்ஞை
வாங்கி...
இந்த விவரணம் கண்காணாத தேசத்துக் காட்சியை
மனக்கண்ணில் உருவாக்குவதற்காக சித்தரிக்கப்பட்டதல்ல. இதுவே நிகழ்கால இலங்கையின் யதார்த்தம். இலங்கையில் தொலைக்காட்சி காலடி எடுத்து வைத்து ஆக 3 தசாப்தங்கள் மட்டுமே
கடந்து விட்டிருக்கின்றன. அன்று ஊருக்கொன்றாய் எட்டிப் பார்த்த தொலைக்காட்சிகள்
இன்று வீட்டுக்கு இரண்டிலும் அதிகமென நிலைகொண்டிருக்கின்றன.
ஆசியாவின் ஆச்சரியமாக மாறுதல் தொடர்பில் வீறு நடை
போட்டுக்கொண்டிருக்கும் எம் நாட்டில் மின்சார இணைப்பு கிடைக்காத கிராமங்களிலும்
கூட ஓர் ஆடம்பரக் குறிகாட்டியாக இருப்பதில் தொலைக்காட்சிகளே முன்னணி வகிக்கின்றன.|
இக்கட்டுரையிலே வட மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு
இன்றைய இலங்கையின் யதார்த்தத்தை வெளிப்படுத்துதல் சிறப்பாக இருக்கும் என நான்
எண்ணுவதில் தவறேதும் இல்லை என நம்புகிறேன்.
பிச்சை புகினும் தென்னிந்திய சின்னத்திரைத்
தொடர்களைப் பார்த்தால் தான் அன்றைய நாள் மன நிறைவுடன் கழியும் என நம்பும்
குடும்பங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. முன்னொரு காலத்திலே கூட்டு வாழ்வை
அடிப்படையாகக் கொண்டிருந்த வாழ்வியல் இன்று சின்னத்திரையில் தங்கிய தனிமை
வாழ்வியலை அணுகும் நிலைக்கு வந்து விட்டது.
அன்று நாம் கொண்டிருந்த கூட்டு வாழ்வியலானது ஒன்றாய் கூடி உணவருந்துதல்
தொட்டு முடிவெடுத்தல் வரை சகலதையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவ்வாழ்வியலிலே
துயர்கள் பகிரப்பட்டன. உணர்வுகள் மதிக்கப்பட்டன. இன்பம் துளிர் விட்டு கிளை
பரப்பியிருந்தது. குடும்பக்கட்டமைப்பு பேணப்பட்டது. சமூகப்பாதுகாப்பு உறுதி
செய்யப்பட்டது.
இன்றோ நிலைமை தலை கீழாய் மாறிவிட்டது. என்று
செய்மதித் தொலைக்காட்சி கூட்டு வாழ்வியலினுள் ஊடுருவத்தொடங்கியதோ அன்றே
ஒட்டகத்துக்கு இடங்கொடுத்த கதையாக அந்த வாழ்வியல் தொலைந்து போகத்தொடங்கியது.
முதலாளித்துவப் பொருளாதாரம் வலுப்பெறும் இந்த நவீன
உலகிலே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே நுகர்வுக் கலாசாரத்துக்கு வெகுவாக
ஈர்க்கப்படுவன என்பதில் எதுவித ஐயமுமில்லை. இலங்கையும் அந் நிலைமைக்கு விதிவிலக்கல்லவே!
சனத்தொகை பெருகத்தொடங்கி விட்டது. தேவைகள்
அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. வளங்கள் அருகத்தொடங்கி விட்டன. மனித வாழ்வு போட்டி
மிக்கதாகவே மாறிவிட்டது. தனிநபர் மையச் சிந்தனைகள் பெருகத்தொடங்கி விட்டன. அவையே
மனித வாழ்வின் குறிக்கோள்களாகவும் மாறிவிட்டன. ஒரு காலத்தில் எம்மவர் மத்தியில்
வலுவாக வேரூன்றியிருந்த சக மனிதர் பற்றிய அக்கறை, அன்பு, ஆதரவு, இரக்கம், மதிப்பு
, மரியாதை என யாவுமே செல்லாக்காசாகி விட்டன.
வட இலங்கையிலே சமூக நிலைமை இப்படியிருக்க, உள்ளூர்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்
மட்டுமே. பெரும்பாலானவர்களுடைய தொலைகாட்சிகளிலே உள்ளூர் அலை வரிசையை பார்க்கும்
வசதி கூட இருக்காது. நாளைய நாட்டின் தூண்கள் என எப்போதுமே
வர்ணிக்கப்படும் இளஞ்சமுதாயத்துக்கு இந்த உள்ளூர் அலைவரிசைகள் மீது எதுவித
நாட்டமும் இல்லை என்று கூறினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
புலியைப்
பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல, தென்னிந்திய தொலைக்காட்சிகளைப்
பின்பற்றத்தொடங்கிய உள்ளூர் அலை வரிசைகள் தம் சுயத்தை இழந்து கொண்டிருக்கின்றன.
அடிப்படையில் அவர்கள் பாசாங்கு செய்ய முயலும் இந்திய-ஆங்கிலத் தமிழ் மொழி நடையானது
எம் கொஞ்சு தமிழ் மொழியின் அழகிய நடையைத் தொலைந்து போகச் செய்துவிட்டது.
இன்றும் கூட தூய தமிழை ஒரளவேனும் வழக்கொழியச்
செய்யாமல் அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்லும் பணியை அரச ஊடக நிறுவனங்கள் மட்டுமே
செய்கின்றன எனலாம். ஆனாலும் மக்கள் மனங்களை வெல்வது தொடர்பில் தென்னிந்திய
அலைவரிசைகளோடு இலங்கையின் உள்ளூர் அலை வரிசைகளால் போட்டி போட முடியவில்லை. இதே
நிலைமை எதிர்காலத்திலும் தொடருமானால் உள்ளூர் அலைவரிசைகள் இருந்த இடம் தெரியாமல்
போய்விடும் சாத்தியக் கூறுகளே அதிகம் எனலாம்.
தொழில்னுட்ப ரீதியாக நோக்கினால், இந்த உள்ளூர்
அலைவரிசைகள் செய்மதித் தொழில் நுட்பத்தால் உள்வாங்கப்படல் அவசியமாகிறது. அத்துடன்
இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளை எல்லாம் ஊடுருவக் கூடிய வகையிலே அவற்றின் வீச்சு
விரிவாக்கப்படலும் அவசியமாகிறது. இணையத்தொழில் நுட்பத்தை பாவிக்கத் தொடங்குவதன்
மூலம் நிகழ்ச்சிகளை இணையம் மூலமும் ஒளிபரப்பலாம்.
நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையிலே, காலத்தின் தேவை
கருதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மொழி நடையோ அல்லது கலாசாரமோ மாற்றப்படாத
வகையில் நவீன போக்குடன் இணைத்து வழங்க முயற்சி செய்யலாம். 1990 களின் ஆரம்ப
காலங்களில் அரச தொலைக் காட்சி ஒளிபரப்பிய பல தரமான நிகழ்ச்சிகள் இன்று
மருந்துக்குக் கூட கிடைப்பதில்லை.
எம்மவர் வாழ்வியலாகட்டும்; இன்று அவர்கள் எதிர்
நோக்கும் பிரச்சினைகளாகட்டும்; அவர் தம் வரலாறாகட்டும்; தொலைத்துக்கொண்டிருக்கும்
பண்பாடாகட்டும்; சமயமாகட்டும், மொழி, இலக்கியங்களாகட்டும்; கலைப்படைப்புகளாகட்டும்;
வேற்றுமையில் ஒற்றுமை காணும் பல்லின கலாசாரமாகட்டும்; அவற்றை எல்லாம் நவீனம்
கலந்து வெளிப்படுத்துதல் இளைஞர்களையும் ஈர்க்கத்தொடங்கும்.
இலங்கையின் பாரிய சொத்தாகக் கருதப்படும் இயற்கை
வளங்களையும் உயிர்ப்பல்வகைமையையும் பேணக்கூடிய வழியிலான விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் எதிர்கால நோக்கில் மிக மிக அவசியமானவை.
சுற்றுலாத்துறையில் அதிகமுதலீடுகளை மேற்கொண்டு வெளி
நாட்டுப் பயணிகளைக் கவரும் முயற்சிகளில் ஈடுபடும் நாம் உள்ளூர்வாசிகளை எப்படிக்
கவர்வது என்பது தொடர்பில் அதிக அக்கறை காட்டுவதில்லை. அந்த மாபெரும் பணியை
முன்னெடுக்கவேண்டியது தொலைக்காட்சியேயன்றி வேறெதுவுமல்ல.
இவற்றையெல்லாம் நவீனம் கலந்து செவ்வனே நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தொலைக்காட்சிகளால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்களிக்க முடியும்.
இவற்றையெல்லாம் நவீனம் கலந்து செவ்வனே நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தொலைக்காட்சிகளால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்களிக்க முடியும்.
சாரதாஞ்சலி கர்ணன்
1 comment:
வாழ்த்துகள்
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
Post a Comment