Sunday, November 6, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-5


உணராவிட்டால் உய்வில்லை

பணமிருந்தால் சாதிக்கலாம் என்ற கொள்கை எம்மவரிடத்தே பரவ லாகக் காணப்படும் போது, இயற்கையோடு இயைந்த, சுற்றுச்சூழலு டன் நட்புறவான வாழ்வியலைப் பற்றி யார் சிந்திப்பார்கள்? ஏதோ ஒரு போதைக்குள் அருண்டு போயிருக்கும் எம் சமூகத்தை யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி சிந்திக்க வைத்திருக்கிறது. ஆர்வலர்களுக்குக் கிடைத்திருக்கும் உன்னத வாய்ப்பு இது.
இதையே தக்க தருணமாகக் கொண்டு மக்கள் மத்தியில் பனம் பொருட்களின் பாவனை பற்றி விளக்க அவர்கள் முன்வர வேண்டும். அவற்றின் பாவனையை அதிகப் படுத்தவேண்டும்.
இது பனம் பொருள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும். அவர்களது வாழ்க்கைத்தரம் மேம்பட வழிவகுக்கும். அதே வேளை எமக்கே உரித்தான கலையாகக் கருதப்படும் பனம் பொருள் உற்பத்தி தொடர்பான நுணுக்கங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும். எமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. சம்பந்தப்பட்ட அதிகாரத்தரப்பு இவற்றை எல்லாம் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
எந்த மேற்குலகு பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளை கீழைத்தேய நாடுகளில் அறிமுகப்படுத்தியதோ, அதே மேற்குலகு தான் இன்று பசுமை வாழ்வியலைக் கடைப்பிடிக்கிறது. ஆனால் மாறாக பரம்பரை பரம்பரையாகக் கைக் கொண்டு வந்த பசுமை வாழ்வியலை நாம் கை கழுவி விட்டிருக்கிறோம். அதேவேளை, மேற்குலகு கழித்து விட்ட வாழ்வியலைப் பெருமையாகப் பின் பற்றுகிறோம். அதே மேற்குலகு இன்று எல்லாத் துறைகளிலும் பசுமையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஏதோ புதிய துறைகள் போலும் என எண்ணி நாமும் அவற்றை நாடுகிறோம். சுற்றுச் சூழல் கெடாமல் இருப்பதற்காக புதிய தர நிர்ணயங்கள் உருவாகிவிட்டன. அவற்றைப் பின்பற்ற அல்லாடுகிறோம். அப்போதும் கூட அந்த அடிப்படை உண்மை எமக்கு விளங்குவதாகத் தெரியவில்லை. நாம் கை விட்ட வாழ்வியல் வர்த்தக நோக்குடன் எம் மீது திணிக்கப்படுகிறது.
அது எமக்கே உரித்தான வாழ்வியல் பாங்கு என்று தெரியாமல் அதைப் பின்பற்ற நாம் படும்பாடு சொல்லிலடங்கா ஏனெனில், அந்த வாழ்வியல் எப்போதோ எம்மை விட்டு வெகு தொலைவுக்குச் சென்று விட்டது. இலகு வழிகளையும் பணத்தையும் மட்டுமே நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதை நாமாக உணர்ந்து மீளாவிட்டால் உய்வே இல்லை எனலாம்.
பட்டை, பிழா, தொப்பி, தட்டுவம், வெங்காயக் கூடை, உறி, பெட்டி, மூடு பெட்டி, கொட்டைப் பெட்டி, கூடை, கடகம், பாய் என வகை வகையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த பனை உற்பத்திப் பொருட்கள் எம்மை வெட்கித் தலை குனிய வைத்தன என்று தான் கூற வேண்டும். எத்தனை உன்னதமான வாழ்வைத் தொலைத்து விட்டிருக்கிறோம் என உள்ளூணர்வு உறுத்தியமையும் கூட தவிர்க்க முடியாததாகியது.
அந்தக் காட்சி அரங்கைக் கடந்து சென்ற போது அமைக்கப்பட்டிருந்த அரங்கிலே யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் பலதரப்பட்ட பொருட்களும் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்திலே புழக்கத்திலிருந்த நிறுத்தலளவைகள் எல்லாம் மெள்ள மெள்ள வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. நாழி, கால்படி, அரைப்படி என அரிசி அளப்பதில் தொடங்கி அன்றாட சமையல் பொருட்களை அளப்பதுவரை பயன்படுத்தப்பட்ட அளவைகள் பல அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வெற்றிலையும் பாக்கும் எம்மவர் மத்தியில் வெகு சகஜமான புழக்கத்திலிருந்தன என்று கூறலாம். அதை இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாக்குவெட்டிகள், பாக்கு இடிக்கும் உரல், சுண்ணாம்பு கிண்ணம் போன்ற உபகரணங்கள் தெளிவாகக் கூறின. அவ்வுபகரணங்கள் சிறியனவாயினும் எத்தனை நுட்பங்களுக்கமைவாக, எத்துணை சிறப்பான உத்திகளுடன் கலை நயமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணிப் பார்த்தால் வியப்பு மட்டுமே மிஞ்சும்.
அந்த உபரகணங்கள் எம்மவர்களுக்கு எவ்வளவு முக்கியமானவையாக இருந்தன என்பதை அவை வடிவமைக்கப்பட்டிருக்கும் பாங்கு எடுத்தியம்பும். ஒவ்வொன்றிலும் பல வடிவமைப்புகள் என்று கூறுதல் தகும். புகைத்தல் தட்டங்களும் கூட வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பித்தளை, இரும்பு போன்ற உலோகங்களால் ஆனவை. உலோகக் கத்திகள், கொக்கை சத்தகம், காம்புச் சத்தகம், உலோகக் கரண்டிகள், பால் வடிகள் என எண்ணற்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
காலனித்துவ ஆட்சிக் காலத்திலே அறிமுகமாகிய வெண்களி, கண்ணாடிச் சாடிகள் பலவும் அவற்றுள் அடங்கும். அதே காலத்தில் தான் சோடியம் செலோலைட் நீர் வடிகட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டது. வெண்களியினாலான அந்த குடி நீர் வடி கட்டியைப் பார்த்த போது பால்ய கால நினைவலைகள் உள்ளக்கரையைத் தொட்டுச் சென்றன.
மூங்கில் பிட்டுக் குழல், அதில் அவிக்கும் பிட்டின் சுவையை எண்ணி வாயூற வைத்தது. வடக்கிலே மின்சாரத்தை நினைத்துப் பார்க்க முடியாத காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் ஆடைகளை அழுத்துவதற்குக் கைகொடுத்தவை சிரட்டைக் கரி அழுத்திகள் தான். வார இறுதி நாட்களில் சிரட்டை எரித்து பாடசாலைச் சீருடைகளை அழுத்துவது ஒரு தனி வேலை. அரங்கிலே வைக்கப்பட்டிருந்த கரி அழுத்திகளைக் கண்டபோது மனம் பள்ளி நினைவுகளை மீட்டது.
வட இலங்கைக் கடற் சூழல் தொகுதி இன்றும் கூட உயிர்ப்பல்வகைமை செறிந்ததாகக் காணப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் வெளியோடுகளை, அழகுக்காக மட்டுமன்றி வேறுபல தேவைகளுக்காகவும் எம்மவர்கள் பயன்படுத்தினர். அத்தகைய அபூர்வ சங்குகள் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மரம், உலோகத்தாலான பாதரட்சைகள் சிலவற்றையும் காணமுடிந்தது. பாதரட்சை என்றால் முனிவர்கள் மட்டும் தான் அணிவார்கள் என்ற எண்ணப்பாடுகளைக் கொண்டிருந்த இன்றைய இளஞ்சந்ததியர் அவற்றைப் புதினமாகப் பார்த்தமையையும் காண முடிந்தது.
நூற்றாண்டு பழைமையான ஏடுகளைக் கட்டுக் கட்டாகக் காண முடிந்தது. அவை எல்லாம் எம் வரலாற்றின் தொன்மையை எடுத்தியம்பின எனலாம். ஏடுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குரிய பெட்டி வியக்க வைத்தது.
ரங்குப் பெட்டிகள் என அன்றாடப் பேச்சு வழக்கில் அழைக்கப்படும் ட்ரங்க் பெட்டிளும் பெட்டகமும் கூட வைக்கப்பட்டிருந்தன. 100 வருடங்கள் பழைமையான மண்ணெண்ணெயும் கண்ணாடிச் சாடியும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சென்ற நூற்றாண்டிலே பாவனையிலிருந்த புடவைகள் பொம்மைகளுக்கு உடுத்தப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சி அரங்கிலே வைக்கப்பட்டிருந்த பொருட்களில் பெரும்பாலானவை தற்போது யாழ்ப்பாணத்திலே வசித்து வரும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டவை.
இத்தனை இடப்பெயர்வுகள், அழிவுகளைக் கடந்து வந்திருக்கும் அம்மக்களிடமிருந்து இவ்வளவு பொருட்கள் பெறப்பட்டிருக்கின்றன. எனில் நாம் சில விடயங்கள் பற்றி சிந்தித்தேயாக வேண்டும்.
காலங்காலமாக, ஊர் விட்டு ஊர் ஓடி, அழிவுகளுக்கும் திருட்டுகளுக்கும் முகங் கொடுத்த தற்போது தான் ஒரு அமைதி நிலையை அடைந்திருக்கின்றனர் எம் மக்கள். அப்படியாயின் இவற்றை ஒத்த எத்தனை பொருட்கள் அன்று அவர்களிடம் இருந்திருக்கும் என எண்ணியாவது பார்க்க முடிகிறதா? இவ்வளவு துன்பங்களின் பின்னரும் பணத்தாசைக்கு விலை போகாமல் மூதாதையர்கள் தமக்காக விட்டுச் சென்ற சொத்துக்களை பேணி வைத்திருக்கும் இம் மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அந்த ஒரு சிலரிடம் காணப்பட்ட விழிப்புணர்வும் பொறுப்பும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.

3 comments:

மகேந்திரன் said...

அன்பு சகோதரி,
அருமையா சொல்லியிருகீங்க,
பண்பாடு பேசும் பழம்பொருட்களை
வைத்து ஒரு கலாச்சார காவியமே தீட்டிவிட்டீர்கள்.

இன்று தான் தங்கள் வலைத்தளம் வந்தேன்,
இன்றுமுதல் தொடர்கிறேன்.

http://www.ilavenirkaalam.blogspot.com/

என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...

மிக்க நன்றி சகோதரரே...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/06/blog-post_13.html?showComment=1402631677376#c4771738721863922113
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment