Sunday, February 6, 2011

இயற்கையிலும் ஒரு குருஷேத்திரம்

‘கடைசியாய் ஒருமுறை

கூவிக் கொள்க குயில்களே’

என்று தொடங்கி,

‘திட்டுத் திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்

தட்டுக்கள் எழும்

ஓன்றன் மீதொன்று படையெடுக்க...பூமியின் வயிற்றெரிச்சலாயக்

காலங்காலமாய் கனன்று கிடந்த

அக்கினிக்குழம்புகள்

விடுதலை கேட்க....வெறிகொண்ட மேகங்கள்

விரைவதைப் போலப்

பாறைகள் பூமிக்குள்

பயணப்பட...தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது

பூமிக்குள் ஒரு குருஷேத்திரம்’

என்று நீளுகின்றன.

கவிஞர் வைரமுத்துவின் வரிகள்.முழுமையாகப் படித்துணர்ந்தவர்களுக்கு அவ்வரிகளின் யதார்த்தம் விளங்கியிருக்கும்.

அண்மைக் காலங்களாக நாம் கண்டும் கேட்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கும் இயற்கை அனர்த்தங்கள் இக்கவிதையை மேன்மேலும் நியாயப்படுத்துவதாகவே அமைகின்றன.

அவற்றிற்கப்பால் இன்று பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக ‘2012’ மாறிவிட்டது. அண்மைக்காலங்களில் நிகழும் தொடர் இயற்கை அனர்த்தங்கள் ‘2012’ தொடர்பான ஊகங்களை வலுப்பெறச் செய்கின்றனவோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் அந்த ஊகங்களை மறுக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள் 2012 தொடர்பான ஊகங்களுக்கான நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எங்கே? என்பதே அவர்களது கேள்வியாக இருக்கிறது. அவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்ட புனைகதைகளே என்கின்றனர் அவ்விஞ்ஞானிகள்.

2012 தொடர்பான ஊகங்களில் ஒன்றுதான் புவிக்கோளத்தின் வட, தென் முனைவுகளின் இடமாற்றமாகும். வட, தென்முனைகளின் இடமாற்றம் என்றதுமே வடமுனைவு தென்முனைவாகவும் தென்முனைவு வடமுனைவாகவும் மாறிவிடும் என்றே பலர் எண்ணுகின்றனர். ஆனால், ஒரு எல்லை வரை அது உண்மையாகாது.

புவிச்சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றமே இந்த வட, தென் முனைவுகளின் இடமாற்றம் என்கின்றனர் விஞ்ஞானிகள். புவிச்சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றமானது நிலநடுக்கங்கள், சுனாமி அனர்த்தம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தலாமென அவர்கள் தரப்பில் எதிர்வு கூறப்படுகிறது.
புவிக்கோளத்தைச் சூழ காந்தப்புலமொன்று தொழிற்படுவது நாம் யாவரும் அறிந்ததோர் விடயமே. புவிச்சுழற்றி அச்சில் ஏற்படும் மாற்றம் புவியைச் சூழவுள்ள காந்தப்புலத்திலே மாற்றத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது. புவிக்கோளத்தின் வரலாற்றிலே இது ஒன்றும் புதிய விடயமல்ல.

அத்தகையதோர் மாற்றம் 785,000 ஆண்டுகளுக்கோ அதற்கும் முன்னரோ, நிகழ்ந்திருக்கலாம். எனக் கூறப்படுகிறது.

விஞ்ஞான ரீதியான அனுமானங்களின் அடிப்படையில் புவிச்சுழற்சி அச்சின் இடமாற்றம் ஏறத்தாழ 300,000 ஆண்டுகளின் முன்னர் இடம்பெற்றதாகக் கணிப்பிடப்படுகிறது. புவிக்கோளத்தைப் பொறுத்தவரை அது இயற்கையானது.


புவியைச் சூழவுள்ள காந்தப்புலம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, என்பது இன்றும் விஞ்ஞானிகள் மத்தியில் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், புவிக்கோளத்தில் உள்ள உயிர்களின் நிலைப்பு அந்தக் காந்தப்புலத்திலேயும் தங்கியுள்ளது என்பதை அவர்களால் உணரமுடிகின்றது.

புவிக்காந்தப்புலத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட உலகளாவிய அழிவை ஏற்படுத்தவல்லது என்பதை நம் முன்னோர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்திருந்தனர்.

புவிக்கோளத்தின் உட்படைகளுள் அதன் மையத்தில் திண்மக் கோளமும், அதைச்சூழ திரவ இரும்பையொத்த குழம்பும் காணப்படும். ஆக வெளியிலே உள்ளபடைதான் புவியோடு எனப்படுகிறது. புவியின் இந்தக் கட்டமைப்பை ஒரு பிரமாண்ட டைனமோவின் இயக்கத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கிறது விஞ்ஞானிகளின் ஞானம்.

அந்த அடிப்படையில் புவிக்கோளத்தின் கட்டமைப்பு தான் அதைச் சூழவுள்ள காந்தப்புலத்துக்குக் காரணம் என்ற விளக்கத்தையும் சேர்த்தே முன்வைக்கின்றனர் விஞ்ஞானிகள்.

உண்மையில் முனைவுகளின் இடமாற்றம் என்பது ‘புவிச் சுழற்சி அச்சு இன்று இருக்கும் இடத்தில் நாளை இருப்பதில்லை’ என்ற கருதுகோளையே குறிக்கிறது.


முனைவுகளின் இடமாற்றத்தை புவித்தட்டுக்களுடன் இணைந்து குழப்ப வேண்டிய அவசியமில்லை. புவித் தட்டுக்களின் நகர்வு முற்றிலும் வேறு பட்டதானதோர் நிகழ்வாகும். அதேபோல முனைவுகள் இடம்மாறினால் காந்தம் வடக்கும் தெற்கும் கூட இடம்மாறும் என்று அனுமானிப்பதும் மிகத்தவறான விடயமாகும்.

அண்மைக்காலங்களிலே புவியியலாளர்களும் விஞ்ஞானிகளும் இணைந்து நடாத்தினர். அவற்றின் அடிப்படையில் புவிக்கோளமானது ஏறத்தாழ 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் (முன்கம்பிரியன் காலம்) தனது சமநிலையை மீளமைத்துக் கொண்டது எனக் கூறப்படுகிறது. அடையற் பாறைகளிலுள்ள காந்தத்தன்மையுடைய கனியங்களை ஆய்வு செய்வதன் மூலம் இந்த முடிவுபெறப்பட்டது. கடந்த 20 மில்லியன் வருடங்களில் வடமுனைவானது ஏறத்தாழ 50 பாகை இடமாறியிருப்பதாக (அசைந்திருப்பதாக) அந்த ஆய்வு தெரிவிக்கிறது. GPS (Global Positioning System) தொழில்நுட்பத்தினடிப்படையிலான ஆய்வொன்று இப்படித் தெரிவிக்கிறது.

சாதாரண பருவகால மாற்றங்கள் கூட புவிக்கோளத்தின் நீர், பனிப்பாறைகளின் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துமெனவும், அந்தமாற்றமானது முனைவுகளில் மிகச் சிறிதளவிலான இடமாற்றத்தை ஏற்படுத்தும். இதுவே அந்த மிஜிஷி ஆய்வு சொல்லும் தகவலாகும்.

அத்தகையதோர் மாற்றம் ஏற்படுமாயின் பூமியில் என்ன எல்லாம் நடக்கலாமெனப் பலரும் பலவிதமான எதிர்வு கூறுகின்றனர்.காந்தப்புலத்துடன் தொடர்புடைய சகல விடயங்களுமே பாதிக்கப்படுமென்பது பொதுவான ஊகமாகும். அவற்றுள் கப்பல்களும் ஆகாய விமானங்களும் கூட அடங்கிவிடுகின்றன. ஏனெனில் அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் திசையறி கருவி காந்தப்புலத்துடன் தொடர்புடையது. சகல திசைகாட்டிகளும் செய்மதிகளும் கூட செயலிழந்து விடும் நிலையே ஏற்படும். காலத்துக்குக் காலம் இடம்பெயரும் மிருகங்களும் பறவைகளும் கூட எங்கே செல்வது என்று குழப்பமடையும் நவீன தொழில் நுட்ப வசதிகள் யாவுமே ஸ்தம்பித்துப் போகும். மனித சக்திக்கு அப்பாற்பட்டதாக பேரழிவுகள் நிகழும் என்று தெரிவிக்கின்றனர் ஒருசாரார்.

வட- தென் முனைவுகளில் அத்தகைய இடமாற்றம் நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதே எவராலும் துல்லியமாகக் கூறமுடியாது. புவிக்கோளத்தைச் சூழவுள்ள காந்தப்புலம் ஏதேச்சையானது என்று ஒருபோதும் கூறமுடியாது. அதன் பிரதான தொழிலே அண்டக் கதிர்களிலிருந்தும் சூரியக் கதிர்களில் இருந்தும் புவிக்கோளத்தை (எம்மை)ப் பாதுகாப்பதாகும்.

இந்த காந்தப்புலம் இல்லையென்றால் பூமியில் உயிர்வாழ்க்கையென்பது கூட சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும். அதே போல புவியில் உயிர்வாழ்க்கை இத்தனை மில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்கின்றதென்றால், அதற்கும் இந்த காந்தப்புலம் ஒரு காரணமாகும். அது இல்லாவிடில் உயிரைப் பறிக்க வல்ல சூரியக்கதிர்ப்புகள் பூமியை நேரடியாக வந்தடையும்.


இயற்கையை மனிதன் முற்றாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும். அவன் அறியாத எண்ணற்ற விடயங்களையும் அற்புதங்களையும் புதிர்களையும் இயற்கை தன்னகத்தே கொண்டுள்ளது.இயற்கையை ஆராயும் இந்த விஞ்ஞானிகளுக்கு 'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்ற ஒளவையார் வாக்கு மிகவும் பொருந்தும். டேவிட் மொரிஸன் என்ற நாசாவின் சிரேஷ்டவிஞ்ஞானியோ புவி முனைவுகளின் தலைகீழான மாறல் ஒருபோதும் சாத்தியமில்லை என்றே கூறுகிறார். இவ்வளவு காலமும் அத்தகையதோர் நிகழ்வு நடக்கவில்லை. நடக்கவும் மாட்டாது என்பதே அவரது வாதமாக இருக்கிறது. கண்டங்களின் நகர்வு என்பது பலமில்லியன் ஆண்டுகளைக் கருதும் போது சாத்தியம்தான்.

ஆனால் அதற்கும் புவிமுனைவுகளின் தலைகீழான இடமாற்றத்துக்கும் தொடர்பில்லையென்றே கூற வேண்டும். ஆனால் புவிச்சுழசிக்கும் புவிக்கோளத்தைச் சூழவுள்ள காந்தப்புலத்துக்குமிடையே தொடர்புள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் புவி சூழலும் திசைக்கும் காந்தமுனைவுத்தன்மைகுமிடையே எந்தவொரு தொடர்பும் இல்லை. அத்துடன் புவியின் வட தென் முனைவுகள் இடம்மாறுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. பேரழிவுகள் கூட சாத்தியமற்றவையே. மக்கள் இந்த ஊகங்களையெல்லாம் வீணே எண்ணிக் குழப்பமடையத் தேவையில்லை என்பதே விஞ்ஞானி டேவிட் மொரிஸனின் கருத்தாக இருக்கிறது.

எது எவ்வாறாயினும், தனிநபர்களாக நாம் ஒவ்வொருவரும் இயற்கையை மதித்து அதனுடன் இயைந்து வாழப்பழக வேண்டும். எம் நடவடிக்கைகள் இயற்கையின் சமநிலையைக் குழப்புவனவாக அமையக் கூடாது. “நான் மட்டும் செய்வதால் என்ன? மற்றவர் எவரும் செய்யவில்லையே?” என்ற மனப்பாங்கைத் தவிர்க்க வேண்டும். அவைதான் இயற்கை சீற்றமடையாமல் தன் வழியிலேயே பயணிக்க வழிவகுக்கும்.அடிப்படையில் இயற்கை சாதுவானது. எமக்கு நன்மையே பயப்பது. அந்த சாது மிரளும் போது நாடு தாங்காது. இது ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த கால அனுபவங்கள் கூட இதைத்தான் தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கின்றன. இயற்கை சீற்றமடைவதும் சாதுவாக இருப்பதும் கூட எமது கைகளிலேயே இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

No comments:

Post a Comment