Saturday, January 1, 2011

இயற்கை தொடுத்திருந்த எதிர்க்கணைகள் 10

 

 
 

1.ஹெயிட்டி பூகம்பம்


ஹெயிட்டி அரசியல் ஊழல்கள், வறுமை, பட்டினி என துன்பங்கள் மலிந்து காணப்பட்ட நாடு. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக ஹெயிட்டியை ஸ்தம்பிக்கச் செய்தது ஒரு நிலநடுக்கம். அதன் பருமன் 7 ரிச்டர் அளவு ஆகும். இந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரும் அழிவுகளுடனான அனர்த்தமாக அது கருதப்படுகிறது.
அட்டைகளால் உருவாக்கப்பட்ட வீடுகள் கணப்பொழுதில் சிதைந்து போவது போல ஹெயிட்டியின் கட்டடங்கள் இடிந்து போயின. ஹெயிட்டிக்குத் தேவையான பணத்துக்கும் ஏனைய வளங்களுக்கும் உலக நாடுகள் இறைஞ்சி நின்றன. பலி எண்ணிக்கை 2 1/2 இலட்சமாக உயர்ந்தது.
பூகம்பத்தால் உருவான இடிபாடுகளுக்குள் சிக்கி மட்டும் மக்கள் இறக்கவில்லை தற்காலிக வைத்தியசாலைகளில் இரண்டாம் நிலைத்தொற்றுக்களாலும் உடலில் நீரிழப்பினாலும் கூட உயிரிழந்தனர். ஹெயிட்டியின் பணக்கார இரவு விடுதிகள் சில வாரங்களுக்குள்ளேயே பழைய நிலைமைக்குத் திரும்பின.
அவ்விடுதிகளுக்கு அருகிலே அகதிமுகாம்கள் அமைக்கப்பட்டிருந்தமையானது ஏற்றத்தாழ்வுகளின் கொடூரத்தை எடுத்தியம்பியது. அமெரிக்க மக்கள் ஹெயிட்டிக்காகச் சேகரித்த நிதி 61 மில்லியன் டொலர்களையும் தாண்டியது. அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் 476 மில்லியன் டொலர்களைச் சேகரித்திருந்தது.
ஆனால் உலக நாடுகளால் உறுதியளிக்கப்பட்டிருந்த நிதியுதவியில் மிகச்சிறிதளவான சதவீதமே (5.3 பில்லியன் டொலர்கள்) ஹெயிட்டியைச் சென்றடைந்திருக்கிறது. இந்த அவலங்களுள் இருந்து மீளுவதற்கு இன்னும் முயன்று வருகிறது ஹெயிட்டி.


2.ஐஸ்லாந்து எரிமலை

அதிஷ்டவசமாக ஐஸ்லாந்தின் இந்த எரிமலை வெடிப்பானது எந்த ஒரு மனித உயிரையும் காவுகொள்ளவில்லை. Eyja Fjallajokull  என்ற அந்த எரிமலையின் பெயரை உச்சரிக்கவே பலர் சிரமப்பட்டனர்.
அது வெடித்தபோது நீராவி, உடைந்த பாறைத்துண்டுகள், கண்ணாடித்துகள் என்பன பெரும் ஆறாக ஓடின. காற்றினால் பாரிய புகைமூட்டம் ஏற்படுத்தப்பட்டது.
ஐரோப்பாவின் பிரதான விமான நிலையங்களின் வான் பாதைகளைப் புகை மூடியது. எரிமலை வெடிப்பினால் தோன்றிய கண்ணாடித் துணிக்கைகள் விமான இயந்திரங்களில் சேதங்களை ஏற்படுத்தக் கூடுமெனவும் உணரப்பட்டது.
ஏறத்தாழ 23 நாடுகளில் அவற்றிற்கான விமான சேவையை 6 நாட்களுக்கு நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு செய்தது. ஏறத்தாழ அத்தகைய 100,000 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. 8 மில்லியன் பயணிகளுக்கு வேறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. இதனால் விமான சேவை வழங்குநர்களுக்கு நாளொன்றுக்கு 250 மில்லியன் டொலர்கள் செலவாயிற்று.
உலக நாடுகளுக்கிடையே விமானங்கள் மூலம் பரிமாற்றப்பட்டு வந்த தொழிற்சாலைகளுக்கான இயந்திர உதிரிப்பாகங்கள், ஏனைய முக்கியமான பொருட்களின் பரிமாற்றம் தடைப்பட்டது.
உலக நாடுகளின் பொருளாதாரம் ஒன்றிலொன்று தங்கியிருந்தமையைத் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலே காயப்படும் அமெரிக்க இராணுவத்தினர் மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஐஸ்லாந்தின் எரிமலை வெடிப்பால் அப்பணியும் ஸ்தம்பித்தது.
ஆதலால் அவர்கள் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த எரிமலையின் அயற் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த 800 பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். எரிமலை தோற்றுவித்த புகை மூட்டம் சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தியது.


3.பாகிஸ்தானின் மினி சூறாவளி


பாகிஸ்தானைப் பொறுத்தவரையிலே, ஜூலை மாதம் பருவக்காற்றுகளுக்குரியது. ஆனால் கடந்த 100 வருடங்களுள் என்றுமில்லாத வகையிலே பாகிஸ்தானின் 1/5 பகுதி நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியது.
ஏறத்தாழ 2000 பாகிஸ்தானியர் பலியாயினர். 6 மில்லியன் மக்கள் தம் இருப்பிடங்களை இழந்தனர். டெங்கு கொலரா நோய் அச்சுறுத்தல் அதிகரித்தன.
சேதமானது 9.6 பில்லியன் டொலர்களென மதிப்பிடப்பட்டது. 7.8 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டன. சர்வதேச உதவிகள் ஓரளவு கிடைத்தன. அவை பெருமளவில் கிடைக்காமல் போனதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருந்ததையும் ஊகிக்க முடிந்தது.

4.ரஷ்யாவில் பரவிய காட்டுத்தீ

பாகிஸ்தான் வெள்ள அழிவால் பாதிக்கப்பட்டிருந்த அதேநேரம் 7 ரஷ்ய பிராந்தியங்கள் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டன. 300,000 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டது.
ஜுலை மாதம் பதியப்பட்ட உயர்வெப்ப அலையானது ரஷ்யாவில் காட்டுத்தீயைப் பரவலாக ஏற்படுத்தியிருந்தது. வளிடண்டலம் நச்சுத்தன்மை மிக்க புகையால் நிரம்பியிருந்தது.
அடர்த்தியான புகை மூட்டம் மொஸ்கோவை மூடியது. விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டன. பல வாரங்களாகப் காட்டுத்தீ நீடித்தது. ஏறத்தாழ 50 பேர் கொல்லப்பட்டனர். 3000க்கும் அதிகமானோர் இருப்பிடங்களை இழந்தனர்.
கதிர்த் தொழிற்பாட்டுக் கழிவுகள் உள்ள பகுதிக்கு தீபரவுவதை முழு உலகுமே அவதானித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக ஓகஸ்ட் மாதமளவில் உருவான வெப்பநிலை வீழ்ச்சியும் மழை வீழ்ச்சியும் தீயை அணைத்தன.
வளி மண்டலத்தில் 6.6 மடங்கால் அதிகரித்திருந்த காபன் மொனொக்சைட்டின் அளவு சாதாரண நிலைக்குத் திரும்பியது. அதுவரை முகமூடிகளை அணிந்து வீதிகளில் பயணித்த ரஷ்ய மக்கள் முகமூடியின்றி பயணிக்கத் தொடங்கினர்.
காட்டுத்தீயால் உருவாகிய வரட்சி ரஷ்யாவின் கோதுமைப் பயிரைப் பெருமளவில் பாதித்தது. விளைவாக ஜுலை மாதம் முழுவதும் கோதுமை ஏற்றுமதியை ரஷ்யா தடைசெய்தது. தானிய உணவை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
1.4 மில்லியன் ரஷ்யர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டனர்.
அந்த நிலையிலிருந்து ரஷ்யா மீள 15 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

5.நாஷ்வில்லே வெள்ளப்பெருக்கு

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியினூடு பாய்ந்து செல்வது கும்பர்லாந்து நதியாகும். ஒருநாளும் இல்லாதவாறு அந்த நதியிலே உருவாகிய வெள்ளப்பெருக்கு நாஷ்மிலே நகரை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது.
அமெரிக்காவின் மத்தியில் அமைந்திருக்கும் நாஷ்வில்லே இசைக்குரிய நகராகக் கருதப்படுகிறது. இவ்வெள்ளப்பெருக்கால் நாஷ்வில்லே நகருக்கு மட்டும் 2 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருந்தது.
பல இசைக்கருவித் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்க வரலாற்றிலே அதிகளவு சேதத்தை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தமாக இந்த வெள்ள அனர்த்தம் கருதப்படுகிறது.
வெள்ளத்தால் சேதமடைந்த இசைக்கருவிகள் ஏலத்தில் விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளுக்கு நிதி திரட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.6.மச்சு பிச்சு நிலச்சரிவு

பெருநாட்டிலே அந்தீஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியே மச்சு பிச்சு ஆகும். மறைந்துபோன இன்கா நாகரிகத்தின் எச்சங்கள் அப்பகுதியில் காணப்படுகின்றன.
2010 ஜனவரி 24 ஆம் திகதி வீசிய புயலானது நிலச்சரிவு உருவாகக் காரணமாகியது.
குடிசைகள், வயல் நிலங்கள் தொட்டு வீதிகள், பாலங்கள் வரை சகல கட்டமைப்புகளுமே பாதிக்கப்பட்டன. பெருவின் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
பெருவுக்கு நாளாந்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித்தந்த சுற்றுலாத்தலம் 2 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தமை பெரிய அந்நியச் செலாவணி இழப்பைத் தோற்றுவித்திருந்தது.


7.சிலி பூகம்பம்

உலகையே உலுக்கிவிட்டிருந்த ஹெயிட்டி பூகம்பம் நிகழ்ந்து ஆறு வாரங்களுக்குள் 7 ரிச்டர் அளவிலான பூகம்பம் சிலியைத் தாக்கியது. சிலியின் கடலோரக் கிராமங்களை சுனாமி அலையும் தாக்கியது.
900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாயினர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தமது இருப்பிடங்களை இழந்தனர். 30 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தன. சிலி நாட்டின் 20 சதவீத வைன் உற்பத்தி முற்றாகப் பாதிக்கப்பட்டது.
ஹெயிட்டி எதிர்கொண்டதைப்போல பாரிய அழிவுகளை சிலி எதிர்கொள்ளவில்லை. ஏற்பட்ட சேதங்களைத் தம்மால் எதிர்கொள்ள முடியும் எனப் பெருமையுடன் கூறிய சிலி அரசு முதலில் சர்வதேச உதவிகளைக் கூட மறுத்து விட்டிருந்தது.
இக்கருத்தானது சிலி நாட்டுமக்கள் பலரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருந்தது. கரையோர மக்கள் மத்தியில் சுனாமி குறித்து எச்சரிக்காததற்கும் அவசரப் பணிகளைத் தாமதமாக மேற்கொண்டமைக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றனர் சிலிமக்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் களவுகளும் கொள்ளைகளும் மலிந்து போயிருந்தன. பின்னர் மெதுவாக வெளிநாடு உதவிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இன்னும் பல அகதிகள் கூடாரங்களிலேயே வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிலியின் இப்பூகம்பத்தை இதுவரை காலமும் பதியப்பட்டவற்றுள் 5 வது பெரிய பூகம்பமாக நாசா குறிப்பிடுகிறது. இப்பூகம்பம் புவிக்கோளத்தின் வாழ்நாளை 1.26 மைக்ரோ செக்கன்களால் குறைத்தும் விட்டிருப்பதாக நாசா தெரிவிக்கின்றது.


8.கெளதமாலாவில் ஏற்பட்ட ஆழ்துளை

நிலத்திலே ஆழமான பாரிய துளை ஒன்று ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ண முடிகிறதா? கெளதமாலாவின் நகரொன்றில், அது ஏற்பட்டது.
நிலக்கீழ் நீர், நிலத்திற்குக் கீழுள்ள பாறைகளை இளகச் செய்யும். புயல் காலங்களில் அப்பாறைகள் குழிவடைய நிலத்தில் அத்தகைய பாரிய துளைகள் குழிகள் தோன்றும். ஆனால் அவை பரவலாக உருவாவதில்லை.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைப் பொறுத்தவரையிலே அவை சகஜமானவை. கடந்த மே மாதம் 30 ஆம் திகதி உருவான அகத்தா புயலை அடுத்து கெளதமாலாவின் நகரொன்றிலே ஒரு ஆழ்துளை உருவாகியது. அது ஏறத்தாழ 66 அடி அகலமும் 100 அடி ஆழமும் கொண்டதாகக் காணப்பட்டது.
அதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் இருப்பிடங்களை இழந்தனர். 180 பேர் வரையில் உயிரிழந்தனர்.
சில மாதங்களின் பின்னர் அந்த ஆழ்துளையின் பரிமாணங்கள் 130 அடி அகலமாகவும் 65 அடி ஆழமாகவும் மாற்றம் பெற்றது.
விஞ்ஞானிகள் மத்தியிலும் கூட இந்த ஆழ்துளை ஒரு மர்மமாகவே இருக்கிறது.9.சீனாவின் பூகம்பம்

2 வருடங்களுக்கு முன்னர் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கியிருந்தது. கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதியும் அதையொத்த பூகம்பம் குயிங்காய் மாகாணத்தைத் தாக்கியது. 2000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த பூகம்பம் 90,000 பேரைக் காவுகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவைப் பொறுத்தவையிலே ஏப்ரல் என்பது பனிக்காலமாகும். அத்துடன் இந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திபெத்திய விவசாயிகளும் ஆயர்களுமாவர். அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டவர்கள்.
90 சதவீதமானோரின் வீடுகள் மரத்தாலும் களிமண்ணாலும் ஆனவை. சீன இராணுவத்தினரும் பெளத்த மத குருமாரும் இணைந்து உதவிப்பணிகளை முடுக்கிவிட்டனர்.
ஆரம்பத்தில் வெளிநாட்டு உதவியைப்பெற சீனா தயக்கம் காட்டிய போதும் கடைசியில் 4 மில்லியன் டொலர்களை உலக நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டது. பூகம்பம் நிகழ்ந்த பகுதி பனிபடர்ந்த மலைப் பகுதியாகையால் மீள்கட்டமைப்புப் பணிகள் தாமதமாகவே நடைபெற்று வருகின்றன. ஏனெனில் விநியோகப் பொருட்களைக் குறித்த பகுதிக்கு கொண்டு செல்வதற்காகப் பெருஞ்சிரமப்பட வேண்டியுள்ளது.
ஆனால் இந்த மீள்கட்டமைப்புப் பணிகள் மூலம் பின் தங்கிய அப்பகுதிக்கு புதிய தொழில்நுட்பங்கள் சென்றடையவுள்ளன. நதி நீரைச் சுத்திகரிக்கும் திட்டமும் பூகம்பம் பாதிக்காத கட்டடங்களை அமைக்கும் திட்டமும் கூட அத்தொழில்நுட்பங்களுள் அடங்கும்.


10.கிழக்குக் கடற்கரை பனிப்புயல்

மத்திய அத்திலாந்திக் கடற்கரையினூடு வீசிய பனிப்புயலானது அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் 2 அடி உயரத்துக்கு பனியை நிரப்பியது. ஏறத்தாழ 4 நாட்கள் வொஷிங்டன் மாநிலமே ஸ்தம்பித்துப் போயிருந்தது.
இதனால் 450 மில்லியன் டொலர் மதிப்பிலான உற்பத்தித்திறன் இழப்பு ஏற்பட்டதாகக் கணிப்பிடப்பட்டது.

குறைந்தளவிலான (2) உயிரிழப்புகளே ஏற்பட்டன. விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. பாடசாலைகள் மூடப்பட்டன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். விளைவாக உற்பத்தித் திறனில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டது.

No comments:

Post a Comment