An effort to bring back the memories of the hidden treasures of our rich culture and to change the way we live in...
Friday, November 13, 2009
பு+மித்தாய்க்கு இழைக்கும் கொடுமைகள் இறுதியில் பிள்ளைகளுக்கே வந்துசேரும்
காலநிலை மாற்றமெனப் படுவது காலத்துடன் புவி அல்லது அதன் பிராந்தியங்களில் ஏற்படும் சீதோ ஷண மாற்றங்களைக் குறிக்கும். வளி மண்டலம் தனது சராசரி நிலையிலி ருந்து தசாப்தங்களிலோ அல்லது மில் லியன் வருடங்களிலோ அடையும் மாற்றத்தைக் காலநிலை மாற்றமெனலாம்.
காலநிலை மாற்றமானது புவியின் உள்ளக மாற்றங்கள், சூரிய ஒளிச் செறிவில் ஏற்படும் வேறுபாடு போன்ற புற விசைகள் மற்றும் சமீப நூற்றாண்டுகளின் மனித நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் ஏற்படலாம். இது இன்று பலராலும் பேசப்படும் ஒரு சொற்றொடராகவே காணப்படுகிறது.
புவி வெப்பமடைதல், பனிப் பாறை உருகுதல், கடல் மட்டம் உயருதல், வெள்ளம், வரட்சி, புதிய நேய்க்களெனப் பலரும் கதைக்கக் கேட்டிருப்போம். நாமும் கதைத்திரு ப்போம். ஆனால் அடிப்படையில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்த வர்கள் அப்பலருள் மிகச் சிலரேயாவர்.
எமது அன்றாட பல்வேறு செயற் பாடுகள் காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிப்பதில் நேரடியாகப் பங்களிக்கின்றன என்பதை எம்மில் பலர் அறிவதில்லை. ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் வாகனங்களில் பயணிக்கும் போதும் நாம் கால நிலை மாற்றத்தின் பங்காளிகளாக மாறுகிறோம்.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து காலநிலை மாற்றமானது ஒரு மெது வான செயற்பாடாக நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.
மிக மிக ஆரம்பத்தில் 10 பாகை செல்சியஸ் ஆகவிருந்த புவியின் வெப்பநிலை, காலப் போக்கில் உயிர்கள் நிலைத்து வாழக்கூடிய வகையில் மாறியது கூட இக்காலநிலை மாற்றத்தால்தா னெனக் கூறலாம்.
ஆனால் கடந்த இரு நூற்றாண்டுகளாக இக் கால நிலை துரித கதியில் மாற்றமடைந்து வருவதுடன் சாதாரண மனிதனின் அவதானிப்பால் உணரக்கூடியதாகவு மிருக்கிறது. இலங்கையின் கரை யோரப் பகுதிகளில் தொடர்ந்து பய ணங்களை மேற்கொள்பவர்கள், காலத்துடன் கடலரிப்பின் அதிகரி ப்பை நன்கு உணர்ந்திருப்பார்கள்.
பருவ காலம் கடந்த மற்றும் சீரற்ற மழை வீழ்ச்சியையும் எதிர்பாராத வரட்சியையும் எதிர்நோக்குகிறோம். ஆனால் இவையெல்லாம் எதனால் இடம்பெறுகின்றனவெனச் சிந்திக்கத் தவறிவிடுகிறோம்.
வேகமாகப் பெருகி வரும் சனத்தொகை மனிதனின் தேவைகளை அதிகரிக்கிறது. அத்தேவைகளின் அதிகரிப்புக்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கைத்தொழில், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அவை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணிகளாகின்றன.
காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிக்கும் பிரதான காரணியாகப் பூகோளம் வெப்பமயமாதல் கருதப்படுகின்றது. இயற்கை மற்றும் மனித செயற்பாடுகள் பூகோளம் வெப்பமயமாதலைத் தோற்றுவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கின்றன.
வளி மண்டலத்திலுள்ள பச்சை இல்ல வாயுக்களே பூகோளம் வெப்பமயமாதலைத் தோற்றுவிக்கின்றன. அடிப்படையில் இப்பச்சை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தின் மீது ஒரு படையாகச் செயற்பட்டு பூகோளத்தின் வெப்ப நிலையை உயிர்கள் நிலைத்திருக்கக்கூடிய வகையில் சீராகப் பேணுகின்றன.
காபனீரொட்சைட், மெதேன், நைதரசன்ரொட்சைட் போன்ற வாயுக்களும் பச்சை இல்ல வாயுக்களுள் அடங்குகின்றன. கடந்த இரு நூற்றாண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் கைத்தொழில் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் இவ்வாயுக்கள் அதிகளவில் வெளிவிடப்பட வழி வகுத்தமையால், வளிமண்டலத்தில் இவ்வாயுக்களின் செறிவு அதிகரிக்கப்பட்டு புவி வெப்பமயமாதல் தோற்றுவிக்கப்படுகிறது.
பச்சை இல்ல வாயுக்களை வெளிவிடும் முக்கிய செயற்பாடாகப் பெற்றோலியப் பாவனை இருந்து வருகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் 1996 ஆம் ஆண்டு 32 சதவீதமாகவிருந்த பெற்றோலியப் பாவனை, 2005 ஆம் ஆண்டளவில் 45 சதவீதமாக உயர்ந்திருந்தது.
இப்பாவனையில் போக்குவரத்து 50 சதவீதத்தையும் சக்தி மூலமாகப் பயன்படுத்துதல் 25 சதவீதத்தையும் ஏனைய தொழிற்சாலை மற்றும் வீட்டுத் தேவைகள் மிகுதி 25 சதவீதத்தையும் கொண்டிருக்கும்.
பெற்றோலிய எரிபொருள் பாவனையால் உலகளாவிய ரீதியில் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட் மற்றும் மெதேன் வாயுக்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
இவை தவிர தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள பச்சை இல்ல வாயுக்களை வெளியேற்றும் குளிர்சாதனப் பெட்டி போன்ற உபகரணங்களின் பாவனையும் காடுகள் போன்ற இயற்கை வளங்களின் அழிப்பும் பூகோளம் வெப்பமயமாதலில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
பூகோளம் வெப்பமடைவதால், துருவப் பகுதியிலுள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்கும். வெப்பத்தால் கடல் மற்றும் சமுத்திர நீர் விரிவடையத் தொடங்கும். உயரும் கடல் மட்டத்தால் எதிர்காலத்தில் மாலைதீவுகள் போன்ற சிறிய தீவுகள் கடலினுள் அமிழ்ந்து போகலாம்.
அத்துடன் நன்னீர் வளங்களுள் உவர் நீர் கலக்கப்படும் சாத்தியம் அதிகரிப்பதால் நன்னீர்ப் பற்றாக்குறை ஏற்படும். நீர் ஆவியாதல் அதிகரிக்கும். உலகின் நீர்ச் சமநிலை குலைவடையும்.
சூழலின் வெப்பநிலை அதிகரிப்பதால் சூழல் மாசடைதல் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இன்னும் சில தசாப்தங்களில் பூகோளத்தின் சராசரி வெப்பநிலையானது 1.40வி – 5.40வி யால் அதிகரிக்குமெனவும் 2100 ஆம் ஆண்டளவில் கடல் மட்டமானது 9 ணீசீ – 88 ணீசீ வரை உயரும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
இவை யாவும் காலநிலை மாற்றத்தில் பெருஞ்செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒரு நாட்டின் தலா வருமானத்துடன் அந்நாடு வெளியேற்றும் பச்சை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித்துச் செல்கிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இக்காலநிலை மாற்றத்தின் அவதானிக்கப்படக் கூடிய விளைவுகளாகச் சீரற்ற மழைவீழ்ச்சி, பருவ காலங்களின் கால அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் புயல் மற்றும் இயற்கை அழிவுகள், வெள்ளப் பெருக்கு, வரட்சி, மண் சரிவுகள், காணாமற் போகும் கடற்கரையோரங்கள், இடம்பெயரும் மீன் வளங்கள், உவர் நீராகும் நன்னீர் வளங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
காலநிலை மாற்றமானது உயர் அகலாங்குகளில் உள்ள நாடுகளின் காலநிலையைப் பெருமளவில் பாதிக் குமென நம்பப்படுகிறது.
குறித்த காலங்களில் மட்டுமே பூக்கும் தாவ ரங்களின் பூக்கும் காலங்கள் மாறுபடு வதுடன் பருவ காலத்திற் கேற்ப இடம்பெயரும் உயிரினங்க ளின் இடப்பெயர்வும், நிலைப்பும் அச்சுறுத் தலுக்குள்ளாக்கப்படும்.
அத்தியாவசிய மான இயற்கை வளங்கள் மேலும் அழிவடையும். விவசாய முறைமை கள் குலைவ டையும். பனிக்கரடிகள், பென்குயி ன்கள், கடல் வாழுயிரினங் கள், பவளப் பாறைகள் மட்டுமன்றிப் பல உயிரினங்களின் வாழ்வு அச்சுறு த்த லுக்குள்ளாகும். உயிரினங்களுக் கிடையிலான சமநிலை குலைக்கப் படும்.
புராதன நினைவுச் சின்னங்கள் அழிவுக்குள்ளாகும். நீர்ப்பற்றாக்குறை அதிகரிக்கும். முடிவில் உயிர்களின் உயிர் வாழும் உரிமை கேள்விக் குறியாக்கப்படுமென்பதே நிதர்சன மான உண்மை.
நலிவாக்கப்பட்ட வளிமண்டல அமுக்க மாற்றங்களால் உலர்வலயப் பிரதேசங்கள் அதிக மழை வீச்சியைப் பெறுவதுடன் ஈரவலயப் பிரதேசங்கள் அதிகளவில் வரட்சியடைதலே எல்நினோக்கால நிலை எனப்படும். காலநிலை மாற்றம் எல்நினோக் காலநிலைக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்குமெனலாம்.
இவை தவிரப் பல நோய்கள் உரு வாவதற்கான அடிப்படைக் காரணி யாகவும் இக்காலநிலை மாற்றம் அமைகிறது.
பொதுமக்களின் சுகாதார மானது பாதுகாப்பான குடிநீர், போதுமான அளவு உணவு, பாதுகா ப்பான புகலிடம், சிறந்த சமூக நிலைமைகள் ஆகிய காரணிகளி லேயே தங்கியுள்ளது. காலநிலை மாற்றம் இக்காரணிகள் யாவற்றி லுமே பாதிப்பை ஏற்படுத்திப் பொது மக்களின் சுகாதார நிலைமைகளை யும் கேள்விக்குறியாக்குகிறது.
குறிப்பாகப் பருவ கால அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நுளம்பு போன்ற காவிகளால் பரப்பப்படும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் காலம் அதிகரிக்கப்படும். அதே நேரம் சீரற்ற மழை வீழ்ச்சி, காவிகளின் இனப் பெருக்கத்துக்கு வழிவகுப்பதுடன் நோய் பரவுதலையும் அதிகரிக்கும்.
மாசடையும் நன்னீர் வளங்களால் வயிற்றோட்டம், கொலரா போன்ற நோய்களின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கும். இவை தவிர, அதிகரித்து வரும் சுவட்டு எரிபொருள் பாவனையால் சுவாச நோய்களும் அதிகரிக்கும்.
வெப்ப அலைகளால் தோல், சுவாச மற்றும் இருதய நோய்களும், குறைவடைந்துவரும் உணவு உற்பத்தியால் போசாக்கின்மையும் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
எல்லாவற்றிக்கும் மேலாகக் காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கள் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். நாடளாவிய ரீதியில் பஞ்சம், பட்டினி அதிகரிக்கும். அகதிகளின் சுமை அதிகரிக்கும்.
எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களுக்கான போட்டி அதிகரிக்கும். முகாமைத்துவப்படுத்தப்பட முடியாத அளவில் குடியகல்வு இடம்பெறும். மாசடையும் நன்னீர் வளங்கள் விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பைப் பாதிக்கும். இது நாடொன்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
காப்புறுதி நிறுவனங்கள் உட்படப் பல வர்த்தக நிறுவனங்கள் வீழ்ச்சியடையும் நிலைக்குத் தள்ளப்படும். விண்வெளி ஆராய்ச்சிகளும் பயணங்களும் பிற்போடப்படலாம். தொழில் நுட்ப முன்னேற்றங்களும் ஆராய்ச்சிகளும் தடைப்படலாம். இன்னொரு பொருளாதார நெருக்கடிக்கும் உலகம் மீண்டும் தள்ளப்படும் காலம் வெகுதொலைவிலில்லை.
அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், காலநிலை மாற்றத்துக்கு இலங்கை சிறியளவிலான பங்களிப்பையே செலுத்தியிருக்கிற போதிலும் பாரிய விளைவுகளை எதிர்நோக்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இலங்கையின் உலர் வலயப் பிரதேசம் மேலும் வரட்சியை எதிர்நோக்குமெனவும் ஈரவலயப் பிரதேசம் இன்னும் அதிக மழை வீழ்ச்சியைப் பெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது சிறிதளவிலான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கே பாதிப்புக்குள்ளாகும் நெல், தேயிலை, மற்றும் இறப்பர் போன்ற பயிர்ச்செய்கைகள் பாதிப்புக்குள்ளாகும். நுவரெலியா மாவட்டத்தில் உருளைக் கிழங்கு விளைவிக்கப்பட முடியாத காலம் கூட ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் கடல் நீர் நன்னீருடன் கலப்பதால் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற துறைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன், குடிநீர்ப் பிரச்சினையும் உருவாகும்.
கடற்கரையோரக் குடியிருப்பாளர் கள் உள்நோக்கி இடம்பெயரத் தலைப்படுவதால் விவசாய நிலங்கள் அபிவிருத்தித் தேவைகளுக்குப் பாவி க்கப்படும் சாத்தியம் உள்ளது. மீன்பி டித் தொழிலுடன் சுற்றுலாத்துறையும் பாதிப்புக்குள்ளாகும்.
இவை தவிர நுளம்புகள், ஈக்கள், கரப்பொத்தான் களின் பரம்பல் அதிகரிக்கப்படுவது டன் டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் அச்சுறுத்தல்களும் களைத் தாவரங்களின் பரவுதலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப் படுகிறது.
எம்மால் காலநிலை மாற்றத்தைக் குறுகிய கால அடிப்படையில் தடுக்க முடியாவிடிலும், அயன மண்டல சூழல் தொகுதி உயிர் வாழ எம்மா லான உதவிகளைச் செய்ய முடியும். அதற்கு நீர்வலு, காற்றின் வலு, சூரிய சக்தி போன்ற இயற்கை வள ங்களிலிருந்தும் தொழிற்சாலை மற் றும் வீடுகளிலிருந்து வெளியேற்றப் படும் கழிவுகளிலிருந்தும் வினைத் திறன் மிக்க வகையில் சக்தியைப் பெற வழிசெய்யப்பட வேண்டும்.
பெரிய தொழிற்சாலைகள் தமக்குத் தேவையான சக்தியைப் பெறத் தாமே சக்தி மூலங்களை வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களின் மிகை பாவனை குறைக்கப்பட வேண்டும். சிறந்த கழிவு முகாமைத்துவத்துடன் பொருட்களின் மீள்பாவனையும் மீள் சுழற்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் விளைவுகளை எதிர்நோக்கக் கூடிய வகையில் புதிய முறைமைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். தேசிய ரீதியில் வானியல், நீரியல், புவியி யல், கடல் வளம் மற்றும் சுகாதாரம் போன்ற சேவைத் துறைகளுக்கி டையே சிறந்த ஒத்துழைப்புப் பேணப்பட வேண்டும்.
கொள்கைகளும் சட்டங்களும் அமுலுக்கு வரவேண்டும். எனினும் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இளைஞர் கழகங்கள் போன்ற அமைப்புகளினூடு கிராமிய மட்டத்திலிருந்து மக்கள் மத்தியில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டியதுடன் ஏற்படப் போகும் விளைவுகளை எதிர்கொள்ளவும் பொதுமக்கள் தயார் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
காலநிலை மாற்றம் தொடர்பாக உலகளாவிய ரீதியில் பல மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கான மூன்றாவது உலக மகாநாடும், அடுத்த மாதம் நோர்வேயில் நடைபெறவிருக்கும் மாநாடும் இவற்றிற்குச் சில உதாரணங்களாகும்.
இவை தவிரக் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆராயவும், நடவடிக்கை களை மேற்கொள்ளவும் பல அரச சார்பற்ற நிறுவனங்களும், சுயாதீனக் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
எமது பூமி அன்னையை இக்காலநிலை மாற்றம் ‘மெல்லப்புவி இனிச்சாகும்’ எனும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நாம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கான இயற்கை வளங்களை அழித்து வருகிறோம். சிறந்த பிரஜையாக, எம் எதிர்காலச் சந்ததியினருக்கு நல்வழி காட்டும் முன்னோராக நாம் செயற்பட வேண்டும்.
எளிமையாக வாழப்பழக வேண்டும். எம்மை ஆடம்பர வாழ்வியலுக்கு இட்டுச் செல்லும் மனப்பாங்கை மாற்ற வேண்டும். நாம் வாழும் சூழலின் காப்பாளரும் நாமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மின் குமிழ்கள், மின் விசிறிகள், ஏனைய மின் உபகரணங்கள், கணினி போன்றவற்றின் ஆளிகளைத் தேவையற்ற நேரங்களில் திறந்து வைத்தல், நீரைச் சேமிக்கும் வழிவகைகளை இயன்றவரை கையாளல், கைத்தொலைபேசி மின்னேற்றப்பட்டவுடனேயே மின் தொடர்பைத் துண்டித்தல், தேவையற்ற வாகனப் பிரயாணங்களைத் தவிர்த்தல், வீட்டிலுள்ள மின்னுபகரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், மரங்களை நாட்டுதல், பிளாஸ்டிக் பைகளின் பாவனையைத் தவிர்த்தல், ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட தாளை மீளப் பாவித்தல், சூரிய கலங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், கழிவுகளின் பெறுமதியை உணர்ந்து அவற்றை மீள் சுழற்சி செய்தல், சக்தியைச் சேமிக்கும் மின் குமிழ்களைப் பாவித்தல், நாம் சார்ந்துள்ள சமூகத்துக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்கள் பற்றி அறிவூட்டல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடலாம்.
கி.பி. 1851 ஆம் ஆண்டு செவ் விந்தியருக்குச் சொந்தமான இருபது இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி செவ்விந்தியரிடம் விலைக்குக் கேட்ட போது, அவர்களின் தலைவனான சியட்டில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபல்யமானது. அக்கடிதத்திலிருந்து சில வரிகள் வருமாறு.
‘விலங்குகள் இல்லையென்றால் மனிதனேது? விலங்குகளெல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டால் ஆன்மாவை விட்டுச்சென்ற கூடு போல மனித னும் இறந்துவிடுவான். பூமி எங்கள் தாயென்று நாங்கள் எங்கள் குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுத்தோம். அதை உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
பூமிக்கு எதுவெல்லாம் நேரிடுமோ, அது அதன் பிள்ளைகளுக்கும் நேரிடும். வாழ்க்கை என்ற வலையை மனிதன் பின்னவில்லை. அவன் அதிலோர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவன் எத்தனை கேடுகள் செய்தா லும் அவற்றையெல்லாம் தனக்கே செய்து கொண்டவனாகிறான்.
நீங்கள் படுத்துறங்கும் நிலத்தை நீங்களே அசுத்தப்படுத்தினால் ஓரிரவில் உங்கள் குப்பைகளுக்குள்ளேயே மூச்சுத்திணறி நீங்கள் இறந்து போகலாம். நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம்.
உங்கள் நிலத்தை நாங்கள் நேசித்தது போலவே நீங்களும் நேசியுங்கள். உறுதியோடும் வலிமையோடு, பூரண விருப்பத் தோடும் உங்கள் குழந்தைகளுக்காக இந்த நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள்’
படிப்பறிவற்ற அப்பழங்குடியினர் அன்று உணர்ந்து கூறியதை, ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளின் பின்னரே எம்மால் உணர முடிந்திருக்கிறது. இது இன்று நாகரிகமான சமுதாயமென மார்தட்டும் மனித இனத்தின் சாபக்கேடன்றி வேறென்ன?
-சாரதா மனோகரன் (source: www.thinakaran.lk)
Subscribe to:
Posts (Atom)