Thursday, May 7, 2020

மலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ !


அது  தொண்ணூறுகளின் போர்க்காலம். பாடசாலையும் வீடும் அயலுமாய்ச் சுழன்று செல்லும் வாழ்க்கை. அப்போதெல்லாம் தற்காலம் போல்  வீடுகள் அயலில் இருக்காது.  தனியார் காணிகள் என்றால் நகரத்திலும் கூட ஓர் ஏக்கருக்கு ஒரு வீடு தான் இருக்கும். எங்கள் வீடும் அப்படித்தான். போர்க்காலம் ஆதலால் அம்மாவின் கட்டுப்பாடுகள் அதிகமிருக்கும். சைக்கிள் ஓடலாம். ஆனால் வளவிற்குள் மட்டும் தான் ஓட முடியும். “படலையைத் தாண்டினால் கால் அடித்து முறிப்பேன்” என்ற எச்சரிக்கை முன்னதாகவே வழங்கப்பட்டிருக்கும். இந்த விடயத்தில் அம்மா சொன்ன சொல் தவறமாட்டார் என்பதில் எமக்கும் உறுதியான நம்பிக்கையிருக்கும். ஆதலால் நாம் வளவை விட்டு வெளியே செல்வதில்லை. அம்மாவின் அடியின் உக்கிரத்தை மறந்தவர்கள் இல்லையே!  பாடசாலை நண்பர்கள் வீடுகளுக்கு வந்து புழங்கியதில்லை. அயல் வீடுகளில் இருக்கும் ஓரிரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் மாலையில் விளையாட வருவார்கள். நாமும் அவர்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கிறோம். மழைக் காலங்களைத் தவிர வீடுகளுக்குள் இருந்து நாங்கள் விளையாடியதில்லை. வளவு முழுக்க அலைந்து திரிவதும்  ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு சைக்கிள் ஓடுவதும் மரங்களில் உள்ள எந்தவொரு பழத்தையும்  விட்டுவைக்காமல் அடித்துச் சாப்பிடுவதுமாக எங்களுடைய நாட்பொழுதுகள் ஓய்ந்து விடும்.

வளவு முழுவதும் பழ மரங்கள் நிறைந்து காணப்படும். சமையலுக்குப் பயன்படக்கூடிய பெரும்பாலான மரங்கள் வளவுக்குள் இருக்கும். அதிகளவிலான பழங்கள் பிஞ்சிலேயே எம் வயிற்றுக்குள் சரணாகதியடைந்து விடுவன. பிஞ்சுக் காய்களின் கயர்ப்புத் தெரியாமல், அவற்றை களவாகக் கொண்டு செல்லும் உப்புடன் சேர்த்துச்  சாப்பிடுவதில்  நாம் தனியின்பத்தையும் நிறைவையும் காண்போம். எமக்கு அறிவு தெரிந்த காலத்தில் இருந்து அம்மம்மா சந்தையில் பணம் கொடுத்து மரக்கறியும் மீனும் வாங்கியதாய் நினைவில்லை. தேங்காய், நெல்லிக்காய், ஜம்புக்காய், எலுமிச்சம்பழம், தோடம்பழம், மாம்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம் என அவரின் பண்டமாற்றுக் கொள்கை வருடம் முழுவதும் நிலைத்திருக்கும். அம்மம்மா கொண்டு செல்லும் எலுமிச்சம்பழத்துக்காக சந்தையில் காத்திருக்கும் வியாபாரிகளும் இருந்தார்கள். குளிக்கும் அறையிலிருந்து சமையல் அறையிலிருந்தும் வெளியேறும்  நீர் எலுமிச்சை மரங்களுக்குச் செல்லும். பழம் பழுக்கத் தொடங்கிய பின்னர் மட்டும் தான் பிடுங்குவார். நிலத்தில் விழுந்த பழங்களை முட்களுக்குள் புகுந்து பொறுக்கிக் கொடுக்கும் பொறுப்பு எங்களதாக இருக்கும்.    வீட்டிலிருக்கும் இரு கால் குரங்குகளையும் தாண்டி அவர் சந்தைக்குப் இப்பழங்களையெல்லாம் கொண்டு செல்வது ஆச்சரியம் தான்.  ஆதலினால் நாம் வாழ்ந்த காலப்பகுதியில் உணவுப் பஞ்சத்தைக் கடவுள் எமக்குத் தந்திருக்கவில்லை. மரம் ஒன்று காய்த்தால், காய் முற்றிப் பழமாகிக் கனியும் வரை காத்திருக்கும் பொறுமை எமக்கு இருப்பதில்லை.  ஆதலினால் எங்கள் உயரத்துக்கு எட்டாத உயரத்தில்தான் பொதுவாக அம்மம்மாவின் ஆட்சி இருக்கும்.  இத்தகைய பண்பை நாம் இயற்கைச் சூழலிலும் காண முடியும் . இதை ஆங்கிலத்தில் ‘ ecological niche ' என்று சொல்வார்கள். 

சின்ன ஜம்பு காய்க்கும் காலத்திலே,  வார இறுதி நாட்களின்  காலை வேளைகளில் நாம் முழிப்பது அந்த மரத்திலாகத் தான் இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. பிறகு உருவாகும் தொண்டை அடைப்புக்கு,  கற்பூரவல்லிச் சாறும் பனங்கல்லாக்காரமும் தருவது  அம்மம்மாவின் பொறுப்பாகிவிடும். குருவி கொந்தின விலாட் மாம்பழமும் அப்படித்தான். அதற்கு மட்டும் அம்மம்மாவும் பங்குக்கு வருவார். செங்காய்ப் பதத்தில் தோலுரித்து வெட்டித்தரும் சேவை இலவசம் என்பதால் நாமும் சந்தோஷமாக அவரை எம் குழாத்தில் இணைப்பதுண்டு. இப்போதும் கூட குருவி கொந்தின விலாட் மாம்பழத்தை நான் விட்டு வைப்பதில்லை. 

அயலிலேயே இடை நிலைப் பாடசாலை ஒன்றிருந்தது. தற்போது உயர்தரப்பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு விட்டது. ‘கனிஷ்டா’ என்று  நாம் குறுக்கி அழைப்போம். மரங்கள் காய்க்கும் காலங்களில் எப்படியும்  மாணவர்கள் படலையில் நிற்பார்கள். எங்கள் வளவில் என்ன பழம் எப்போது காய்க்கும் என்று எம்மை விட அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.  சந்தைக்குக் கொடுத்தது போக எஞ்சியவற்றை அம்மம்மா அவர்களுக்காய் வைத்திருப்பார். அவர்கள் இலவசமாய் எடுத்துச் செல்லலாம்.

எங்கள் வீட்டுப் பெருநெல்லிக்கு  எப்போதும் பெரும் கிராக்கி இருக்கும். பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக்கே மொத்தமாகத் தீர்த்து விடுவோம். “கொம்மான்ர சீதன அட்டியல் எலுமிச்சம்பழமும் முட்டையும் வித்துச் செய்தது” என்று அம்மம்மா பல தடவைகள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எங்கள் வளவுக்கும் கனிஷ்டா மைதானத்துக்கும் ஒரே எல்லை வேலி தான் இருக்கிறது. எவ்வளவு தான் அடைத்தாலும்,  வேலியில் இடைவெளி வந்து விடும். பாடசாலை இடைவேளை நேரங்களில் பழ மரங்களுக்குக் கீழ் ஓரிரு சிறார்களாவது நிற்பர். அவர்களைக் கண்காணிப்பதுவும் அம்மம்மாவின் பிரதான கடமைகளில் ஒன்றாகி விடும். 

இன்று வீடுமில்லை. பெரும்பாலான மரங்களும் இல்லை. ஆனால் எவ்வளவு அடைத்தாலும் அந்த ஒற்றை வேலியில் இடைவெளி உருவாகிய வண்ணம் தான் இருக்கிறது. என் கண்களுக்குத் தெரியாத பழங்கள் எல்லாம் பள்ளிச் சிறார்களுக்குத் தெரிந்து தான் விடுகின்றன. அதுமட்டுமல்ல, இப்போது வளவின் ஆட்சி அவர்களுக்கும் குரங்குகளுக்கும் மட்டும் தான் இருக்கிறது. சில நேரங்களில் முயல்களும் வருவதுண்டு.   முன்பெல்லாம் பகலில் வந்து சென்ற குரங்குகள் இப்போது வளவிலே நிரந்தர குடித்தனம் நடாத்துகின்றன.   நாம் அங்கு வாழ்ந்த காலத்தில் குரங்குகளைக் கலைப்பதற்காக நாம் எவரிடமும் புகார்  செய்ததாக எனக்கு நினைவில்லை. குரங்குகளைக் கலைக்க  எங்களிடம் இருந்த ஒரே ஆயுதம் அம்மப்பாவின் கவணும் கற்களும் தான்.   நாம் அவரது உதவியாளர்களாக ஒரேயளவான கற்களைப் பொறுக்கிக் கொடுப்போம். அனுமதி இருந்த காலங்களில் துப்பாக்கியுடன் வேட்டையாடிய  நினைவுகளை மீட்டிய படி குரங்குகளைக் கலைக்க உதவுவார்.   


இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது பரவிப்பாஞ்சானில் அதிகளவு மரங்கள் நிற்கும் ஒரு சில வளவுகளுள் எங்களதும் ஒன்று. பல பெரிய வளவுகள் எல்லாம்  உரித்துகள் கை மாறி, விலைபோய், ஆகக்கூடிய விஸ்தீரணம் 2 பரப்பு எனும் அளவுக்கு சுருங்கி விட்டன. அயலவர்கள் பலர் 1996 இடப்பெயர்வுக்குப் பின்னர் வந்து குடியேறியவர்கள். அவர்களைப் பொறுத்தவரை நாமெல்லாம் ஊருக்குப் புதியவர்கள். 
2009 க்குப் பின்னர் ஒவ்வொரு முறை  நான் வளவுக்குச்  செல்லும் போதும் யாராவது முறைப்பாடு சொல்லக் காத்திருப்பார்கள். “மரங்களை வெட்டி விடுங்கோவன். ஓரே குரங்குகளாய்க் கிடக்கு! ஓடுகளையெல்லாம் உடைச்சுத் தள்ளுதுகள்”, “காணி வெளியாய் இல்லாததால ஒரே பாம்பாய்க் கிடக்கு. ஒருக்காய் வெளியாக்கி விடுங்கோ”, “அப்பவே கேட்டனாங்கள்; எங்களுக்கு வித்திருக்கலாம் தானே. இப்ப பாருங்கோ பயனில்லாமல் கிடக்கு”, “ நீங்கள் கொழும்பு வாசியாகி விட்டீர்கள்; உந்தக் காணியை வைத்து என்ன செய்யப்போறீங்கள். பேசாம வித்துப்போட்டு தொடர்மாடி வீடொன்று வாங்கி விடலாமே? “ என்றெல்லாம் கோரிக்கைகளும் அறிவுரைகளும் இலவசமாய்க் கிடைக்கும். ஆனால் அந்த வளவையும் அங்குள்ள மரங்களையும் பின்னிப்பிணைந்த அந்தப் பசுமையான நினைவுகளிலே வாழ்தல் எத்துணை சுகம் என்பது அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும். அந்த சுகத்தை இந்த நலன்விரும்பிகளிடம் விபரித்து விளக்குமளவுக்கு என்னிடம் வார்த்தைகள் இருக்காது. நான் விரும்புவதுமில்லை. எல்லாவற்றுக்கும் ‘ஓமோம்’ என்று தலையாட்டி விட்டு நான் விரும்பியதைச் செய்து விடுவதே கடந்த தசாப்தத்தில் நான் கைக்கொண்ட உத்தி.  

நடக்க நடக்கப் புதையும் நிலமும்  தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கப்படாமலேயே கோடையை வெற்றி கொண்ட பாரம்பரிய தென்னை இனங்களும் என் உத்தியை நியாயப்படுத்துவனவாக இருக்கின்றன. இந்த முறைப்பாட்டாளர்களின் கிணறுகளில் நீர் நிலைப்பதற்கும், அவர்கள் அனுபவிக்கும் குளிர்மையான நுண்காலநிலைக்கும் எனது வளவு ஆற்றும் அரும்பணிகளை விளக்கினால் அவர்கள் நம்பப்போவதில்லை. மரங்களை வெட்டி முடிக்கும் வரை நிழலின் அருமையையோ கிணறுகளில் நீர் வற்றிப்போகும் வரை மரங்களின் பயனையோ அவர்கள் உணரப்போவதுமில்லை. காலம் கடந்து ஞானம் வந்து என்ன பயன் தான் இருக்கப்போகிறது? எல்லாவற்றுக்கும் மேலாக, எனது பேரனாரும் பேத்தியாரும்  நாட்டி வைத்த மரங்களை வெட்டித்தள்ள எனக்கென்ன உரிமைதான் இருக்கிறது?

1990 களின் நடுப்பகுதி வரை அம்மண்ணிலே நாம் வாழ்ந்த காலங்கள் மட்டும் தான் எம் வாழ்வில் பசுமையானவை. அவை யுத்தத்தின் கொடூரத்தில் உயிர்களையும் சொத்துகளையும் இழந்த காலங்களாக இருந்த போதும், வான் பறவைகளாலும் நிலத்தில் பாய்ந்து வரும் எரிதழல்களாலும் எம் வாழ்வு அங்கு நிலையற்றதாக இருந்த போதும் கூட ஆர்ப்பரிப்பற்ற வாழ்வை எம்மால் அங்கு மட்டும் தான் தேடிப்பெற முடிந்தது. அக்காலத்தில் எம் தேவைகள் மிகவும் குறுகியதாக இருந்தன. பல காரணிகளால் அவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இல்லாத ஒன்றுக்காக  நாம் ஒருபோதும் அங்கலாய்க்கவோ வருத்தப்படவோ அடம்பிடிக்கவோ இல்லை. இல்லாமையை இல்லாமையாக நாம் உணரக் கூட இல்லை.  அதை உணர்வதற்கான சந்தர்ப்பத்தை போர்ச்சூழல் எங்களுக்கு வழங்கியிருக்கவில்லை. ஆதலினாலோ என்னவோ எந்தத் துன்பத்தையும் எதிர்கொண்டு விரைவாக அதிலிருந்து மீளும் வல்லமையை எம் சந்ததி இன்றும் கொண்டிருக்கிறது.
 அந்தப் போர்ச்சூழலில் மட்டுமல்ல, பிறகும் கூட எமக்குப் பெரிய நோய் நொடி வந்தது மிகக் குறைவு. பரவிப்பாஞ்சானில் 1992 இல் ஒரு தடவை மலேரியாக் காய்ச்சல் வந்ததைத் தவிர  வேறு ஏதும் காய்ச்சல் வந்து   வைத்தியசாலையில் மருந்தெடுத்ததாக எனக்கு நினைவில்லை.  சாதாரண தடிமனும் காய்ச்சலும் அம்மம்மாவின் கை மருந்துக்குப்  பயந்து அடிக்கடி எட்டிப்பார்ப்பதில்லை.  கண்ட பொழுதெல்லாம் நாம் உண்ட மேற்சொன்ன பழங்கள் கூட நோய் நொடியை இலகுவாக வெற்றிகொள்வதற்கு மறைமுக காரணங்களாக இருந்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது. 

தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா  போன்ற சுதேச மக்கள் வாழும் தேசங்களிலெல்லாம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அதை நிரூபித்திருக்கின்றன. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமும் உலக விவசாய ஸ்தாபனமும் அவ்வாய்வு முடிவுகளை அங்கீகரித்திருக்கின்றன. ஸ்பெயின் உட்படப் பல ஐரோப்பிய நாடுகள் சமூகப்பழத்தோட்டங்களை நகரங்களில் உருவாக்கும் திட்டங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. தமது நகர்ப்புறக் குடிமக்கள் மத்தியில்  கால நிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர் கொள்ளும்  வல்லமையை வளர்த்து உணவுப்பாதுகாப்பை அதிகரிப்பதே  அத்திட்டங்களின் பிரதான நோக்கமாகும். 

ஆனால் எமது நிலைமையோ தலைகீழாக இருக்கிறது.  காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளூம் இலங்கையின் திட்டத்திலே இத்தகைய மருத்துவ குணமிகு பழங்களை ஈனும் தாவரங்களுக்கான முக்கியத்துவம் வழங்கப்படவேயில்லை என்பது வருந்தற்குரியது. ‘இலங்கையில் பட்டினி நிலைமையை எதிர்கொள்ள உதவும் மரங்கள்’ என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்ட அறிஞர் சமூகம் வாழ்ந்த காலம் மாறி அப்படி ஒரு விடயம் இருப்பதைக் கூட உணர மறுக்கும் அறிஞர் சமூகம்  வாழும் காலம் உருவாகி விட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.  உலக விவசாய ஸ்தாபனம் உட்பட சகல தரப்பினரும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்திலே, அதுவும் இலங்கையிலே,  இம்மரங்களின் முக்கியத்துவம் உணரப்படாமையானது தாவரங்கள் மீதான குருட்டுத்தன்மையை அதிகரிப்பதோடல்லாமல், இலங்கையின் அரும்பெரும் சொத்தான வனவளத்தின் பெறுமதியைக் குறைவாக மதிப்பிட வழிவகுத்து விட்டது  என்றே கூறவேண்டும். இது காடழிப்பை நியாயப்படுத்துவதாக அமைந்து விடும் என்பது மட்டும் திண்ணம்.
 
பரவிப்பாஞ்சானை விட்டு நாமெல்லாம் இடம்பெயர்ந்து  ஏறத்தாழ இரண்டரை தசாப்தங்களில் பின்னர்,   கடந்த வருடம் கள ஆய்வுக்காக வன்னியின் கிராமங்களுக்குச் சென்ற போது எம் தற்போதைய  வாழ்வியலையும் நாம் தொலைத்து விட்ட வாழ்வியலையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பல முதியவர்களைச் சந்திக்கக் கிடைத்தது.

“முந்தியெல்லாம் கிளினிக் கொப்பி இருக்கிற ஆக்களை நாங்கள் ஊருக்குள்ள அரிதாய்த்தான் பார்த்திருக்கிறோம். இப்ப காலம்  எல்லாம் மாறிப் போச்சு பிள்ள. கிராமத்தில கிளினிக் கொப்பி இல்லாத வீடுகளை விரல் விட்டுத்தான் எண்ண வேணும்” . இது அந்த தாத்தாமாரின் பொதுவான ஆதங்கம். அந்தக் கூற்றின் பின்னே புதைந்திருக்கும் ஆழ்ந்த கவலையும் வருத்தமும் பலருக்கு விளங்குவதாய்த் தெரியவில்லை. ஏனெனில் ‘கிளினிக் கொப்பி’ யை  கௌரவமாக எண்ணுபவர்கள் ஏராளம்பேர் உருவாகிவிட்டார்கள். கண்ட பழங்களை எல்லாம் உண்டு வயிற்றை நிரப்பும் பண்பாடு இன்றைய சிறுவர் மத்தியில் அருகிக்கொண்டே வருகிறது. நுகர்வுக் கலாசாரத்தின் ஆதிக்கம் கிராமங்களின் பெட்டிக்கடைகளுக்கெல்லாம் ஊடுருவி விட்டது. பொதி செய்யப்பட்ட உணவுக்கு வழங்கப்படும் மதிப்பு காட்டுப்பழங்களுக்கு வழங்கப்படுவதாய்த் தெரியவில்லை. "அது எங்க எடுத்ததோ, என்ன ஊத்தையோ தெரியாது. வாங்காதே!" எனவும் " என்ர பிள்ளைகள் அப்பிள் ஆரஞ்சு, திராட்சையைத் தான் விரும்பிச் சாப்பிடுவினம்" எனப் பெருமையாய்க் கூறிக்கொள்ளும் பெற்றோர் பலரைக் கண்டிருக்கிறேன். வன்னியின் பழக்கடைகளில் சுதேச பழங்களை அரிதாகவே காண முடியும். இவை யாவற்றினதும் மிகப்பிரதான விளைவுகளில் ஒன்றுதான் இலங்கைச் சிறார்களின் போசாக்குக் குறைபாடு. மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைந்தமை ஆகட்டும்...  நிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய முயற்சிக்கின்றமையாகட்டும்.... அவற்றை அடைய இலங்கைக்குப் பெரும் சவாலாக இருந்த, இருக்கின்றவற்றில் சிறுவர்களின் போசாக்குக் குறைபாடும் ஒன்று.
 


தாகத்தைத் தீர்க்கவும்
  பசிக்காமல் இருக்கவும்  துணைபுரியும் பழங்கள்  கூட எம் வன்னிக்காடுகளிலே இன்னமும் காணப்படத்தான்  செய்கின்றன. "ஜாம்" என்ற பெயரில் பதப்படுத்திகள், நிறமூட்டிகள் எல்லாம் பாவித்துத் தயாரித்துப் போத்தலில் அடைத்து கவர்ச்சியாக விற்கப்படும் கலவையை  நுகரப்பழகிய பலர் பாலைப்பாணியையும் உலுவிந்தைப்பாணியையும் இலுப்பைப்பூப் பாணியையும் மறந்தே விட்டார்கள். மன்னார் முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் பாலைப்பாணி என்று ஓர் ஊர் கூட இருக்கிறது.  இத்தகைய மரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. வன்னிக் காடுகளில் இருக்கும் இந்த நூற்றுக்கணக்கான தாவர இனங்கள் உணவுப்பாதுகாப்புக்குத் துணை புரியும் வல்லமை மிக்க பல உப பொருட்களை விளைவிப்பவை. இத்தகைய பல காட்டு மரங்கள் இப்போது காடுகளில் அருகி விட்டன. காடுகள் எல்லாம் வீதிகளுக்கு வழிவிடச்செய்யப்பட்டமையால் சில மரங்கள் இப்போது வீதியோரங்களில் மட்டுமே காணப்படுகின்றன. சில மரங்கள்  காடுகளில் இல்லாமல் வீட்டு வளவுகளில் மாத்திரமே காணப்படுகின்றன.  கிராமங்களில் வாழும் முதியவர்களைத் தவிர வேறு எவருக்கும் இந்த அரிய மருத்துவ குணம் மிகு மரங்களின் பயன் தெரிவதாய் நான் உணரவில்லை.  பல இளஞ்சந்தியினருக்கு அவற்றை அடையாளப்படுத்தக்கூடத்தெரியாது.  இதற்கு நானும் கூட விதிவிலக்கல்ல. இந்த மரங்களின் பயன் தெரியாமல் போக எமது கலாசாரம், வாழ்க்கை முறைகளுக்கும் அம்மரங்களுக்குமான தொடர்பு அறுந்து கொண்டே செல்லும். அத்தொடர்பானது தற்போது  அழிவின் விளிம்பில், நூலிழையில் தொங்கிக்  கொண்டு நிற்கிறது என்று தான் கூற வேண்டும். 70 வயதைத் தாண்டிய அந்த முதியவர்கள் கொண்டிருக்கும் பாரம்பரிய அறிவை அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கொண்டுசெல்லப்போவது யார்? என்ற  வினா எம் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது!
சில மாதங்களுக்கு முன்னர் கள ஆய்விலே சேகரித்த சில சுதேச மரக்கன்றுகளை  நாட்டுவதற்காக என் வளவுக்குக் நான் கொண்டு சென்ற போது முன் வீட்டில் பாதுகாவல் பணியில் இருக்கும் அரச அலுவலர் இடையில் மறித்து சகோதர மொழியில் விளக்கம் வைத்தார். “ உந்தக் காணிக்குள்ள இருந்து  பாம்பு வந்து  எங்கட  நாயைக் கடித்து  நாய் இறந்து விட்டது. நெதர்லாந்தில் இருந்து கொண்டு வந்து 3 மாதம்  கூட ஆகவில்லை. அதனுடைய விலை இலட்சம் தாண்டும். பெரிய மரங்கள் இருக்கிறதால குரங்குகளும் கரைச்சல் தருகுது. ஒருக்கா வந்து எல்லாத்தையும் வெட்டி விடுங்கோ!” கையில் இருந்த மரக்கன்றுகளின் சுமையில் சிறு புன்னகையுடன் மட்டுமே என்னால் அவரைக் கடக்க முடிந்தது.1 comment:

Unknown said...

Saratha, well written. Thank you very much for all the memories you still remember.

Post a Comment